
கல்யாணத்திற்கு ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது மிகப்பெரிய முயற்சியாக ஆகிவிட்டது. நாற்பது வயதைத் தாண்டியும் பெண் தேடும் படலம் ஆண்களுக்குத் தொடர்கதையாகி வருகிறது.
பெண்களின் பிறப்பு விகிதாச்சாரம் ஆண்களை விடக் குறைந்து போனது, பெண்கள் ஆண்களுக்கு நிகராக படிப்பிலும் அந்தஸ்திலும் தங்களது முத்திரையைப் பதித்தது, வாழ்க்கையில் ஸ்திரப்பட ஆண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான காலம் என்பதைத் தாண்டி பல விஷயங்கள் நூலும் பாவுமாக ஊடுருவிச் செல்வதைக் காணமுடிகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் பெண்கள் பலரும் கிராமமோ, நகரமோ படிப்பதில் முன்னேறி நல்ல வேலைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதால், பெண்கள் தங்களை உணர்வதுடன் பரந்த உலக அறிவையும், விசால பார்வையும் பெறுகிறார்கள். இதனால் அவர்கள் தன்னம்பிக்கை மிகுதியாகி தங்களது வாழ்வின் லட்சியம் மற்றும் குறிக்கோள்களை தாங்களே தீர்மானிக்கிறார்கள். தனது தேவைக்கேற்ற எல்லாவற்றையும் முடிவெடுப்பதைப் போலக் கணவனையும் தேர்ந்தெடுக்கும் துணிவும் அவர்களுக்குப் பிறக்கிறது. எந்த சூழ்நிலை மற்றும் கட்டாயங்களுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
சரிபாதி திருமணங்கள் காதலில் முடிவு செய்யப்படுகின்றன. தகவல் தெரிந்தால் கலந்து கொள்வதும் அனுமதி கொடுத்தால் நடத்தி வைப்பதும் தான் பெற்றோர்களின் நிலை. குடும்ப மானம் குல கௌவரம் என்றெல்லாம் பேசும் சந்தர்ப்பத்தைப் பெரியோர்களுக்குப் பிள்ளைகள் கொடுப்பதில்லை. இந்த போக்கு நகரங்களில் சாதாரண நிகழ்வாகவும், கிராமங்களில் இவற்றைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இருந்தாலும்,அங்கேயும் மாற்றம் காணப்படுகிறது என்பதும் நிதர்சனம்.
குடும்பமே தங்கள் பிள்ளைகளின் படிப்பின் மூலம் உயர்வை நோக்கி நகருகின்றன. படிப்பும் அது கொடுக்கும் வேலை வாய்ப்பும், அதனைத் தொடர்ந்து பெருகும் திடீர் வளர்ச்சியும் இன்றைய மிடில் கிளாஸ் சமூகத்தைச் சற்றே நிதானம் இழக்கச் செய்கிறது. தங்களது எதிர்ப்பார்புகளை பெருக்கிக்கொண்டு, அதனால் ஏற்படும் சங்கடத்தையும் இலவச இணைப்பாக அனுபவிக்கிறார்கள்!
மிகவும் சுயநலம் ஆகி போனது இன்னொரு காரணம். எதிர் தரப்பை கருத்தில் கொள்ளாமல் தங்கள் அந்தஸ்தை உயர்த்த வாய்ப்பாக திருமணங்களை ஒரு துருப்பு சீட்டு போலப் பயன்படுத்தப்படுகிறது. வேலைகளில் உயர்வை காண்பது போல, தன்னை விட சற்றே அந்தஸ்தில் உயர்ந்த இடத்தில் வரன் தேடி தனது வசதிகளை பெருக்கிக்கொள்ளுவது இரு தரப்பிலும் காணப்படுகிறது.
ரொம்பவும் கற்பனையான குறுகிய ஆடம்பர கண்ணோட்டத்தில் திருமணங்கள் அணுகப்படுகிறதோ என்றும் சந்தேகம் எழுகிறது. ஆடம்பரத்தில் எடுத்துக்கொள்ளும் அக்கரை வாழ்வின் நீண்ட பயணத்தின் கூறுகளில் எடுப்பதில்லையோ என்று நினைக்க வைக்கிறது. நிலைப்படுத்தப்பட்ட ஜாதி மத துவேசங்களை கடந்து விட்டாலும் வெளிப்புற தோற்றம் வசதி அந்தஸ்து என்கிற புதிய புதைகுழிக்குள் விழுந்து விடுகிறார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றன என்பதை நம்பவேண்டாம், வாழ்க்கையையாவது நரகமாக்கி கொள்ளாமல் இருக்கலாமே…
ஆண்களின் பள்ளியை, படிப்பை இதர தேவைகளை இதுவரை தேர்ந்தெடுத்த பெற்றோர்களால் அவனுக்கு மனைவியை தேர்ந்தெடுக்க தெரியவில்லை. விருப்பத்தை சார்ந்தோ வசதியை சார்ந்தோ முடிவெடுக்க முடியாமல், குறுகிய வாய்ப்பில் ஒன்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
முன் காலங்களில் இருப்பது போல தற்போதைய ஆண்களுக்கு அக்கா தங்கைகளை கல்யாணம் முடித்த பிறகு வரம் தேட வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும், குறிப்பாக நகரங்களில், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் கோட்பாடு அவர்கள் பெற்றோர்களே கடைப்பிடித்துவிட்டனர். அந்த ஒற்றை அக்காவிற்கோ தங்கைக்கோ சீக்கிரமாகவே கல்யாணமும் நடந்து விடுகிறது.
குறைந்தபட்ச தகுதியாக இன்றைய படித்த வேலைபார்க்கும் பெண் எதிர்பார்ப்பது, சொந்தமாக வீடு, கார், ஆறு இலக்க மாத சம்பளம். இதனை அடைய 24 வயதில் படிப்பை முடிக்கும் ஆணுக்கு ஆறு முதல் பத்தாண்டுகள் தேவைப்படுகிறது. எனவே சராசரி ஆண்களின் வயது 30ஐ கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் சில இடங்களில்,அவனது பெற்றோர்கள் உடன் இருக்கக்கூடாது என்கிற நூதன நிபந்தனையும் வருகிறது. இதற்கு மேல் பெண்ணின் நிபந்தனையாக வயது வித்தியாசம் ஒன்றோ இரண்டோ வருடங்கள் தான் இருக்க வேண்டும், (தாடி வேறு வைத்துக்கொள்ள வேண்டும்!). எத்தனை சிக்கலை தான் எதிர்கொள்வான் தன் திருமண வாழ்வை துவக்கவே ஒரு ஆண் மகன்?!
இத்தனை இடர்பாடுகளைத் தாண்டி வந்தாலும் நிச்சயத்திலிருந்து கல்யானதிற்க்குள் இவர்களுக்குள் மனஸ்தாபம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது. அப்படி நேர்ந்தால் கல்யாணம் கேன்சல். கல்யாணத்திற்கு பிறகு நேர்ந்தால் டைவோர்ஸ்.
இத்தனை இடர்பாடுகளையும் எதிர்கொள்ள முடியாததால் பெருகிய முதிர் கண்ணிகள் காலம் போய் இப்போது வெண்மை முடியுடன் கல்யாணம் கழிக்காமல் திரியும் ஆண்கள் பெருகிவிட்டனர்.