

அந்த ரயில்வே கிராசிங்க் கேட் தாண்டி, ஒதுக்குப்புறமான இடத்தில், கேட்கீப்பர் வேலை பார்த்த கீர்த்தனா தற்கொலை செய்துகொள்ள முடிவுவெடுத்து ஓடிக்கொண்டிருந்தாள்.
காதலில், அவள் காதல் வித்யாசமானது. அவள் வேலை பார்க்கும் ரயில்வே கிராசிங்க், ஒரு மெமு ரயில் அடிக்கடி பயணிக்கும் ஒரு செமி அர்பன் ஏரியா. ஒருமுறை யாருக்கோ அவள் போன் பண்ண அது, அந்த மெமூ ரயில் ஓட்டும் ராகவ் செல்லை சிக்க வைத்தது. கிராசிங்கில் கேட்டு போட்டு இறக்கும் கேட்கீப்பர் கீர்த்தாவுடன் காதல் வயப்பட்டான் ராகவ் எனும் ரயிலோட்டி!
கடலோடிகளுக்குத்தான் காதல் வரவேணுமா? ரயிலோடிகளுக்கு வரக்கூடாதா என்ன?!
எப்போதாவது கிராஸிங்கில் கேட் போடப்படும்போது இருவரும் பேசிக் கொள்வார்கள். அது காதலாய் மாறி மலர்ந்தது. அது காய்க்கும் முன் என்னவோ ஆகி, இருவருக்கும் இடையே ஒரு பிணக்கு..!
காதல் என்றாலே கணக்குப் பண்ணுவது. ஆனால், காதல் அடிக்கடி பிணக்குப் பண்ணுவதுதான் பெரும் பிரச்னை! அது, பலபேர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.
அவனை இழக்க மனமில்லாத கீர்த்தனா, அதே மெமூ ரயிலில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தாள்! இவர்கள் இருவருவருக்கிடையேயான காதல் விவகாரம் அந்த ஏரியா கேங்க்மேனாகப் பணியாற்றும் கிருபாகரனுக்குத் தெரியும்.
ரயிலில் விழப்போனவளை ஓடிச் சென்று தடுத்தான். பிறகு சொன்னான்... “இத பாரு கீர்த்தனா… உங்களுக்குள்ள என்ன பிரச்னைனு எனக்குத் தெரியலை. ஆனா ஒண்ணு, இவன் ஒருத்தன்தான் உலகம்னு நினைக்காதே.! இப்போ நான் தண்டவாளங்களில் ‘லிங்க் கப்ளிங்கைத் தட்டித் தட்டி சரிபண்ணீட்டே வரேன். சில இடங்களில் அது தகராறு செய்தால், அதை பிடுங்கீட்டு வேற கப்லிங்க் போடுவேன். அது மாதிரிதான் வாழ்க்கையும். ஒன்றுக்கு நீ ‘குட்பை’ சொல்லிக் கழற்றிவிட, நீ தன்னம்பிக்கை உள்ளவளாயிருந்தால், வாழ்க்கை உனக்கு அடுத்து ஹலோ சொல்லி ஆயிரமாயிரம் பேரை அனுப்பீட்டே இருக்கும்! வாய்ப்பும் அப்படித்தான். ஒரு வாய்ப்பை இழந்துட்டா, கலங்கக் கூடாது! அதுக்கு குட்பை சொல்லி, அடுத்து முயற்சி செய்தால் ஆயிரம் ஹலோக்கள் அணிவகுத்து வரும்!" என்று சொல்ல, கொஞ்சம் தெம்பாகி முடிவை மாற்றிக் கொண்டு, தன்னம்பிக்கையோடு தளர்ச்சி நீங்கித் திரும்பினாள் கிருபாகரன் கிருபையில் கீர்த்தனா!
அவன் கொஞ்சம் வித்யாசமான பேர்வழி. வறுமை வாட்ட கடவுளைச் சந்திக்க முடிவெடுத்தான். கடவுளை எங்கே சென்று பார்ப்பது? யோசித்தான். ‘கோவிலில் தானே இருக்கிறான் கடவுள்?’ என்று நினைத்துக் கோவிலுக்குப் போக முடிவெடுத்தான்.
கோவில் வாசலில் அதிகாலையிலேயே சென்று காத்திருந்தான். குருக்கள் வந்தார். அவர் கோவிலைத் திறக்க..
உள்ளே ஓடிப்போய் விக்ரஹத்தின் முன் நெடுஞ்சான் கிடையாக விழுந்தான். விழுந்தவன் எழுந்தான். எழுந்து, பதறினான்.
"பகவானே கருணைக்கடலே… ‘கண்ணைத் தொறக்கணும் சாமி!’ பாவி நான் வறுமையால் துடிப்பது உன் கண்களில் படவில்லையா?
குசேலனுக்கு உதவினாய்..!
மாபலிக்கு உதவினாய்!
கர்ணனுக்குக்கூட காட்சி தந்தாய்.
ஏன் கொடுங்கோலன் துரியோதனனுக்குக்கூட விஸ்வரூபம் காட்டினாய்.
தூணிலிருந்து புறப்பட்டு பிரகலாதனுக்காகப் புறப்பட்டு வந்து, நீ இருப்பதைப் பிரகடனப்படுத்தினாய்.
பாவியேன் வறுமையால் வாடுவது யார் செய்த தப்பு? பிறந்த என் தவறா? பிறபித்த உன் தவறா?"
அழாக்குறையாக முறையிட, ஆண்டவன் அவனுக்கு உதவ முன் வந்தான். அவன் கண்முன் தோன்றி…
“பக்தா.. உன் வறுமையை நீக்க இப்போதே சம்மதம்! நீ பட்டியலிட்ட எல்லாரும் என்னை உணர்ந்தவர்கள். எனக்காக எதையாவது தந்தவர்கள். நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்?!குசேலன் கூட பிடி அவல் கொடுத்தான். கர்ணன் புண்ணியம் தந்தான். மாபலி மண் தந்தான்! நீ என்ன தரப்போகிறாய் எனக்கு?" என்றார் பகவான்.
அதைக் கேட்டதும் அலறினான் பக்தன்.
"ஆண்டவனே… பகவானே நான் செய்த பாவமெல்லாம் மூட்டை கட்டி உனக்குக் காணிக்கையாக்க விரைந்து வந்தேன். உன்னைக் கண்ட மாத்திரத்தில் பாவ மூட்டைகூட கண்ணைவிட்டு மறைந்துவிட்டதே? என்ன தர என்னால் முடியும்?" என்றான் சாமர்த்தியமாக!.
பகவான் சிரித்துக் கொண்டே…
"என்னைப் பார்த்ததும் உன் பாவ மூட்டை பறந்து மறைந்ததென்றால் உன் வறுமை மறையாதோ?" என்று கேட்டுவிட்டு மாறைந்தான் கடவுள்.