மருந்தில்லாச் சிறப்பு மருத்துவம் - இன்றைய தேவையாக இருக்கிறது!

செப்டம்பர் 8: உலக இயன்முறை மருத்துவ நாள்!
World Physiotherapy Day
உலக இயன்முறை மருத்துவ நாள் | World Physiotherapy Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாளன்று, உலக இயன்முறை மருத்துவ நாள் (World Physiotherapy Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டிலிருந்து, செப்டம்பர் மாதம் 8 ஆம் நாள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப் பற்றியும், அதன் நன்மைகள் மற்றும் நுட்பங்களைப் பற்றி எடுத்துச் சொல்லவும், மக்களுக்கு உடலியக்கம், தசை பலம் பாதுகாத்தல், உடல் நலம், மூட்டசைவு உள்ளிட்ட பல உடலியக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பு (World Physiotherapy) இந்நாளைக் கொண்டாடி வருகிறது.

இயன்முறை மருத்துவம் அல்லது உடலியக்க மருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் (Physical Therapy, Physiotherapy) முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த, மருந்தில்லாச் சிறப்பு மருத்துவப் பிரிவு ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனி நபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத் துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும் போது அளிக்கப்படும் சிறந்த மருத்துவ முறைகளைக் கொண்டது.

இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும், கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும் போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல், ஊனத்தைச் சரி செய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத் தரத்தைப் பெற்றிட வேண்டிய மருத்துவ முறைகளைக் கொண்டதாக இம்மருத்துவம் அமைந்துள்ளது. அப்போது எழும் உடல் மற்றும் உளவியல், சமூக நலம் குறித்தும் கவனத்தில் கொள்கிறது. இம்மருத்துவ முறையில் இயங்கு மருத்துவர்கள், நோயாளிகள் / வாடிக்கையாளர்கள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம் விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இயன்முறை மருத்துவம் (Physical Medicine) என்பது நவீன உலகில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த சிறப்பு மருத்துவ முறையாகும்.

1951 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, கன்னடா, டென்மார்க், பின்லாந்து, பெரிய பிரித்தானியா, நியூஸிலாந்து, நார்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று 11 நாடுகள் ஒருங்கிணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கினர்.

தற்போது இதில் மொத்தம் 129 உலக நாடுகள் உறுப்பினராக உள்ளன. உலகெங்கிலுமுள்ள 6 இலட்சம் இயன்முறை மருத்துவர்களை இந்த அமைப்பு முன்னிலைப்படுத்துகிறது. இந்த அமைப்பின் சார்பில், இயன்முறை மருத்துவம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், இயன்முறை மருத்துவத்தை உலகம் முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு நடத்தப் பெறுகிறது. ஜப்பானின் டோக்யோ நகரில் 2025 ஆம் ஆண்டில் மே 29 முதல் மே 31 வரை இந்த ஆண்டுக்கான மாநாடு நடத்தப் பெற்றது. அடுத்த மாநாடு மெக்சிகோ நாட்டிலுள்ள குவாதலஜாரா எனுமிடத்தில் 2027 ஆம் ஆண்டு மே 14 முதல் மே 16 வரை மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆசிரியர்கள் வெறும் கற்பிப்பவர்கள் அல்ல, சமூகத்தின் வழிகாட்டிகள்!
World Physiotherapy Day

இவ்வமைப்பு இயன்முறை மருத்துவ வளர்ச்சிக்கும், உலகளாவிய சுகாதாரத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பு தனி மனித உயரிய தரமான உடல் நலம் மற்றும் அறிவியல் சார்ந்த மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவம் செய்தல் போன்றவற்றை நெறிப்படுத்துகிறது. இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயல்படும் இவ்வமைப்பு ஐக்கிய இராஜ்ஜியத்தில் பதிவு பெற்ற கூட்டமைப்பு ஆகும். மேலும் இது 1952 ஆம் ஆண்டு முதல் உலக உடல் நல அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் இருந்து வருகிறது. இதன் துணை அமைப்புகளாக 12 அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இருளில் இருக்கும் கண்களுக்கு ஒளியேற்றுவோம்!
World Physiotherapy Day

கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில் பல்வேறு உடலியக்கப் பிரச்சனைகளைச் சந்தித்து வரும் பலருக்கும் இந்த இயன்முறை மருத்துவம் பயனுடையதாக இருக்கிறது. மருந்தில்லாச் சிறப்பு மருத்துவப் பிரிவாகக் கருதப்படும், இம்மருத்துவத்துறை பற்றி மேலும் அறிவதுடன், இம்மருத்துவ முறையில் அளிக்கப்படும் பல்வேறு உடலியக்கச் சிகிச்சைகள் குறித்தும், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்வதுடன், அனைவருக்கும் இயன்முறை மருத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் இந்நாளில் எடுத்துரைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com