
உலகநாயகன் கமல் ஹாசனுக்கு சாரு ஹாசன், சந்திர ஹாசன் என இரண்டு அண்ணன்கள் என்றும், அவர்களை ‘ஹாசன் பிரதர்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். இவர்களோடு கூட நாலாவதாக ஒரு மோஹன ஹாசன் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்த மோஹன ஹாசன் வேறு யாருமில்லை. நகைச்சுவை நாடக ஆசிரியர், வசனகர்த்தா, நடிகரான கிரேஸி மோகன்தான்!
இதனை கமல் ஹாசனே அண்மையில் சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கிரேஸி மோகன் எழுதிய இருபத்தைந்து புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.
கிரேஸி மோகன் எழுதிய நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட பலவற்றையும் தொகுத்து அல்லயன்ஸ் புத்தக நிறுவனம் புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.
நூறு வாரங்களுக்கும் அதிகமாக கல்கியில் வெளியான கல்கி வாசகர்களின் கேள்விகளுக்கு கிரேஸி மோகன் பதிலளித்த 'கிரேஸி பதில்கள்' தொகுப்பும் இதில் அடங்கும்.
மைலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் ஏராளமான கிரேஸி மோகன் அபிமானிகளும், வாசகர்களும் கலந்துகொள்ள, அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது.
கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த விழாவில் நடிகர் ஜெயராம், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், காந்தன், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ரவி அப்பாசாமி, கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி கிரீஷ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
பதிப்பாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன், “125ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அல்லயன்ஸ் பதிப்பகம் இந்தத் தருணத்தில் கிரேஸி மோகனின் 25 புத்தகங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக கிரேஸி மோகனின் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுவது குறித்து அவருடன் பேசி இருக்கிறேன். ஆனால் அது நிறைவேறாமல் தள்ளிக் கொண்டே போனது. இப்போது மாது பாலாஜியின் முன்னெடுப்பில் கிரேஸி மோகனுக்கு பாராட்டு வழங்கும் வகையில் நிறைவேறி உள்ளது” என்று குறிப்பிட்டார்.
“கிரேஸி மோகனின் எழுத்துக்கள் நல்ல, ஆரோக்கியமான நகைச்சுவை படைப்புகள். எனவே, இந்த 25 புத்தகங்களின் தொகுப்பினை தமிழகம் முழுவதிலுமுள்ள 100 முதியோர் இல்லங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு வழங்க இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார் இயக்குனர் காந்தன்.
நடிகர் ஜெயராம் பேசுகையில், நான் கமலஹாசனின் பரம ரசிகன். கல்லூரி நாட்களில் அவரைப் போல மிமிக்கிரி செய்து, போட்டியில் பரிசு பெற்றிருக்கிறேன். எங்கள் ஊரில் கமல் பட ஷூட்டிங் நடந்தபோது கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தவமாகக் காத்திருந்து ஒரு சில விநாடிகள் கமலின் முகத்தைப் பார்த்துவிட மாட்டோமா என்று காத்திருந்தவன் நான்.
அவரோடு தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற அற்புதமான படங்களில் நடித்ததும், அவரோடு ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் நான் பெற்ற பாக்கியம்” என்று பெருமையோடு குறிப்பிட்டார். அத்துடன், தான் கல்லூரி நாட்களில் செய்த கமல்ஹாசன் மிமிக்கிரியையும் செய்து காட்டி அசத்தி, அரங்கத்தினரின் கைத்தட்டலைப் பெற்றார்.
இயக்குனர் ரவி குமார், “கிரேஸி மோகன் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டு அவர் எழுத ஆரம்பித்தால், அவர் சளைக்காமல் பக்கம் பக்கமாக வசனம் எழுதித் தள்ளுவார். ஒரு படத்துக்கு வசனம் எழுதச் சொன்னால், அவர் நாலு படங்களுக்குத் தேவையான அளவுக்கு வசனம் எழுதிக் கொடுப்பார்” என்று பேசினார்.
“பார்த்ததும் பிடிச்சுப் போச்சுன்னு சொல்லுவாங்க; கிரேஸி மோகனைப் பொறுத்தவரை நான் படிச்சதும் பிடிச்சுப் போச்சு!” என்று சொல்ல வேண்டும். அவரது எழுத்து அப்படிப்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் யார் எங்கே இருந்தாலும் தினமும் பேசிக்கொள்ளுவோம். நேரம் போவதே தெரியாது. எல்லாவற்றையும் பற்றிப் பேசுவோம், நாங்கள் பேசிக்கொள்வதைக் கேட்பவர்களுக்கு, மனநல மையத்தில் இருப்பவர்கள் பேசிக்கொள்வது போல இருக்கும். எங்கள் இருவருக்கும் இடையிலான கடவுள் மறுப்பு உள்ளிட்ட வேறுபாடுகளை எல்லாம் கடந்து எங்கள் இருவருக்கும் இடையில் ஆழமான நட்பு இருந்தது” என்றார் கமல்ஹாசன்.