

ஒரு சினிமா அல்லது கதைக்கு முதுகெலும்பே அவன் தான். அவன் இல்லாவிடில் கதையில் உப்பு சப்பு இருக்காது. சுவாரஸ்யம் இருக்காது. உண்மையில் அவனைப் போற்றவே செய்யணும்.
அவன் திட்டமிடும் சூழ்ச்சிகளை முறியடித்து வெல்வதே ஹீரோவின் வேலை.
வில்லன் என்பது வில்லங்கம் என்ற வார்த்தையின் மருவு தான். அவன் தோழி வில்லி.
இல்லங்களில் அம்மா சொல்வார் பிள்ளைகளிடம், சில முக்கிய முடிவுகளில் கணவர் வேறு படும்போது. "உங்க அப்பா தாண்டா வில்லன்"
வில்லாதி வில்லன்... என்பதன் பொருள் ஆதி வில்லன்... யார்?
கிரேதா யுகத்தில் இரண்யன்... அவனே வில் 'ஆதி' வில்லன்.
திரேதா யுகத்தில் இராவணன்... வில்லிகள் கைகேயி, சூர்ப்பனகை.
துவாபர யுகத்தில் கம்சன், துரியோதனாதியர்கள்.
கலியுக வில்லன்... பலர்.
கல்கி யுகமாகிய தற்காலம் என்று கொண்டால் வில்லன் வில்லிகள் அனேகர்.
பைபிளில் ஏசுவைக் காட்டித் தந்த ஜூடாஸ். முப்பது வெள்ளிக்காசுகளுக்காக.
ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸரில் "யூ... டூ... புரூட்டஸ்..." கத்திக் குத்து வாங்கிய சீஸர்...! நொந்து சொல்வார்.
'கல்கி'யின் பொன்னியின் செல்வனில் நந்தினியே மெயின் வில்லி.
ரவிதாசன் கோஷ்டி அவளுக்கு சப்போர்ட். ஒரே நேரத்தில் சோழ வம்சத்தையே காலி பண்ண பிளான் பண்ணுவாள். சதிகாரி. கிழவன் பெரிய பழுவேட்டரையர் கஜானா, நிலவறை காசு, மரியாதை பூரா காலி.
சிவகாமி சபதத்தில் நாக நந்தி, புலிகேசி.
தமிழ் சினிமாவில் வில்லன்கள் பலர்... நம்பியார், வீரப்பா, அசோகன், எம்.ஆர்.ராதா முக்கியமானவர்கள்.
தற்போது அந்த இடங்களில் நாஸர், பிரகாஷ் ராஜ்.
வில்லியாகக் கலக்கிய பழம் பெரும் நடிகைகள் சி.கே சரஸ்வதி, சுந்தரிபாய், எம்.என்.ராஜம், டி.ஆர்.ராஜகுமாரி.
படத்தில் எம்.ஆர்.ராதா வரும் முதல் காட்சி... "வந்துட்டாரு... குடி கெடுக்க" என தாய்மார்கள் முனகி சபிப்பார்கள் தியேட்டரில்.
நடிக வேள் அவர்.
ஹாலிவுட் மற்றும் ஜேம்ஸ்பாண்டு படங்களில் வில்லன்கள் தேர்வு சிறப்பாக இருக்கும். சில வில்லன்களின் நடிப்பு அட்டகாசம்.
கேஸினோ ராயலில் லீ செஃப்ரீ... ரோல்... ஒரு கண்ணில் ஓரமாக ரத்தம் கசிவதைத் துடைத்த படி... என்னா கொடிய பார்வை... சூதாட்ட கிளப்பில் போக்கர் சீட்டு ஆட்ட சீன் ஒரு காவியம்.
டிராகுலா புகழ் 'கிறிஸ்டோபர் லீ' ஒரு பாண்ட் படத்தில் வில்லன்... மிரட்டுவார்.
"மம்மி"யில் ஆர்னால்டு ஊஸ்லூ... மத குரு" இமோடெப்" ஆக வந்து பிரமிப்பூட்டுவார்.
எம்.ஜி.ஆர் படங்களில் வில்லன்களுக்கு ஹீரோவை விட சிறப்பான உடை வழங்கப் படும். இறுதியில் நீள சண்டை... கடைசியில் தோல்வி அடைந்து கத்தி ஒடிந்தவனைக் கொல்ல மாட்டார் எம்.ஜி.ஆர். கொள்கை அது.
கத்திக் குத்து அல்லது துப்பாக்கி குண்டு காயத்துக்கு கட்டுப் போட்டு காப்பாற்றி விடுவார்.
உடனே வில்லன் மனம் திருந்தி தலை குனிந்தபடி "என்னை மன்னிச்சுடு சந்திரன்" அல்லது "மணிமாறா" என்பார்.
"உங்கள் மன மாற்றமே எனக்கு வேண்டும். உயிரல்ல" என்பார் ஹீரோ.... வணக்கம் காட்டுவார்கள்.
சூப்பர்ஸ்டாரின் வில்லத்தனத்தை காயத்ரியில் ரசிக்கலாம். வில்லங்கமான கணவன் அவர்.
மனைவி ஸ்ரீ தேவி இவரிடம் மாட்டிக் கொண்டு கண்களில் ஒரு திகில் தெரிய வாழ்வார். இறுதியில் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றும் வரை... கதை சுஜாதா.
தமிழ்ப் படத்திலும் 'அதேகண்கள்' படத்தில் ஏ.வி.எம் வித்தியாசமாக வில்லனைக் காட்டினார்கள். அதிகம் வெளியில் வராத வசந்த குமார் என்பவர் தான் வில்லன்.
மாறு வேஷத்தில் வயதான வைத்தியர். குடும்ப நண்பராக நடமாடி பல கொலைகளைச் செய்வார். ஹீரோ அவரை கிளைமாக்ஸில் அடையாளம் காணும் காட்சி நல்லாவே இருக்கும் த்ரில்லாக.
அந்தப் படம் பார்க்க பெரிய க்யூ... நின்று இருந்தோம்.
முதல் ஷோ முடிந்து வெளியே வந்தவர்களில் ஒரு பொடியன் "வயசான தாத்தா தான் கொலைகாரன்", எனச் சொல்லி விட்டுப் போனான்... க்யூவைப் பார்த்து.
என்னா வில்லத்தனம்!