
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாளன்று தேசியக் கண் கொடை நாள் (National Eye Donation Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருப்பது பார்வை. நாள்பட்ட நோய்கள், காயங்கள், வயது முதிர்வு மற்றும் சில பார்வைக் குறைபாடுகளால் பார்வை இழப்பு ஏற்பட்டு விடுகிறது. இழந்த பார்வையை மீட்டெடுக்கக் கண் கொடை தேவையாக இருக்கிறது.
உலகச் சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஐந்து வினாடிக்கும், ஒருவர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார். இது மிகவும் கவலைக்குரியதாகும். பார்வைக் குறைபாடுகளில் 80% சிகிச்சையளிக்கக்கூடியவை அல்லது தடுக்கக்கூடியவை என்பது இங்கு கவனிக்கத் தக்கது.
2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகளவில், 4.33 கோடி (பெண்கள்:2.39 கோடி) பேர் பார்வையற்றவர்களாக மதிப்பிடப்பட்டுள்ளனர். இந்த ஆய்வில் 29.5 கோடி (பெண்கள்:16.3 கோடி) பேர் மிதமான மற்றும் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், 25.8 கோடி (பெண்கள்:14.2 கோடி) பேர் இலேசான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 51 கோடி பேர் சரிசெய்யப்படாத வெள்ளெழுத்து எனப்படும் ஒரு வகையான பார்வைக் குறைபாட்டைக் கொண்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற உலகளாவிய ஆராய்ச்சியின்படி, 70% கருவிழி அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான கருவிழி கண் வங்கிகளிலிருந்து கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் 30% கருவிழி அறுவை சிகிச்சைகளுக்குக் கண் கொடை தேவையாக இருக்கிறது.
எனவே, கண் கொடை தொடர்புடைய தகவல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது.
கண் கொடை என்றால் என்ன?
ஒரு நபர் தான் இறந்த பிறகு, தன்னிடம் நலமுடன் இருக்கும் பல்வேறு உறுப்புகளைக் கொடையாக வழங்க முடியும். அந்த உறுப்புகள் தேவைப்படும் மற்றொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன. இது போன்று கொடையாக வழங்கப்படும் உறுப்புகளில் கண்ணும் இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 95 சதவிகிதம் வெற்றிகரமாக நடைபெறுவது கண் அறுவை சிகிச்சைகள் என்றும் ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. ஒரு நபர் உயிருடன் இருக்கையில் தன் கண்களைக் கொடையாக வழங்குவது சட்டப்படி இயலாத ஒன்று. எனவே, ஒருவருடைய மரணத்திற்குப் பின் கண்களைக் கொடையாக வழங்குவதேக் கண் கொடை எனப்படுகிறது.
கண் கொடை வழங்க என்ன செய்வது?
கண் கொடை வழங்குவதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ஒரு நபர் இறந்த பிறகு மட்டுமேக் கண் கொடை செய்ய முடியும். அந்த நபர் உயிருடன் இருக்கும் போதே, அருகிலுள்ள ஒரு கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையில் கண் கொடை வழங்குவதற்கான உறுதிமொழிப் படிவத்தைப் பெற்று, அதனை முழுமையாக நிரப்பிக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்த நபர் இறந்த பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் உடனடியாக அந்தக் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையிலிருந்து வரும் மருத்துவப் பணியாளர்கள், இறந்தவர் உடலிலிருந்து கண்ணைப் பாதுகாப்பாக அகற்றி, அதனைக் கொடையாகப் பெற்றுக் கொள்வர்.
கண் கொடையாக வழங்க ஏற்கெனவே உறுதிமொழி கொடுக்காவிடினும், இறந்த நபரின் உறவினர்கள் விரும்பினால் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையினைத் தொடர்பு கொண்டு, அதற்கான விதிமுறைகளின்படி கண் கொடை வழங்க முடியும்.
அருகிலுள்ள கண் வங்கியை அணுகுவதற்கு உதவியாக, இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்தியா முழுவதற்குமான தொலைபேசி உதவி எண்ணான 1919 எனும் எண்ணில் அழைக்கலாம்.
கண் கொடைக்கான உறுதிமொழியை எந்த வயதிலும் அளிக்க முடியும். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் கண் கொடை வழங்கலாம். கண் கொடை அளிப்பவர் மற்றும் பெறுபவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். கொடையாக அளிக்கப்பட்டக் கண்களை வாங்கவோ விற்கவோ முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
கண்கொடையாளர் இறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
கண்கொடையாளர் இறந்தவுடன் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தப் பின்னர், மருத்துவக் குழுவினர் வந்து அவரது உடலிலிருந்து கண்களை எடுக்கும் வரை அவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். இறந்தவரின் கண் இமைகளை முதலில் மூடி வைக்க வேண்டும். இறந்தவர் உடலை வைத்திருக்கும் அறையிலுள்ள மின் விசிறியை நிறுத்த வேண்டும்.
அதற்குப் பதிலாக குளிர்பதன சாதனத்தைப் பயன்படுத்தலாம். இறந்தவரின் தலையை ஒரு தலையணையில் வைத்துச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும். அருகிலிருக்கும் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் போதும். கண் வங்கிக் குழுவினர் கண் கொடையாளரின் வீட்டுக்கு அல்லது மரணம் நிகழ்ந்த மருத்துவமனைக்கு வந்து, அவருடைய கருவிழிப் படலத்தினை எடுத்துக் கொள்வார்கள். இதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கண் கொடை வழங்குவதற்கான நிபந்தனைகள்
கண் கொடை வழங்கும் நற்செயலை வயது, பாலினம், ரத்த வகை அல்லது சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் செய்ய முடியும். கிட்டப்பார்வை அல்லது தூரப் பார்வைகளுக்காகக் கண்ணாடி அல்லது ஒட்டுவில்லை (Contact lens) அணிந்திருப்பவர்களும், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கூட கண் கொடை வழங்க முடியும். நீரிழிவு நோயாளி, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளும் கூட கண் கொடை வழங்கலாம்.
கண்புரை உள்ளவர்களும் கண் கொடை வழங்கலாம். ஆனால், தொற்று நோயுள்ளவர்கள் கண் கொடை செய்ய இயலாது. எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி, ஹெப்படைட்டிஸ் பி & சி, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, நரம்பியல் பிரச்னைகள், மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் இறந்ததற்கான சரியான காரணம் அறிய முடியாத நிலையில் இருப்பவர்களும் கண் கொடை வழங்க முடியாது.
ஒரு நபர் இறந்த பிறகு, அவரது உடல் மண்ணில் புதைக்கப்பட்டு அல்லது நெருப்பினால் எரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. அழிந்து போகக்கூடிய உடலில் நலமுடன் இருக்கும் அவரது இரு கண்களைக் கொடையாகக் கொடுப்பதன் வழியாக, உயிருடனுள்ள நான்கு பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு பார்வை வழங்கி, அவர்களது வாழ்வில் ஒளியேற்ற முடியும்.
கண் கொடை என்பது நம்மைப் போன்ற பிற மனிதர்களுக்கு நாம் வழங்கக்கூடிய விலை மதிப்பற்ற பரிசு. நமது கண்களைக் கொடையாக வழங்கி பார்வையிழப்புகளைத் தடுக்க நாம் ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்ளலாம். கண் கொடை வழங்க விரும்புபவர்கள், அருகிலுள்ள கண் வங்கி அல்லது கண் மருத்துவமனைக்குச் செல்லலாம்.