

மூவர் பாடல் பெற்ற இத்தலங்களின் ஆன்மீக ரகசியங்களையும் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
1. திருத்துறையூர்:
எங்கே இருக்கிறது: சென்னை - கும்பகோணம் வழித்தடத்தில் அரசூர் புதுப்பேட்டை வழியாக கண்டரக்கோட்டை அருகில் பண்ருட்டியிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மூலவர்: சிவனின் பெயர் சிஷ்டக் குருநாதர், அம்பாளின் திருநாமம் சிவலோக நாயகி.
கோவிலின் சிறப்பு: சுந்தரருக்கு வழிகாட்டி காட்சி கொடுத்து ஆட்கொண்ட தலம். சுந்தரருக்கும் சிவனுக்கும் நடந்த சிவநெறி போதனைக்குச் சாட்சியாக விநாயகர் இருந்ததால், இங்குச் சாட்சி விநாயகர் சிலையாக வீற்றிருக்கிறார்.
அகத்தியர் வழிபட்ட தலம். சுந்தரர், அப்பர், நாரதர், அகஸ்தியர், பீமன், சூரியன் ஆகியோர் வழிப்பட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. வடகரை பாடல் பெற்ற தலங்களில் இது 15 வது தாக கருதப்படுகிறது.
தனிச் சிறப்பு: சிவஞான போதம் அருளிய மெய் கண்டார் அவர்களின் சிஷ்யர் அருள்நந்திசிவாசாரியார் பிறந்து முக்தியடைந்த ஊர். இவர் 13 ம் நூற்றாண்டில் வாழ்ந்து சிவங்கியான சித்தியார் என்ற நூலை இயற்றியவர். அவரது ஜீவசமாதியும் கோவிலுக்கு அருகில் உள்ளது.
2. திருவீராட்டனம்:
எங்கே இருக்கிறது: திருவதிகை/பண்ருட்டியிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
மூலவர்: வீரட்டானம் என்றால் சிவன் போர் புரிந்த தலம் என்று பொருள். திரிபுரசம்ஹார மூர்த்தியான மூலவர் 16 பட்டை லிங்கமூர்த்தியாக காட்சி தருகிறார். அந்த லிங்கத்திற்குப் பின் சுவரில் சிவன் பார்வதி திருமணக் கோலத்தில் காட்சி கொடுக்கிறார்கள்.
கோவிலின் சிறப்பு: அப்பருக்கு கயிலாய உமா மகேஸ்வரர் காட்சியும், ஞானசம்பந்தருக்கு நாட்டிய காட்சியும், சுந்தர மூர்த்திக்குத் திருவடி தீட்சையும் கிடைக்கப்பெற்ற தலம். எனவே மூவர் பாடல் பெற்ற தலம். அப்பர் முதன் முதல் பதிகம் பாடிய தலம் என்ற பெருமையைப் பெற்றது. நாவுக்கரசர் சூலை நோய் வந்து தாங்க முடியாத வயிற்று வலியில் துடித்த போது அவரது அக்கா திலகவதியார் இங்கு வந்து சிவனை வேண்டி திருநீறும் தீர்த்தமும் அவருக்குப் பருகக் கொடுத்தார். அதனால் நோய் நீங்கி அவர் சமணத்திலிருந்து சைவம் தழுவி முதல் பதிகம் பாடிய ஊர்.
தனிச் சிறப்பு: சிவன் தேரில் சென்று போர் புரிந்து மூன்று அசுரர்களைக் கொன்றதாக வரலாறு. தேர் உருவான கோவில் இது என்றும் கூறுகிறார்கள். அர்ஜுனர் வழிபட்ட தலம். 108 கரண நாட்டிய சிற்பங்கள் வாயில் மண்டபத்தில் சிலையாக வடித்துள்ளார்கள். ஒரு புத்தர் சிலையும் உள்ளது. ஒவ்வொரு ராசி நட்சத்திரம், திசைக்குத் தனித் தனி மரங்கள் இங்கே உள்ளன. தல விருட்சம் சரக்கொன்றை.
திருப்பணி செய்தவர்கள்: மகேந்திர வர்மன் இக்கோவில் திருப்பணி செய்த கல்வெட்டு உள்ளது. பிற்காலத்தில் மேலும் சில பிரகாரங்கள் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன் ராஜ ராஜ சோழன் மாதிரி வடிவாகத் தரிசித்த கோவில் இது என்றும் சொல்கிறார்கள்.
3. திருமாணிக்குழி:
எங்கே இருக்கிறது: கடலூரிலிருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த நடுநாட்டு 17 வது தலம்.
மூலவர்: சம்ஹாரமூர்த்தி திரை நீங்கி மூலவர் இரண்டு நிமிடத் தரிசனமே தருவார். பள்ளியறை இல்லா கோவில் அல்லது மூலவர் சன்னிதியே பள்ளியறை ஆகும். அம்பாளின் பெயர் அம்புஜாஷி.
தல புராணம்: மாணி என்றால் பிரம்மச்சாரி, குழி என்றால் ரகசியம். இந்தக் கோவிலைப் பற்றிய சுவையான கதை உள்ளது. ஓர் எலி விளக்கில் உள்ள நெய்யை உண்ணவேண்டும் என்று எண்ணி திரியைத் தூண்டிவிட்டது. அதனால் ஏற்பட்ட பிரகாசமும் புண்ணியமும் அதனை மகாபலி மகாராஜாவாகப் பிறக்க வைத்துப் பின் வாமன அவதாரத்தால் மோட்சம் பெற்றது. அந்தப் பிரம்மஹத்தி தோஷம் நீங்க விஷ்ணு, சிவனை வழிபட்ட தலம் இது. இந்தக் காட்சிகள் மூலர் மண்டப சுவரில் சிலையாக வடித்துள்ளனர். அந்த வாமனருக்கு பள்ளியறை தரிசனம் தந்ததால் மூலவர் சன்னிதி எப்போதும் திரை போட்டு மூடி இருக்கும்.
மூவர் பாடிய தலம். திருப்புகழும் பாடப்பற்றத் தலம். சுந்தரர் இச்சிவனை உதவி நாயகன் என்று பாடியிருக்கிறார்.
மேலும் சிறப்பு: ரோகிணி நட்சதரத்தரன்று, திருவண்ணாமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்ட பிறகு நடக்கும் கிரி கோவில் ஜோதி தரிசனம் மிகவும் பிரசித்தம்.
திருப்பணி செய்தவர்: முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது இந்தக் கோவில் என்றும் கூறுகிறார்கள்.
4. திருநாரையூர்:
எங்கே இருக்கிறது: சிதம்பரத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்து 33 வது தளம் வடகரை பாடல் பெற்ற தலம் இது.
மூலவர்: திரிபுரசுந்தரி சமேத சௌந்தரேஸ்வரர் என்பதே சுவாமியின் திருநாமம்.
கோவிலின் சிறப்பு: அறுபடை விநாயகர் தலங்களில் முதலாம் விநாயகர் கோவில் இது. இங்குள்ள பிள்ளையாருக்கு பொள்ளா (உளியால் செதுக்காத) பிள்ளையார் என்று பெயர். சந்திர தோஷம் நீங்க இங்கு வந்து சங்கடகர சதுர்த்தி விநாயகர் பூஜை செய்தால் நீங்கும். இந்தக் கோவிலில் மற்றொரு விசேஷமாக இரண்டு சண்டிகேசரவர் சிலைகள் உள்ளன. 49 ம் திருப்பதிகம் 2 ம் திருமுறை 86 ம் திருப்பதிகம் ஆகிய பாடல்கள் இவ்வூரின் பெருமைகளைப் பாடுகின்றன.
தல புராணம்: சுயம்பிரகாசத் தேவதத்தன் என்ற இந்திரா லோகத்தைச் சேர்ந்தவன். இங்கே பறந்தபோது பழங்களை தின்றுவிட்டு கொட்டைகளைக் கீழே போட்டான். அது தவம் செய்து கொண்டிருந்த துருவாசர் முனிவர் மீது விழுந்து விட்டது.
உடனே அவர் அவனை நாரயாகப் போகச் சாபம் கொடுத்தார். சாபம் நீங்கக் கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து தினமும் இங்குள்ள சிவனுக்கு பூஜை செய்யும் படி சாப விமோசனம் அருளினார். அப்படி ஒரு முறை தண்ணீர் கொண்டு வந்த போது அடித்த கடும் காற்றால், நாரைக்குச் சிறகு இழந்து, சிறகிழந்த நல்லூர் ஒரு கி. மீ தூரத்தில் உள்ள ஊரில் விழுந்துவிட்டது. எனினும் தவழ்ந்து இங்கு வந்தே உயிரை விட்ட நாரைக்கு மோட்சம் கிட்டியது.
மேலும் சிறப்பு: நம்பியாண்டார் நம்பி பிறந்த ஊர் இது. அவரது பக்தியை மெச்சி விநாயகர் அவர் படைத்த பிரசாதத்தை உட்கொண்டார் என்று ஒரு கதை உண்டு. இந்த நம்பி தான் ராஜ ராஜ சோழனுக்கு சிதம்பரம் கோவிலிலிருந்த பதிகப் பாடல் ஓலைச் சுவடிகளைக் காண்பித்தார். நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்ட திருவந்தாதி நூலே சேக்கிழார் பெரிய புராணம் பாட மூலநூல் ஆனது.
5. ஒமாம் புலியூர்:
எங்கே இருக்கிறது: சிதம்பரத்திலிருந்து 32 கி. மீ மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ தூரத்தில் திருநாரையூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்த 31 வது வடகரை பாடல் பெற்ற தலம்.
மூலவர்: துயர் தீர்த்த நாதர் பிரணவ வியாக்கிர புரீஸ்வரர் என்பது மூலவரின் திருநாமம்.
கோவிலின் சிறப்பு: பார்வதி தேவிக்கு ஓம் என்ற மந்திர உபதேசம் சொன்ன ஊர். எனவே மகா குருவாக தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சி தருகிறார் ஈசன். இதைத் தவிர இரட்டை சனகர்கள் கொண்ட தட்சிணாமூர்த்தி சன்னிதியும் இருப்பதால் இது இரட்டை குரு ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. சனிக்கும் தனிச் சன்னதி உள்ளது. 45 ம் திருப்பதிகம் 3 ம் திருமறை 122 ம் திருப்பதிகம் பாடல்கள் பெற்ற தலம்.
6. மேலக்கடம்பூர்:
எங்கே இருக்கிறது: காட்டுமன்னார்குடிக்கு அருகில் ஸ்ரீ முஸ்னத்திலிருந்து 6 வது கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 32 கி. மீ தூரத்தில் உள்ளது. வடகரையில் 34 ம் கோவில் இது.
மூலவர்: வருத்திய ஜோதி நாயகி உடனுறை அமிரத்தகடேஸ்வரர்
கோவிலின் சிறப்பு: இது தேர் போன்ற அமைப்பில் அமைந்த அழகான சிற்பங்கள் பல அமையப்பெற்ற கரக்கோவில் வகையைச் சார்ந்த கோவில். நால்வர், பாம்பன் ஸ்வாமிகள், அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். 2ம் 5ம் திருமுறைகளில் பாடல் பெற்ற தலம் இது.
மேலும் சிறப்பு: பிரதோஷக் காலத்தில், தசப் புஜ ரிஷபத் தாண்டவ மூர்த்தியின் தரிசனமும் அபிஷேகமும் இங்கே நடப்பதால் தனிச் சிறப்புப் பெற்ற தலமாக விளங்குகிறது. தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தவ்வை தேவி சிலையும் இங்கு உள்ளது. லக்ஷ்மியின் மூத்த சகோதரி ஜேஷ்டாதேவி சிலையும் உள்ளது. வாதாபியிலிருந்து கொண்டு வந்த ஆரவார விநாயகர் சிலையும் உள்ளது. ஷண்முகர், சம்ஹாரம் செய்ய வேல் பெற்ற தலம் இது. மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், லிங்கோத்பவர், ஒரே இடத்தில் சரஸ்வதி, லக்ஷ்மி, சக்தி என்று பல சிலைகள் உள்ளன. பதஞ்சலி முனிவர் அகஸ்தியர் சன்னதிகளும் உள்ளன. சனி இங்குக் கழுகு வாகனத்தில் காணப்படுகிறார். இந்திரன் தாய் அதிதி வழிப்பட்ட கோவில் என்று பல சிறப்புகள் பெற்ற ஆலயம் இது.
திருப்பணிகள்: 1113 ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் இந்தக் கோவிலுக்கு உதவி செய்த கல்வெட்டுச் சான்று உள்ளது. பல்லவர் காலக் கோவில் இது என்றும் கூறுகிறார்கள்.
சோழ நாட்டின் பழமையான தேவாரத் தலங்களின் ஆன்மீக ரகசியங்கள் மற்றும் வரலாற்றுத் தொன்மங்களை அறிந்துகொள்வதன் மூலம், நமது பாரம்பரியத்தின் மீதான புரிதலை வளர்த்துப் பெருமிதம் கொள்ள முடியும்.