

ஏசி அறைகள், மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் இந்த நவீன காலத்தில், தென்னங்கீற்றுக் கொட்டகைகளும் மணல் தரை டிக்கெட்டுகளும் ஒரு காலத்தில் கிராமங்களை எப்படித் திருவிழாக்கோலமாக்கின தெரியுமா? புரொஜெக்டரின் கடகட சத்தம், கோலி சோடா, இடைவேளையில் காகிதப் பொட்டலுக் கடலை மிட்டாய் என அன்றைய கிராமத்து சினிமா கொண்டாட்டங்களின் மிரட்டலான பசுமை நினைவுகள் இதோ உங்களைச் சுண்டி இழுக்கக் காத்திருக்கின்றன!
உங்களுக்கு தாத்தா பாட்டியுடன் சென்று மணல் தரையில் அமர்ந்து சினிமா பார்த்த அனுபவம் இருக்கிறதா? நீங்கள் 60-70 ஆண்டுகள் அல்லது அதற்கு முன் பிறந்திருந்தால் இனிய அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும்.
இன்று வீட்டில் இருந்தபடியே மொபைலில் திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், தென்னங்கீற்றுக் கொட்டகை, மணல் தரை, மர பெஞ்சுகள், புரொஜெக்டரின் கடகட சத்தம், இடைவேளையில் வாங்கிச் சாப்பிட்ட கடலை உருண்டை, கைமுறுக்கு என அந்தக் காலத்து சினிமா அனுபவத்துக்கு ஈடு இணை கிடையாது.
இன்று ஏசி வசதியுடன் கூடிய திரையரங்குகள், சொகுசு இருக்கைகள், பிரம்மாண்டமான திரைகள் என சினிமா அனுபவம் நவீனமாகிவிட்டது. ஆனால், டூரிங் டாக்கீஸ் காலத்தில் சினிமா பார்ப்பது என்பதே ஒரு திருவிழாவாக இருந்தது.
டூரிங் என்றால் பயணம் செய்வது. டாக்கீஸ் என்றால் பேசும் திரைப்படம் என்ற பொருளில் ஊர் ஊராகச் சென்று தற்காலிகக் கொட்டகைகள் அமைத்து திரைப்படங்களைத் திரையிட்டதால் டூரிங் டாக்கீஸ் என்ற பெயர் வந்துள்ளது. அந்தக் காலத்தில் எல்லா கிராமங்களிலும் நிரந்தரத் திரையரங்குகள் கிடையாது.
எனவே சினிமா புரொஜெக்டர், திரை, ஒலிபெருக்கி ஆகியவற்றுடன் ஒரு குழுவினர் கிராமங்களுக்குச் சென்று திரைப்படங்களைத் திரையிடுவார்கள் என்றும் தமிழகத்தில் இந்த டூரிங் டாக்கீஸ் கலாச்சாரத்தின் முன்னோடிகளில் ஒருவர் சாமிக்கண்ணு வின்சென்ட் என்றும் குறிப்புகள் உள்ளன.
மணல் தரையில் அமர்ந்து பார்த்த திரைப்படங்கள், மழை பெய்தாலும் கொட்டகைக்குள் நனைந்தபடி ரசித்த காட்சிகள், திரையில் பிடித்த நடிகர் தோன்றியதும் எழுந்த விசில் சத்தங்கள் என டூரிங் டாக்கீஸ் காலம் எங்கள் தலைமுறையின் அழியாத நினைவுப் பெட்டகம்.
பெரும்பாலும் தென்னங்கீற்றுகள், தகரத் தகடுகள் போன்றவற்றால் கூரை அமைக்கப்பட்டிருக்கும் டூரிங் டாக்கீஸ்களின் அமைப்பே தனித்துவமானது.. உள்ளே நான்கு வகையான இருக்கை வசதிகள் இருக்கும். திரைக்கு முன்னால் மணல் பரப்பப்பட்டிருக்கும்.
அதில் அமர்ந்து படம் பார்ப்பது தரை டிக்கெட் என்றும் நீண்ட பெஞ்சுகளில் அமர்ந்து பார்ப்பது பெஞ்ச் டிக்கெட், சற்று வசதியான இருக்கை அமைப்புகள் பேக் பெஞ்ச் ஆகவும் பணக்காரர்கள் நாற்காலிகளில் அமர்ந்து படம் பார்ப்பது சேர் டிக்கெட் என்றும் வகைப்பாடு இருந்தது.
குறிப்பாகத் தரை டிக்கெட் வாங்குபவர்கள் மணலைக் குவித்து சிறிய மேடு உருவாக்கி அமர்வதும் உண்டு.
முன்னால் இருப்பவர் உயரமாக இருந்தால் படம் தெரியாது. உடனே கொஞ்சம் நகர்ந்து உட்கார வேண்டியதுதான். இதை முன்னிட்டு நடக்கும் சண்டைகள் தனி சுகம். குழந்தைகள் மணலில் விளையாடியபடியே படம் பார்ப்பார்கள்.
சிலர் வீட்டிலிருந்தே பழைய துணியையோ சாக்கையையோ எடுத்துச் சென்று விரித்துக்கொள்வார்கள்.
டூரிங் டாக்கீஸில் படம் பார்க்க வேண்டும் என்றால் மாலையிலேயே வீட்டில் பேச்சு ஆரம்பித்துவிடும். சில ஊர்களில் திரைப்படம் திரையிடப்படும் நாளை ஊர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பார்கள்.
திரைப்படத்தின் பெயர், கதாநாயகன், காட்சிநேரம் என அறிவிப்பு வந்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
"இன்னைக்கு என்ன படம் போடுறாங்க?", "எத்தனை மணிக் காட்சி?", "யாரெல்லாம் வர்றீங்க?" என்று நண்பர்களும் உறவினர்களும் திட்டமிடுவார்கள். சைக்கிளில் நண்பர்களுடன் செல்வது, குடும்பத்துடன் நடந்து செல்வது அல்லது குதிரை வண்டி பயணம் எனப் பயணமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
படம் தொடங்குவதற்கு முன்பு திரையில் விளம்பர ஸ்லைடுகள் காண்பிக்கப்படும்.
உள்ளூர்க் கடைகள், நகைக்கடைகள், துணிக்கடைகள், சைக்கிள் கடைகள் எனப் பலவற்றின் விளம்பரங்கள் திரையில் தோன்றும். படம் தொடங்குவதற்கு முன்பு புரொஜெக்டரிலிருந்து வரும் வெளிச்சம் பின்னால் இருந்து திரையில் விழுவதைப் பார்த்து சிறுவர்கள் ஆவென்று வாய் பிளந்து ஆச்சரியப்படுவார்கள்.
சில நேரங்களில் திரைப்படச் சுருள் மாற்றும்போது படம் தடைபடும். திரையில் படம் நின்றுவிடும். உடனே பார்வையாளர்களிடமிருந்து விசில், கூச்சல், கிண்டல் எனக் கொட்டகையே கலகலக்கும். படம் வந்ததும் ஆர்ப்பரித்து கூட்டம் அமைதியாகி விடும்.
டூரிங் டாக்கீஸ் நினைவுகளில் மறக்க முடியாதது என்றால் இடைவேளை உணவுகள்தான்.
அந்தக் காலத்தில் பப்ஸ் பாப்கார்ன் ரகங்கள் கிடையாது. சிறிய கடைகளிலும் தற்காலிகத் தள்ளுவண்டிகளிலும் விற்கப்படும் தின்பண்டங்களான, வீட்டில் தயாரித்த முறுக்கு, சத்து நிறைந்த கடலை மிட்டாய் காகிதப் பொட்டலத்தில் கிடைக்கும் மலிவான, சுவையான வறுத்த கடலை, பொட்டுக்கடலை, நீண்ட நேரம் வாயில் போட்டுச் சுவைத்துக்கொண்டே படம் பார்க்க ஏற்ற கமர்கட்டு, தாகம் தீர்க்க கோலி சோடா பானம்.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறங்களில் சிறுவர் விரும்பும் குச்சி ஐஸ் இவற்றுடன் பெரியவர்களுக்கான தேநீர் என இடைவேளை அமர்க்களம் தான். அப்பா தரும் 5 பைசா 10 பைசாவை கையில் இருந்த காசைச் சேமித்து வைத்து இடைவேளையில் பிடித்த தின்பண்டத்தை வாங்கிச் சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சியே இருந்தது.
அந்தக் காலத்தில் எம். ஜி. ஆர், சிவாஜி ரசிகர்களுக்கு டூரிங் டாக்கீஸ் ஒரு கொண்டாட்ட மேடை. எம். ஜி. ஆர் திரையில் தோன்றினால் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும். சிவாஜி கணேசனின் உணர்ச்சிகரமான வசனங்களுக்கு கைதட்டல்கள் அரங்கையே அதிர வைக்கும்.
கதாநாயகன் சண்டையிடும் காட்சிகளில் ரசிகர்கள் உற்சாகமாகக் கத்துவார்கள். பாடல்கள் வரும்போது சிலர் கூடவே பாடி ஆடுவார்கள். பிடித்த படம் என்றால் சிலர் ஒரே திரைப்படத்துக்குப் பலமுறை செல்வார்கள்.
டூரிங் டாக்கீஸின் சுவாரஸ்யமே படம் பார்க்கும்போதே நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள்தான். யாரோ ஒருவர் முன்னால் எழுந்து நின்றால் பின்னால் இருப்பவர்கள் சத்தம் போடுவார்கள்.
குழந்தைகள் அழுதால் சிலர் எரிச்சலடைவார்கள். சிலர் படம் பார்க்கும்போதே கதையைப் பற்றி விவாதிப்பார்கள். சில நேரங்களில் ரசிகர்களுக்குள் நடிகர்களைப் பற்றிய வாக்குவாதமும் ஏற்படும். ஆனால், படம் முடிந்ததும் அனைவரும் ஒன்றாக வெளியேறுவார்கள். மறுநாள் ஊருக்குள் அந்தப் படத்தைப் பற்றிய விவாதம் தொடருவது தனிக்கதை.
மழைக்காலம் என்றால் பேரானந்தம். ஆம் ஒழுகும் கீற்றுக் கொட்டகைகளில் மழைக்கால அனுபவம் தனி ரகம்.
பலத்த மழை பெய்தால் கொட்டகைக்குள் ஆங்காங்கே தண்ணீர் சொட்டும் என்பதால் சிலர் இடம் மாறி அமர்வார்கள். சில நேரங்களில் மின்சாரம் தடைபட்டு படம் நின்றுவிடும். மழை நின்றதும் மீண்டும் படம் தொடங்கும் என்ற நம்பிக்கையில் பார்வையாளர்கள் காத்திருப்பார்கள்.சில நேரங்களில் படம் பாதியில் நின்றுவிட்டாலும் அடுத்த காட்சிக்கு வந்து மீதிப் படத்தைப் பார்ப்பார்கள்.
இரவு காட்சி முடிந்து வெளியே வரும்போது ஊரே அமைதியாக இருக்கும். ஆனால், படம் பார்த்தவர்களின் மனதில் கதையின் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும். வீடு திரும்பும்போது நண்பர்களுடன் படத்தின் கதையைப் பற்றிப் பேசுவது, பிடித்த பாடலைப் பாடுவது, கதாநாயகனின் வசனத்தைப் போலவே பேசி மகிழ்வது எனத் திரைப்படத்தின் தாக்கம் தொடரும்.
சிலர் மறுநாள் பள்ளியில் நண்பர்களிடம் கதையை விவரிப்பார்கள். சிலர் படத்தில் பார்த்த சண்டைக் காட்சிகளை விளையாட்டில் நடித்துக் காட்டுவார்கள்.
இப்படித்தான் ஒரு திரைப்படம் அந்த ஊர் மக்களின் பொதுவான நினைவாக மாறியது.
இன்று தொலைக்காட்சி, வீடியோ கேசட், டிவிடி, மல்டிபிளக்ஸ், ஓடிடி எனத் தொழில்நுட்ப வளர்ச்சியால் சினிமா பார்க்கும் முறை மாறி பாதுகாப்பு விதிமுறைகள், பொருளாதாரச் சிக்கல்கள், நிரந்தரத் திரையரங்குகளின் வளர்ச்சி போன்ற காரணங்களால் பழைய டூரிங் டாக்கீஸ்கள் பலவும் மறைந்துவிட்டன.
ஆனால், அந்த மணல் தரையில் அமர்ந்து பார்த்த திரைப்படங்களையும், இடைவேளையில் சாப்பிட்ட கடலை மிட்டாயையும், நண்பர்களுடன் பகிர்ந்த சிரிப்பையும் யாராலும் மறக்க முடியாது.
டால்பி ஒலியும் ஏசி வசதியும் இல்லாத அந்தக் கொட்டகைகளில் கிடைத்த மகிழ்ச்சியை, இன்றைய நவீன திரையரங்குகளாலும் முழுமையாகத் திரும்பக் கொண்டுவர முடியாது. அந்தக் கொட்டகைகள் மறைந்திருக்கலாம். ஆனால், அவற்றில் உருவான சினிமா மீதான காதல் மட்டும் இன்னும் மறையவில்லை.
அன்று சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது குடும்பத்தையும் நண்பர்களையும் ஊரையும் ஒன்றாக இணைத்த ஒரு கொண்டாட்டம். இந்த விஷயங்கள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அன்றைய மக்களுக்கு சினிமா என்றால் இதெல்லாம் சுகமான என்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.