
டினோடெண்டா பூண்டு (Tinotenda pundu) - ஏழே வயதான இந்தச் சிறுவன், வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான காட்டுக்குள், கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் சிக்கிக் கொண்டான். தனது கிராமத்தில் சுற்றிக் கொண்டிருந்த இச்சிறுவன் வழித்தவறி இந்த ஆபத்தான காட்டுக்குள் சென்று விட்டான்.
மட்டுசடோனா தேசிய பூங்கா பல்வேறு வனவிலங்குகளின் இருப்பிடமாகும்.
கர்ஜிக்கும் சிங்கங்கள், யானைகள், வரிக்குதிரைகள், ஹிப்போ போன்ற விலங்குகள் நடமாடும் வனம் இது. ஆப்ரிக்காவிலேயே அதிக அளவில் சிங்கங்கள் வாழும் பகுதியாக இந்த தேசிய பூங்கா அறியப்படுகிறது.
இந்த பூங்கா மிகவும் வறட்சியான பகுதியாகும். வறட்சியை சமாளித்து வாழ கிராமத்தில் கற்றுக் கொடுக்கப்படும் படிப்பினைகளும், காட்டின் வளங்களும் இச்சிறுவன் உயிர் பிழைக்க வழிவகுத்தது. ஐந்து நாட்கள் தனிமையில் அங்கு கிடைத்த Tsvanzva என்ற காட்டுப் பழத்தை தின்றும், வறண்ட ஆற்றின் படுகையில் குச்சிகளை வைத்து தோண்டி நீரருந்தியும் வாழ்ந்து வந்திருக்கிறான் சிறுவன்.
ஜிம்பாப்வேயில் வறட்சி காரணமாக மக்கள் ஆற்றுப்படுகையைத் தோண்டியே நீரருந்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்காவின் அருகே வசிக்கும் நியாமின்யாமி சமூகத்தினரும், தன்னார்வலர்களும், வனத்துறையினரும் இச்சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரேஞ்சர் காரில் காட்டைச் சுற்றி வந்து, சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. சிறுவன் காரின் ஒலியை கேட்டு ஓடிவந்துள்ளான். துரதிர்ஷ்டவசமாக அவன் வந்த நேரத்தில், கார் சென்று விட்டது.
ஆனால் ரேஞ்சர்ஸ், திரும்பி வந்து அந்த வழியில் புதிதாக தோன்றியிருந்த மனித கால் தடங்களை கண்டு, விடாமுயற்சியுடன் சிறுவனைத் தேடிக் கண்டுபிடித்தனர்.
இந்த பூங்கா 1470 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
சிறுவனைக் கண்டெடுத்த போது, அவன் மிகவும் சோர்வாக வரும் நீரிழப்பு ஏற்பட்டும் மோசமான நிலையில் இருந்தான்.
உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட சிறுவன் உடனடியாக உள்ளூர் க்ளீன்க்கில் சேர்க்கப்பட்டு பிறகு பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறுவன் தனியாகக் காட்டில் சிக்கிக் கொண்டது, அவன் மனநிலையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து மனநிலை மருத்துவர்கள் அவனை கண்காணித்து வருகின்றனர்.
இதைப் பற்றி உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. முத்சா முரோம்பெட்ஸி பேசியுள்ளார். ஐந்து வேதனையான நாட்களை இந்த சிறுவன் ஹாக்வே நதிக்கு அருகில் கழித்துள்ளான். சிங்கங்களும் யானைகளும் கடந்து செல்லும் பகுதியில் உயிர்பிழைத்துள்ளான். இப்போது எந்த நேர்க்காணலும் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளார்.
இதனால் சிறுவனின் காட்டு வாழ்க்கையின் அனுபவங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.
இருப்பினும் தனித்து இருந்தபோதும், கிடைத்ததைக் கொண்டு உயிர் வாழ்ந்த இச்சிறுவனுக்கு உலகெங்கிலும் இருந்து பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இச்சிறுவனின் சாகசக் கதை, மனிதன் பிழைத்திருப்பதற்காக எவ்விதமான சூழ்நிலைகளையும், சவால்களையும் சந்திக்க தயாராகிவிடுவான் என்பதற்கு சிறந்த உதாரணம். அவன் பரிபூரண குணமடைந்த பின்னர், அவனுக்கு அவன் நண்பர்களிடம் பள்ளியில் கூறுவதற்கு ஏராளமான கதைகள் இருக்கும். அவனின் இந்த அனுபவம் அவன் வாழ்நாளில் எந்த விதமான சூழ்நிலையிலும் அவனை தன்னம்பிக்கையுடன் வாழவைத்து விடும்.