அரைகுறை ஆடை முதல் 25 ஏக்கர் நிலம் வரை: மகாத்மா முதல் ஃபீல்ட் மார்ஷல் மானக்‌ஷா வரை ஒரு பயணம்!

நம் நாட்டின் வரலாற்றில் மனிதாபிமானத்தைப் போற்றிய மகாத்மா காந்தி மற்றும் ஃபீல்ட் மார்ஷல் மானக்‌ஷாவின் உண்மை கதைகளை வாசியுங்கள்.
மனிதாபிமானம் | Mahatma Gandhi and Field Marshal Manekshaw
மனிதாபிமானம் | Mahatma Gandhi and Field Marshal ManekshawImage credit: SamePassage and Britannica
Updated on
Kalki Strip
Kalki Strip

மனிதத்தை வாழ வைப்பதற்காகப் பலர் தங்களையே வருத்திக் கொண்ட எத்தனையோ கதைகளை நம் நாடு கண்டிருக்கிறது!

பல உயர்ந்த உத்தமர்கள் ஏழைகளையும், எளியோரையும் கண்டு இரக்கப்பட்டுத் தங்கள் வாழ்வியல் முறைகளையே மாற்றிக் கொண்ட சம்பவங்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம்!

மகாத்மா காந்தியின் மனிதாபிமானம்:

1918 ல் குஜராத்தின் கேதா பகுதியில் தொழிலாளர் போராட்டத்தில் கலந்து கொண்ட மகாத்மா, அவர்கள் அரைகுறை ஆடையுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறார்!

நாம் கட்டியிருக்கும் தலைப்பாகையில் நாலு பேர் ஆடையணியலாமே என்று எண்ணிய அவர், அன்றையிலிருந்து தலைப்பாகை அணிவதையே விட்டு விட்டாராம்.

செப்டம்பர் 1921 ல் மதுரைக்கு ரயிலில் வந்த அவர் விவசாயிகள் மற்றும் பாமர மக்கள் இடுப்பில் சுற்றிய அரைகுறை ஆடையுடன் நடமாடுவதைக் கண்டு, வேட்டி, துண்டுக்கு மாறி, இறுதி வரை அதே உடையில்தான் வலம் வந்திருக்கிறார்.

இது இப்படியென்றால், ராணுவத்தில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவரும், அவருக்கு உதவியாளராகப் பணிபுரிந்த மற்றவரும் விடாக்கண்டர், கொடாக் கண்டர்களாக, ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்று உலகத்துக்குக் காட்டிச் சென்றுள்ளார்கள்!

ஃபீல்ட் மார்ஷல் மானக்‌ஷா காட்டிய மனிதாபிமானம்:

அது 1971 ஆம் ஆண்டு! இந்தியா-பாகிஸ்தான் போர் முடிந்து விட்ட நேரம்! ஃபீல்ட் மார்ஷல் சாம் மானக்‌ஷா அவர்களின் ஓய்வு நெருங்கிக் கொண்டிருந்த தருணம்!

அவரின் ஓட்டுனர் இளம் வயது ஷ்யாம் சிங் ஒருவித பதற்றத்துடனும், வருத்தத்துடனும் காணப்படுவதை ஜெனரல் கவனித்து வருகிறார். அவரின் ஓய்வு நாள் நெருங்க, நெருங்க மேலும் அவை கூடி வருவதை உணர்ந்த அவர், ஷ்யாமிடமே கேட்கிறார்: ”என்ன ஷ்யாம்? நீ ஒருவித பதற்றத்திலேயே சில நாட்களாக இருப்பதாகத் தெரிகிறதே? என்ன காரணம்? உங்கள் வீட்டு ஹரியானா எருமை சரியாகப் பால் கொடுப்பதில்லையா?”

இதையும் படியுங்கள்:
விடை கிடைக்காத விபத்துகள்: எம்.ஹெச் 370 விமானம் எங்கே போனது?
மனிதாபிமானம் | Mahatma Gandhi and Field Marshal Manekshaw

“அப்படியெல்லாம் இல்ல சாப்!” என்றதுடன் டிரைவர் அமைதியாகி விட, அவரும் சரி என்று விட்டு விடுகிறார்!

அவரின் ஓய்வு தினம் நெருக்கத்தில் வந்து விட ஷ்யாம் சிங்கே ஒரு நாள் பேசுகிறார்!

“சார்! எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நீங்கள்தான் பூர்த்தி செய்து வைக்க வேண்டும்!”

“அப்படியா ஷ்யாம் சிங்? அதுதான் முன்பே கேட்டேன்! நீதான் ஒன்றுமில்லை என்றாய்! சரி! இப்பொழுதாவது சொல்! நான் என்ன செய்ய வேண்டும் உனக்காக?”

“சார்! நான் நீங்கள் ஓய்வு பெற்றவுடனேயே, ஓய்வில் முன்னதாகவே செல்ல விரும்புகிறேன்! அதற்கான பரிந்துரையை அளித்து நீங்கள்தான் உதவ வேண்டும்.”

ஓய்வுக்குப் பல வருடங்கள் இருக்கும் நிலையில், ராணுவத்தை விட்டுப் போகிறேன் என்று சொல்வதைச் சற்றும் எதிர் பார்க்காத மார்ஷல், ”என்ன ஷ்யாம் இது? உன்னை சுபேதார் ஆக்கப் பரிந்துரைக்கலாம் என்று நான் எண்ணி உள்ளேன்!

நீயோ வீட்டிற்குப் போக உதவு என்கிறாய்! என்ன உனக்குப் பிரச்னை?ஏதாவது நிலத் தகராறா?அல்லது குடும்பப் பிரச்னையா?எதுவாயிருந்தாலும் சொல். நான் தீர்த்து வைக்க முயல்கிறேன்!அதற்காக சர்வீசை விட்டு விட்டுப் போகிறேன் என்று மட்டும் சொல்லாதே!” என்ற ஜெனரலிடம்,

“சார்! சாரி! என் முடிவை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை!அதற்கான காரணத்தையும் இப்பொழுது கேட்காதீர்கள். பணியிலிருந்து விடுபடுகையில் நிச்சயமாகக் காரணத்தைச் சொல்கிறேன்.” டிரைவர் தீர்க்கமாகப் பேசுகிறார்.

அவரின் நேர்மையையும், சுய கௌரவத்தையும் நன்கறிந்த மார்ஷல் அதற்கு மேல் அவரிடம் எதையும் வற்புறுத்த விரும்பவில்லை. அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாகப் பரிந்துரை அளித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. உரிய ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டு விட்டன.

இதையும் படியுங்கள்:
இணையத்தை ஆளும் Genz இளைஞர்களின் புதிய Slang! தெரிஞ்சுக்கலாமா பாஸ்?
மனிதாபிமானம் | Mahatma Gandhi and Field Marshal Manekshaw

“ஷ்யாம்! உன் வேண்டுகோள்படி நீ முன்னதாகவே ஓய்வு பெறப் போகிறாய்! உனக்கு மகிழ்ச்சிதானே? இப்பொழுதாவது அதற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டவரிடம், ஆர்மி அட்டன்ஷனில் மிடுக்காக நின்று சல்யூட் செய்தபடி ஓட்டுனர் சொல்கிறார். ”உங்கள் ஓட்டுனர் என்ற அந்தப் பெருமையோடே நான் வாழ்நாளைக் கழிக்க விரும்புகிறேன்!வேறு ஒருவருக்கு ஓட்ட மனது இடந்தரவில்லை. இந்தப் பெருமையோடே ஓய்வு பெறவே விரும்பினேன்!” என்க, ”அடப் பைத்தியக்காரா? இதற்காகவா ஓய்வு கேட்டாய்? இந்த ஹரியானா மக்களே இப்படித்தான்!பிடிவாதமாகவும், தீர்மானமாகவும் இருப்பீர்கள்! சரி! இனி ஒன்றும் செய்வதற்கில்லை. ஆர்டர்களும் போட்டாயிற்று!

“சரி! இனி வருமானத்திற்கு என்ன செய்வதாக உத்தேசம்?”

“எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன் சார்! ஏதாவது செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்!”

“விவசாயந்தானே செய்யப் போகிறாய்? எவ்வளவு விவசாய நிலம் உனக்கு இருக்கிறது?”

“நிலமா? எனக்கு எதுவும் இல்ல சார்!”

“என்ன? நிலமே இல்லையா?” ஜெனரலே ஒரு நிமிடம் தடுமாறி விடுகிறார்!

ஷ்யாம் ஓய்வு பெறும் நாளில் மானக்‌ஷா அவரிடம் ஒரு கவரைக் கொடுத்து, அதை வீட்டிற்குச் சென்ற பிறகு நிதானமாகப் பிரித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறார்!

ஊருக்கு வந்த ஓட்டுனர் ஏதாவது வேலை தேடிக் கொள்வதில் மும்முரமாகி, ஓடிக் கொண்டிருக்கிறார். யார் யாரையோ பார்த்து விட்டுக் களைத்து வீடு திரும்புகிறார்.

அப்பொழுதுதான் அந்தக் கவரைக் காட்டி அவர் மனைவி சொல்கிறார். ”இன்று உங்கள் ராணுவ யூனி ஃபார்மைப் பெட்டியில் வைக்க எடுத்தபோது இந்தக் கவர் இருந்தது. இது ஜெனரல் கொடுத்ததுதானே?” என்று கேட்கிறார்.

Field Marshal Manekshaw's driver Shyam Singh and his wife
Field Marshal Manekshaw's driver Shyam Singh and his wifeImage credit AI Image

“ஆமாம்! வீட்டிற்குப் போய் சாவகாசமாகப் பிரித்துப் பார் என்றார்!வேலை தேடும் அவசரத்தில் அதனை மறந்தே விட்டேன். பெரிய ஆபீசர்கள் தங்கள் உதவியாளர்களின் பணியைப் பாராட்டி (அப்ரிசியேஷன்) லட்டர் கொடுப்பது வழக்கந்தான். அது போலத்தான் இதுவும் இருக்கும். எதற்கும் காலையில் நம்ம பள்ளிக்கூட ஹெட் மாஸ்டரிடம் காட்டிப் படிக்கச் சொல்லி என்னவென்று கேட்போம்! விடிந்தது!

காலையிலேயே ஷ்யாம் மனைவியுடன் தலைமையாசிரியர் வீட்டுக்கு வந்து விட, அவரும் இருவரையும் வரவேற்றார்!

ஷ்யாம் மனைவியிடமிருந்து கவரை வாங்கிய அவர், மூக்குக் கண்ணாடியை ஒரு முறை நன்கு துடைத்துப் போட்டுக்கொண்டு அதனைப் பிரித்தார்!

கண்களை அதில் ஓட்டிய அவர், ஆச்சரியத்தில் சிலையாக, அவர்கள் இருவரும் "சார்! சார்!" என்று குரல் எழுப்பி, "என்ன சார் அது?" என்றார்கள்.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் சுகாதாரம்: ஏழைகளின் வரமா? கார்ப்பரேட்களின் வேட்டையா?
மனிதாபிமானம் | Mahatma Gandhi and Field Marshal Manekshaw

“என்னவா? இது என்னவென்றே தெரியாமலா இத்தனை நாட்கள் வைத்திருந்தீர்கள்?” என்று கேட்க, ”நீங்கள் தானே படித்துச் சொல்ல வேண்டும்! அதற்காகத்தானே உங்களைத் தேடி காலையிலேயே வந்தோம்!” என்றார்கள்.

“ஷ்யாம்! மார்ஷல் போரில் வெற்றி பெற்றதற்காக அரசு அளித்த 25 ஏக்கர் பரிசு நிலத்தையும் உன் பெயருக்கு முழுமையாக மாற்றி எழுதிக் கொடுத்ததற்கான சான்று இது! அந்த 25 ஏக்கருக்கும் ஏகபோக உரிமையாளன் நீதான்!” என்றார்!

ஓட்டுனரும் அவர் மனைவியும் மானக்‌ஷாவின் இருப்பிடம் உள்ள திசையை நோக்கிச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்!

இந்தப் புனித மண்தான் எத்தனை புத்தர்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது?!

logo
Kalki Online
kalkionline.com