
"உயிரினங்களில் மிக உயர்ந்த உன்னதமான உயிர் யாதெனில் மனிதர்கள்தான். ஆக்கல், காத்தல், அழித்தல் என மூன்றையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் படைத்தவன் மனிதன். மனிதர்களில் சிலர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள். பாம்பு, பனை போன்றவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வாழும் இயற்கைக் கொடை கொண்ட உயிரினங்கள். ஆமை, சுறா, திமிங்கலங்கள் போன்றவை 200 ஆண்டுகளை சர்வசாதாரணமாக கடந்து வாழ்கின்றன. எல்லா உயிரினங்களையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்ட மனிதன் ஏனோ நூறாண்டு காலத்தைக் கடக்கவே கடினப்படுகிறான்.
அவர்களில் பெரும்பாலானோர் சிறுமதி படைத்தவர்களாக இருப்பது படைப்பின் குறைபாடு. சிலர் போதி மரங்கள் போல் ஞானத்தைக் கொடுப்பவராகவும், அன்பை அளிப்பவராகவும், பொது நலம் காப்பவராகவும், பிறர் நலம் காக்கும் போதி மனிதர்களாக வாழ்கின்றனர். நம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான போதி மனிதர்கள், ஆங்காங்கே தெரிந்தும் தெரியாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
அண்ணல் மகாத்மா, டாக்டர் அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பண்டிதர் ஜவஹர்லால் நேரு, தந்தைப் பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், கர்மவீரர் காமராஜர், அன்னை தெரசா, பாலம் சுந்தரம், ஆகியோர், அறுபத்து மூன்று நாயன்மார்கள் இறைத் தொண்டர்களுக்கு தொண்டாற்றியது போல் மக்களுக்கு தொண்டாற்றியவர்கள் ஆவார்கள். அவர்களின் தொண்டுகளை அவர்கள் ஒருபோதும் வெளிச்சம் போட்டு பறை சாற்றியதில்லை. அவர்கள் ஆற்றும் தொண்டே அவர்களின் புகழ் வெளிச்சத்திற்கு அடிப்படைக் காரணங்கள். எதிர்பார்த்துச் செய்யும் காரியங்கள் சிறுமைக்குரியவை. எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி ஆற்றும் தொண்டுகள் என்றுமே புகழுக்குரியவை.
அவர்கள் போன்று உயர்ந்த உள்ளம் படைத்த மனிதர்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பழகினால் போதும் அவர்களின் அற்புத சக்தி நம்மை ஆட்கொள்வதை உணரலாம். அவர்களை பணத்தால் விலைக்கு வாங்க இயலாது. பண்பார்ந்த தொண்டொன்றே அவர்களை ஈர்க்கும்.
பேசுவதைக் காட்டிலும் பேசாமல் இருப்பதே மேலானது. பேசித்தான் தீர வேண்டுமெனில் உண்மையை மட்டுமே பேச வேண்டும். உண்மையைப் பேசும்போது கூட மற்றவருக்கு நன்மை தரும் அன்பான வார்த்தைகளைக் கொண்டே பேசுவது நல்லது. உண்மையாகவும், அன்பாகவும் பேச்சு அமைந்தால் போதாது. அது தர்ம நியாங்களுக்குக் கட்டுப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்கிறது மகாபாரதம். மகாபாரதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இக்கருத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்; அவர்கள் போதி மனிதர்கள்.
நவ்ஜோத்சிங் சித்து எனும் கிரிக்கெட் வீரர் 1991-1992 ஆம் ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாட ஊதியமாக ரூபாய் பத்தாயிரம் பெற்று வந்தார். கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின் போது பெற்ற பணத்தை அன்னை தெரசாவின் தன்னலமற்ற சேவைக்காக கொடுக்க நேரில் சென்றார்.
"தொண்டுகளின் சகோதரிகள்" என்பது அந்த அலுவலகத்தின் பெயர். அம்மா எங்கே எனக் கேட்கிறார். "இறப்பவர்களின் இல்லத்தில்" இருக்கிறார் என்கிறார்கள். அந்த இல்லம் என்பது தங்களின் வாழ்நாளின் கடைசி மணித்துளிகளை மரணப் படுக்கையில் எண்ணிக் கொண்டிருக்கும் நோயாளிகள் அறையாகும். அந்த அறையை அடைய ஒரு சந்து வழியே சித்து செல்கிறார். சுவாசிக்க இயலாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்த அறைக்குள் நுழைந்ததும் மேலும் துர்நாற்றம் அதிகரிக்கிறது. அங்கே இறக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியின் உடலிலிருந்து சீலினை தொடைத்துக் கொண்டிருக்கிறார் அன்னை தெரசா. ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. சித்து வெளியே வருகிறார். வாந்தி எடுக்கிறார். பத்து நிமிடம் கழித்து அன்னை தெரசா வருகிறார். அன்னையிடம் பத்தாயிரம் பணம் தருகிறார். அவர் வாங்க மறுக்கிறார். மாறாக அந்த நோயாளிகளைக் குணப்படுத்தும் நடவடிக்கையில் என்னோடு சேர்ந்து ஒரிரு நாட்கள் ஒதுக்க முடியுமா எனக் கேட்கிறார். நவசோத்சிங் சித்து எனும் பன்னாட்டு கிரிக்கெட் வீரர் பதில் ஏதும் சொல்லாமல் அழுகிறார்.
அந்த நாற்றத்தினுள் இரு நிமிடம் கூட நிற்க இயலவில்லையே! அவர்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்று திகைத்தாராம், அழுதாராம். "பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்" என்ற அவர் எண்ணம் சுக்குநூறாகிப் போனதாம். "பணத்தைவிட அன்பும் நாம் பிறர்க்குச் செய்யும் சேவையும் மிக உயர்ந்தவை" என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார் என்று சித்து அவரது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை தெரசா போன்ற மனிதர்கள் எல்லாம் போதி மனிதர்கள் தான். அவர்களைப் போன்று நூறு சதவிகிதம் இல்லாமல் ஐந்து சதவிகிதம் இருந்தால் கூட போதும், நாமெல்லாம் நலம் பெறுவோம்."....