

காலம் ஒரு இரக்கமில்லா Schwarzenegger அதாவது ERASER! காலம் எதைத்தான் மிச்சம் வைத்தது? நினைவுகளைத் தட்டியெழுப்பும் இந்த உணர்வுபூர்வமான பயணத்தைத் தொடர்ந்து வாசியுங்கள்!
அந்த நாள் முதல் இந்த நாள் வரை எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு அமையவில்லை. வருடம் 1980 என்று நினைக்கிறேன். "ஒண்டி குடித்தனத்தில் வாழ்ந்து அலுத்து போயிடுது டா. புற நகரில் வாடகை கம்மிதான் அங்கெ எங்கயாவது பெரிய விசாலமான வீட்டை பார்த்து போய்விடலாமா" அம்மா புலம்பினார்.
நாங்களும் அப்படி ஒரு வீட்டை வளசரவாக்கத்தில் பார்த்து ஏற்பாடு செய்து குடியும் போய்விட்டோம். என்ன ஒரு பெரிய வீடு அது. மாடி முழுதும் எங்களது தான் தரை தளத்தில் வீட்டுக்காரர் தங்கியிருந்தார். குருவி கூட்டில் வாசம் செய்த எங்களுக்கு கவர்னர் மாளிகைக்கு குடி வந்தது போல இருந்தது. மின் விசிறி வேண்டாம் விளக்குகள் பகலில் போடா வேண்டாம். அப்படி ஒரு காற்று அப்படி ஒரு வெளிச்சம்.. வீட்டின் எதிரே ஒரு சிறிய மழலையர் பள்ளி கூடம். அதற்கு பக்கத்தில் ஒரு பீச் அம்பரெல்லா போன்ற ஒரு மரம்.
அந்த நிழலில் ஆடுகள் வெய்யிலுக்கு கூட்டமாய் ஒதுங்கும். மொத்தத்தில் ஒரு பூலோக சொர்க்கம். வேலைக்கு போகவே வராது எனக்கு மனம். இதெல்லாம் இருக்கட்டும் இந்த கட்டுரையின் கதாநாயகிக்கு வருவோம்.
அவள் வேறு யாருமில்லை எங்கள் வீட்டின் பால்கனியை ஒட்டி நின்று பழங்களை கொட்டி கொடுத்த ஒரு பொய்யா கொய்யா மரம். அதன் நிழலில் மூங்கில் சேரில் விடுமுறை நாட்களில் அமர்ந்து ஆண்டர்சன் புத்தகத்தை பிரித்து படிக்கும் அனுபவமே தனி.
நான் புத்தகம் படித்து கொண்டிருப்பேன். என் தலைக்கு மேல் இருக்கும் கிளையில் அமர்ந்து பழத்தை கொறித்து கொண்டிருப்பான் ஒரு அணில். சில நேரங்களில் என் தலையில் அரை குறையாக கடித்த பழத்தை இந்தா சாப்பிடு என்று சொல்லுவது போல போடுவான்.
வயிறு முட்ட கனிகளை சாப்பிட்டு விட்டு மூக்குகளை ஒன்றோடொன்று உரசியவாறு கொஞ்சுவார்கள் கிளிகள். ஒவ்வொருநாளும் சீசன் சமயங்களில் பழ மழையையே பொழிந்து விடுவாள் கொய்யா. என்ன செய்வது என்று தெரியாமல் அவைகளை பையில் நிரப்பி நான் தினமும் போகும் பஸ் டிரைவர்களுக்கும் காண்டக்ட்டர்களுக்கும் கொண்டு பொய் கொடுப்பேன்.
இதனால் நான் எங்கு கை காட்டினாலும் பஸ் நின்று ஏற்றி கொள்ளும். இந்த ரம்யமான வாழ்க்கையும் ஒருநாள் முடிந்து போகும் என்று நான் நினைக்கவே இல்லை.
வீட்டுக்காரர் சொன்னார் ஒரு நாள் திடீரென்று "என் மகனுக்கு திருமணம் நடக்க போகிறது. மாடியில் தான் இருக்க போகிறான். நீங்கள் காலி செய்து விடுங்கள்". எங்களுக்கு பிறவி குருடன் பார்வை பெற்று இழந்தது போலாகி விட்டது. பழைய குருடி கதவை திறடி என்று நகருக்குள்ளேயே குடி பெயர்ந்து விட்டோம். நாங்கள் அந்த வீட்டை காலி செய்த அந்த நாள் ஒரு சோகமான நாள்.
எல்லா சாமான்களையும் வண்டியில் ஏற்றி ஆகி விட்டது. ஒரு நிமிடம் ப்ளீஸ் என்று டிரைவரிடம் சொல்லி கொய்யா மரத்தடியில் போய் நின்றேன் யாரும் பார்க்க வில்லை என்று உறுதி செய்து கொண்டு அதற்கு ஒரு parting kiss கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் விறு விறுவென்று சென்று லாரியில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
இப்போது இன்று 45 வருடங்களுக்கு பிறகு நாங்கள் இருந்த இடத்தை அங்கு இருந்த கொய்யா மரத்தை பார்க்க போனேன். கொய்யா மரமென்ன அந்த வீடே இல்லை. காலம் ஒரு இரக்கமில்லா Schwarzenegger அதாவது ERASER.
கடந்த காலத்தின் பசுமையான நினைவுகளுடன் உங்களை இணைத்து, சென்னை நகர மாற்றத்தின் எதார்த்தத்தை உணர்ந்து மனதை இலகுவாக்கிக் கொள்ள உதவும் ஒரு அச்சு அசலான பயணம்.