தியேட்டர்களில் படம் ஆரம்பிக்க 22 நிமிடம் தாமதம்... ரசிகர் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன் அதிக நேரம் விளம்பரங்கள் காட்டியதால் ரசிகர் வழக்கு தொடர்ந்து பெற்ற அதிரடி நிவாரணம் பற்றிய விவரங்கள்
தியேட்டர் | Theatre Delay Fine
தியேட்டர் | Theatre Delay FineImage credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் நடக்கும் விளம்பரக் கூத்துகளால் கோபமடைந்த ரசிகர் ஒருவர், நீதிமன்றம் மூலம் திரையரங்கிற்கு ₹75,000 அபராதம் பெற்றுத் தந்துள்ளார்! விளம்பரத் தாமதம், பாப்கார்ன் மற்றும் பார்க்கிங் கொள்ளை என மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களின் இன்றைய வணிக அத்துமீறல்களுக்கு எதிராக நம்மைக் கேள்வி கேட்கத் தூண்டும் ஒரு அதிரடிப் பார்வை. பொழுதுபோக்குப் புகலிடங்களாக இருக்க வேண்டிய தியேட்டர்கள் எப்படிப் பணத்தைப் பறிக்கும் இடங்களாக மாறின? விரிவாக அறிய தொடர்ந்து படியுங்கள்!

அது ஹைதராபாத் நகரின் மூன்றெழுத்துத் தியேட்டர். ஓடியதும் மூன்றெழுத்துப் படந்தான். படத்தின் நாயகரும் மூன்றெழுத்துக் கதாநாயகர்தான். அந்த 33 வயது ரசிகர், நண்பருக்கும் சேர்த்து 2 டிக்கட்டுகளை அன்றைய இரவு ஷோவுக்கு ரிசர்வ் செய்திருந்தார்.10.35 மணி ஷோவுக்குப் பத்தரை மணிக்கே இருவரும் திரையரங்குக்கு வந்து விட்டனர். திரையரங்கும் குறிப்பிட்ட நேரத்தில் திரையிடலை ஆரம்பித்து விட்டது. ஆனால் திரைப்படத்தைத் திரையிடவில்லை.

மாறாக, சுமார் 17 நிமிட நேரத்திற்குப் பல விளம்பரப் படங்களையும், 5 நிமிட காலத்திற்கு வேறு திரைப்படங்களின் முன்னோட்டங்களையும் திரையிட்டு, 22 நிமிடங்களைப் போக்கிய பிறகே மெயின் பிக்சருக்கு வந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, அந்த ரசிகருக்குத் திட்டமிட்டபடி வீடு செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. திட்டமிட்ட பணிகளில், ‘டிலே’ காரணமாகத் தடங்கலும் ஏற்பட்டிருக்கிறது. அதனைக் காரணமாகக் காட்டி அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். வழக்கினை விசாரித்த நுகர்வோர் கோர்ட், வணிக விளம்பரங்களை அதிக நேரம் போடுவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், 22 நிமிடங்கள் என்பது மிக அதிக நேரம் என்றும், தியேட்டர்காரர்கள் தங்கள் வருமானத்திற்காக ரசிகர்களை வதைப்பதை ஏற்க முடியாதென்றும் கூறியதுடன், அந்தத் திரையரங்கு அபராதமாக அந்த ரசிகருக்கு, அவர் மன உளைச்சலை ஈடு செய்யும் விதமாக ரூ 20,000/-மும், வழக்குச் செலவிற்காக ரூ5000/-மும் செலுத்த ஆணையிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நேத்து நைட் சரியா தூங்கலையா?அடுத்த நாளை டயர்ட் இல்லாம ஓட்ட 5 எளிய வழிகள்!
தியேட்டர் | Theatre Delay Fine

மேலும் இதுபோன்ற தவறுகள் மேலும் நிகழாவண்ணம் தடுக்கும் விதமாக, மாவட்ட நுகர்வோர் நல நிதிக்கு ரூ 50,000/- செலுத்தவும் உத்தரவு போட்டுள்ளது. மொத்தத்தில் திரையரங்கு ₹ 75,000/- செலுத்த வேண்டியுள்ளது.

நம்மிடம் உள்ள மிகப் பெருங் குறையே, நாம் நுகரும் எதிலும் குறைபாடுகள் இருந்தால் அதனைச் சகித்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் போய் விடுவதுதான்.

அரசாங்கம் நமக்குக் கொடுத்துள்ள பாதுகாப்பு முறைகளைக்கூட நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. அறியாமை முதற் காரணம் என்றால், அறிந்தவர்களும் நேரமின்மை காரணமாகவோ, எதற்கு வம்பு என்றோ, ஒருவேளை எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்வோமோ என்ற பயத்திலோ ஒதுங்கிப் போய் விடுகிறோம். இதன் காரணமாக, அரசாங்கத்தின் பல மக்கள் நல அமைப்புகள், ஆரம்பித்து நடத்தப்படுவதன் முழுப் பயனையும் எய்துவதில்லை.

தியேட்டர் | theatre Delay Fine
தியேட்டர் | theatre Delay FineImage credit: Gemini AI

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஸ்க்ரீன்-1, 2, 3 என்று பல தியேட்டர்கள் இப்பொழுது இயங்கி வருகின்றன. டிக்கட்டோ ₹150/- முதல் ₹500/- வரை வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது. அடிப்படைக் கட்டணம் ₹150/- என்ற நிலையில், கூடுதல் வசதிகளுக்கேற்றவாறு கட்டணங்கள் மாறுபடுகின்றன. சாய்வு இருக்கைகள் (Recliner Seats) என்றால் ₹ 500/- வரை ஆகிறதாம்! மால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கும், தனி மல்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கும் இடையே வித்தியாசமும் உண்டு.

அடுத்த பணம் விழுங்கி, பார்க்கிங் கட்டணம். மணிக்கு ₹80 ல் ஆரம்பித்து ₹100 வரை என்று நிர்ணயிக்கப்பட்ட மால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 3 மணி நேர சினிமாவிற்கு ரூ 250/- செலுத்த வேண்டியுள்ளது.

சில தனியான மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் ஷோவுக்கு ₹20/- முதல் 40 வரை வசூலிக்கின்றனவாம்!

அடுத்த கொள்ளை பாப்கார்ன் வியாபாரத்தில்! வெளியில் ₹10 லிருந்து ₹10 ரூபாய்க்குக் கிடைக்கும் சோளப் பொரி, ஏ.சி தியேட்டருக்குள் சென்றவுடன் ₹300/- லிருந்து ₹800/- வரை.’ரெகுலர் சால்ட்’ என்றால் ₹340/- வரை. லார்ஜ் என்றால் ₹500/- வரை. சீஸ், காரமல், மிக்சட் ப்ளேவரில் என்றால் ₹800/- வரை!

சோளப் பொரிக்கும், ஸ்னாக்சுக்கும் அதிக விலை நிர்ணயிக்கத் தியேட்டர்க் காரர்கள் சொல்லும் காரணங்கள் இவைதான்.

  • டிக்கட் கட்டணத்தில் 60-70% டிஸ்ட்ரிபியூடர்களுக்கே சென்று விடுகிறதாம். எனவே இதில் அதனை ஈடு கட்டுகிறார்களாம்.

  • நவீன சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஏசி போன்றவற்றின் பராமரிப்புச் செலவு அதிகமாம்.

எனவே அதிக விலையாம்.

எங்கே இந்த அசகாய விலை உயர்வை நாம் தவிர்த்து விடுவோமே என்ற பயத்திலேயே, தியேட்டர்களுக்குள் வெளி உணவுகளை எடுத்துச் செல்லக் கூடாதென்று கூறி, நம்மையும், நாம் கொண்டு செல்லும் பைகளையும் ஸ்கேன் செய்த பிறகே நம்மை உள்ளே அனுமதிக்கிறார்கள்.

நுகர்வோர் நீதி மன்றங்கள் தாமாகவே முன்வந்து (Suo motu) இந்த அதி கட்டணங்களைக் கட்டுப்படுத்தினால்தான் உண்டு.

நான்கு பேர் கொண்ட ஒரு சாதாரண குடும்பஸ்தர், ஒரு மால் மல்டி பிளக்ஸ் தியேட்டருக்குச் சென்றால் ஆகும் செலவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் அரசு ஸ்காலர்ஷிப் வாங்குவது எப்படி? பலரும் அறியாத சீக்ரெட் ரூல்ஸ்!
தியேட்டர் | Theatre Delay Fine

பொழுது போக்குமிடங்கள்தானே தியேட்டர்கள். பர்சை முழுதாகக் காலி செய்யும் இடங்களாக அல்லவா அவை மாறி இருக்கின்றன!

இந்த நேரத்தில், 60 கிட்ஸ்களாகிய நாங்கள் 65 பைசா டிக்கட்டில் பேக் பெஞ்சில் அமர்ந்து, சாய்ந்தபடி படம் பார்த்த சந்தோஷ நாட்கள் ஞாபகத்தை நிறைக்கின்றன. சைக்கிளுக்குப் பார்க்கிங் சார்ஜ் 10 பைசாதான்! சிசர்ஸ், சார்மினார் சிகரட் பாக்கட் அட்டைகள்தான் டோக்கன்கள். ம்! அவையெல்லாமே ஆனந்த நாட்கள்தான்!

தியேட்டர்களின் வணிக நோக்கத்திலான காலதாமதங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் சட்டப்பூர்வ விழிப்புணர்வைப் பெற்று, உங்கள் நேரத்தையும் பணத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com