இஸ்ரேல் - காசா இடையிலான போரின் காரணமாக தற்போது காசா மக்களின் அன்றாட நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 21 மாதங்களாக நடந்து வரும் இஸ்ரேல், ஹமாஸ் இரு படையினருக்கும் இடையேலான போரினால் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
பட்டினியால் மட்டும் இறந்துள்ள 100க்கும் மேற்பட்டோரில் 80 பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரியது. காசாவின் 21 லட்சம் மக்களில் 5 லட்சம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, நோய் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காசா மக்கள் வாழ்வில் காணப்படும் பசியும், பட்டினியும் உலகின் மிக மோசமான நெருக்கடிகளில் ஒன்றாகவே உலக சுகாதார அமைப்பினால் பார்க்கப்படுகிறது.
முகாம்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவேளை உணவு, தண்ணீர் கூட கிடைப்பதில்லை. இதனால் உயிரிழப்புகள் தொடர்கின்றன. காசாவுக்கு தேவையான நிவாரண பொருட்கள் இருப்பில் இருந்தாலும், அவற்றை விநியோகிப்பதில் உள்ள சவால்கள் ஏராளம்.
காசாவில் ஐக்கிய நாடுகள் தலைமையிலான நிவாரண பொருள் விநியோக மையங்களை மூடிவிட்டு காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் விநியோகத்தை கடந்த மே மாத இறுதியில் இஸ்ரேல் தொடங்கியது. ஆனால் 20 லட்சம் மக்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்க இந்த மையங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.
காசா பகுதியில் 2025, மே மாதத்தில் மட்டும் 6 மாதங்கள் முதல் 5 வயதுக்குட்பட்ட 5,119 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யுனிசெஃப் ஆதரவு ஊட்டச்சத்து மையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, இது ஏப்ரல் 2025இல் அனுமதிக்கப்பட்ட 3,444 குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
மே மாதத்தில் அனுமதிக்கப்பட்ட 5,119 குழந்தைகளில், 636 குழந்தைகள் கடுமையான ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். பிப்ரவரி முதல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 146 விழுக்காடாக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அலைகளை உலகெங்கும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மே மாத இறுதி வரை வெறும் 150 நாட்களில், காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சைக்காக 16,736 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கான யுனிசெஃப் பிராந்திய இயக்கம் கூறியுள்ளது.
இடைவிடாத குண்டுவீச்சுகள் காரணமாக 236 சிகிச்சை மையங்களில் 127 மட்டுமே செயல்படுகின்றன. கடுமையான வயிற்றுப்போக்கு காசாவில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு 4 நோய்களிலும் 1 ஆக உள்ளது. மேலும் ஆபத்தான தொற்றுநோயான ஹெபடைடிஸ் ஏ அப்பாவி பொது மக்களை விரைவாக கொன்று வருகிறது.
டிசம்பர் 2024 முதல் 5,472 பேர் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த கொடூரமான போருக்குப் பிறகு, முறையான உணவு கிடைக்காததால் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ சிகிச்சைகள் பிப்ரவரியில் பதிவாகியுள்ளன. (2,068 குழந்தைகள்). போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதும், காசா பகுதிக்குள் கணிசமான அளவில் உதவிகள் வந்து கொண்டிருந்தபோதும், பிப்ரவரி மற்றும் மே 2025 க்கு இடையிலான மூன்று மாத காலப்பகுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 148 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உணவுப் பொருள் விநியோகத்துக்கான கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று உலகின் பலநாடுகள் இஸ்ரேலை வற்புறுத்தி வருகின்றன. இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையும், மற்ற நிறுவனங்களும் தங்கள் நிவாரண பணிகளை காசாவில் முறையாக செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளிடையேயும் பெண்களிடையேயும் அதிகமாக காணப்படுவது ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளமில்லை. இதனால், வளர்ச்சி குறைபாடுகள், இளவயது இறப்பு, வறுமை, வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை, அசுத்தமான குடிநீர், சுகாதார வசதிகளின்மை, ஊட்டச்சத்து பற்றிய போதிய அறிவின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், சமச்சீரற்ற உணவு, உடல் வளர்ச்சியில் பாதிப்பு, உடல் எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கற்றல் திறன் குறைவு, இறப்பு விகிதம் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
உதவி தேவைப்படும் நபர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவிகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் வழங்கப்பட வேண்டும். காசாவின் தற்போதைய நிலைமை அனைவருக்கும் பெருத்த கவலையினை அளிக்கிறது. இந்நிலைமை விரைவில் சீரைடைய வேண்டும்.
மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல், குழந்தைகளையும், பொதுமக்களையும் பாதுகாத்தல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மனித உரிமைகளுக்கான சட்டத்தையும் மதித்து நடத்தல், மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க அனுமதித்தல், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நம் அனைவரின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.