
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இந்த பரபரப்பான உலகில் பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் சேர்ந்து ஒத்து போய் விட்டாலும் கூட மணப் பெண்ணும் மணமகனும் நிறைய விஷயங்களில் ஒத்து போனால்தான் வாழ்க்கை சிறக்கும்.
திருமணம் குறித்து பழைய இலக்கிய பாடல் கூறுவது என்னவென்றால்…
மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில்……மாப்பிள்ளையிடம் சில முக்கியமான கேள்விகள் கேட்க வேண்டும்.
நெருக்கடி காரணமா?
ஒரு சில குடும்பங்களில் குடும்பத்தினர் நெருக்கடி காரணமாக அல்லது வயதான தாத்தா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அவர் கண் மூடுவதற்குள் பேரனுக்கு திருமணம் நடத்தி விட வேண்டும் என்ற அவசரத்தில் பெண் பார்க்க வருவார்கள். அவர்கள் அப்படி வந்தால் மாப்பிள்ளையிடம் கேட்க வேண்டிய கேள்வி இந்த திருமண ஏற்பாடு நெருக்கடி காரணமா? என்று மணப்பெண் கட்டயாம் கேட்க வேண்டும்.
இல்லா விட்டால் எதிர்காலத்தில்….எனக்கு கல்யாணத்தில விருப்பமே இல்லை… தாத்தாவின் திருப்திக்காக என்னை என் குடும்பத்தினர் கட்டாய திருமணம் நடத்தி விட்டனர் என்ற புலம்பல் வரும் எனவே இந்த கேள்வி கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி.
தொழில் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளதா?
உங்களை நாடி வரும் வரன் எந்த தொழில் செய்கிறார். அந்த தொழில் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளதா? அல்லது கடனுக்கென்று வேலை செய்கிறாரா? என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக எல்லை மீறி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் காட்டுங்க, உங்க ஊதிய விவர வங்கி கணக்கு பாஸ் புத்தகம் காட்டுங்க, என்று கேட்க கூடாது. அப்படி கேட்டால் நீங்கள் மிக்க சுயநலவாதியாக கருதி அந்த வரன் உங்களை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
வெளிநாடு செல்ல உத்தேசமா?
இந்த கேள்வி மிக மிக அவசியமான ஒன்றாகும். வெளிநாடு செல்ல உங்களுக்கும் விருப்பம் இருக்கணும் இல்லையா? திருமணம் ஆகி பத்து நாளில் விமானத்தில் பறக்கும் ஆசாமியைக் கட்டி கொண்டால்… திருமண தாம்பத்திய உறவிற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். ஆக மாப்பிள்ளையிடம் வெளிநாடு செல்ல உத்தேசமிருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளவும். ஒரு சில மாப்பிள்ளைகள் திருமணம் ஆனவுடன் சிறிது மாதங்களில் மனைவியை தம்முடன் அழைத்து சென்று விடுவார்கள். அது போன்ற நிகழ்வுகளில் அச்சப்பட தேவையில்லை.
குழந்தை பெறுவது ஓகேவா? அப்படி என்றால் எப்போது?
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். உங்களுக்கு குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் வரனுக்கு அதில் ஆர்வம் இல்லை அல்லது உங்களுக்கு குழந்தை பெறுவதை தள்ளி போடும் மனப்பான்மை உள்ளது. அது போன்ற நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தெளிவான நிலைக்கு வந்த பிறகு முடிவெடுப்பது மிகவும் நன்று.
இரு குடும்பங்களையும் சமநிலையில் பார்க்கும் மனோபாவம் உள்ளவரா?
ஆண்கள் அனைவரும் அம்மா பிள்ளைகளாக இருப்பார்கள். பெண்கள் அப்பாக்களின் இளவரசிகளாக வலம் வந்தவர்கள். ஆக திருமணம் ஆனவுடன் மணமகன் இரு வீட்டாரையும் சமநிலையில் பார்க்கும் மனநிலை கொண்டவரா என அறிந்து கொள்ளுதல் மிக முக்கியமானதாகும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் குடும்ப உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
நீங்கள் வேலைக்கு செல்வதை ஆதரிக்கிறாரா? அல்லது எதிர்ப்பவரா?
பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். வரும் மாப்பிள்ளை நீங்கள் வேலைக்கு செல்வதை ஆதரிக்கிறாரா? அல்லது எதிர்ப்பவரா? என்பதை நிச்சயம் இந்த கேள்வியின் வாயிலாக பதில் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் ஈகோ யுத்தம் ஏற்பட்டு விடும்.
காதல் ஏதேனும் இருந்ததா?
பெண் ஒரு போதும் கணவனை விட்டு தருவதில்லை. மாமியார் மருமகள் பிரச்னைக்கு அடிப்படையே தன் அன்பு புதிதாக வந்த பெண்ணிடம் சென்று விட்டதே என்றும் மனைவி தன் மீது அன்பு காட்டாமல் எதற்கடுத்தாலும் அம்மா அம்மா என்று அம்மாஞ்சியாக இருக்கிறாரே என்றும் தோன்றும். அப்படி இருக்க முந்தைய வாழ்வில் மணமகன் காதல் வயப்பட்டு அது தோல்வியாகி தேவதாஸ் நிலைக்கு உள்ளவரா என்பதை மணமகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வாரா?
வாழ்க்கை துணை என்றால் வீட்டு பராமரிப்பு, பிள்ளை பெறுவது மட்டுமல்ல; ஒரு குடும்பத்தை மிக சரியாக நிர்வகிப்பது. அதுவும் இந்த நாட்களில் வேலைக்கு சென்று விட்டு குடும்பத்தை பராமரிக்க பெண்களுக்கு மிக்க கடினமான ஒன்றாகும். ஆகவே வாழ்க்கை துணையின் எதிர்பார்ப்பினை வரும் வரன் பூர்த்தி செய்வாரா? அல்லது அலட்சிய மனோபாவம் உள்ளவரா என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மனைவிக்கு துயரம் என்றால் கணவன் ஆறுதலாக நடந்து கொள்வதும், கணவன் தோல்வி அடைந்தால், மனைவி தோள் கொடுத்து தைரியம் தருவதும் இல்லற வாழ்க்கைக்கு மிக அத்தியாவாசியமான ஒன்றாகும். ஆக இந்த விஷயத்தில் வருகின்ற வரனின் மனோபாவத்தை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
திருமணம் என்பது வாழ்க்கை கடலாகும். அதில் குடும்பம் என்ற படகு பயணிக்க இரு துடுப்புகள் போல கணவன் மனைவி இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வாழ்க்கை கடலை மகிழச்சியாக கடக்க முடியும்.