திருவாடிப்பூரம்: சிறப்பு கட்டுரையும் கதையும்!

1. கட்டுரை: ‘ஆடிப்பூர விரதம்’! பெண்கள் தவறவிடக்கூடாத அதிர்ஷ்ட நாள்! 2. கதை: நூறு தடா அக்கார அடிசில்
ஆடிப்பூரம்
ஆடிப்பூரம்AI Image
Updated on
MM strip
MM strip

1. கட்டுரை: வாழ்க்கையை மாற்றும் ‘ஆடிப்பூர விரதம்’! பெண்கள் தவறவிடக்கூடாத அதிர்ஷ்ட நாள்!

ஆடிப்பூரம்
ஆடிப்பூரம்AI Image

தமிழ் நாட்காட்டியின்படி நான்காவது மாதமான ஆடி மாதம் (பொதுவாக ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை) ஆன்மீகத்தில் சக்தி வழிபாட்டிற்கும், இயற்கைக்கும், விவசாயத்திற்கும் மிகவும் உகந்த மாதமாக கருதப் படுகிறது.

ஆடி மாதத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். அம்மன் வழிபாடு, உழவுப் பணிகள், நீர் நிலைகளை வணங்குதல் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற ஆன்மீக நிகழ்வுகளுக்கு இம்மாதம் மிகவும் விசேஷமானது.

இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பெருக்கு (ஆடி 18), ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் போன்ற நாட்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அந்தளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ‘ஆடிப்பூரம்’.

ஆடிப்பூரம் என்பது ஆடிமாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஆன்மீகத் திருநாளாகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை ‘ஆடிப்பூரம்’ என்று கொண்டாடுகிறோம்.

இந்த நன்னாளில் தான் உலக நன்மைக்காக உமாதேவி அவதரித்தாக கூறப்படுகிறது. அதாவது இந்த நாள் பார்வதி தேவியின் அவதார நாளாகவும், வைணவத்தில் ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசித் தோட்டத்தில் அவதரித்த திருநாளாகவும் சைவர்களாலும் வைணவர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தாய்மை அடைந்த பெண்களுக்காக வளைகாப்பு நடத்துவது வழக்கம்.

அதுபோல உலகை காக்கும் அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தி மகிழ்கிறார்கள். அம்மனுக்குச் சாற்றப்பட்ட வளையல்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை அணிவதால் திருமணத் தடை நீங்கும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
கணவன் கொடுமைகளிலிருந்து நிவாரணம் கிடைக்க பழையனூர் நீலி அம்மன் வழிபாடு!
ஆடிப்பூரம்

அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5-ம் மாதம் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப்படுகிறது. அதேபோல் தான் பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து ஆடிப்பூரத்தில் அனைத்து அம்பாள்களுக்கும் வளைகாப்பு செய்வது மரபாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பாளுக்குச் சிறப்பு வளைகாப்பு மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும்.

இந்த ஆரப்பூர நன்னாளில், திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள், தகுந்த கணவன் மனைவியை அடையவும், சண்டைபோட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாக கணவனும், மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பர்கள் கூடவும், ஸ்ரீ ஆண்டாளை வணங்குவது சிறப்பாகும். முக்கியமாக ஜாதகத்தில் சஷ்டாஷ்டக தோஷம் இருப்பவர்கள் இந்த ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க அனைத்து கருத்து வேறுபாடுகளும் மறையும் என்பது நிதர்சனம்.

இதையும் படியுங்கள்:
தன்னிலைப்பாடி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பூரம்: வேண்டியதை அருளும் திருவிழா சிறப்பு!
ஆடிப்பூரம்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நான்னாள் நாளை (ஆகஸ்ட் 14) வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதுவும் இந்தாண்டு ஆடிப்பூரம் மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பெண்கள் குறிப்பிட்ட முறையில் விரதம் இருந்து, வழிபட்டால் அவர்களின் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும். அதே போல் வருமானம் அதிகரித்து, பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அதனால் இந்த நாளில், பெண்ணாக பிறந்த தன்னுடைய வாழ்க்கை முழுமை பெறுவதில் இருக்கும் தடைகள், மனக்குறைகள் ஆகியவை நீங்குவதற்கு ஆடிப்பூர தினத்தில் பெண்கள் விரதம் இருக்கலாம்.

ஆடிப்பூர நாளில் அதிகாலையில் நீராடி, வீட்டைச் சுத்தம் செய்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாட்டைத் தொடங்கவும். அன்றைய நாள் முழுவதும் பால், பழம் அல்லது குங்குமப்பூ கலந்த நீர் அருந்தி விரதம் இருக்கவும் அல்லது நாள் முழுவதும் உப்பிமில்லாமல் பால், பழங்கள் உட்கொள்ளலாம்.

மாலையில் அருகில் உள்ள அம்மன் அல்லது வைணவத் தலங்களுக்குச் சென்று ஆண்டாள் அல்லது அம்பிகையை தரிசிக்க வேண்டும். அம்மனுக்கு வளையல்கள், மஞ்சள், குங்குமம் வைத்துப் படைத்து, பின் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு அவற்றைத் தானமாக வழங்கலாம். பிறகு வீட்டிற்கு வந்து, மகாலட்சுமிக்கு தாயாருக்காக தயாரித்து வைத்திருக்கும் உணவுகளை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பிறகு, அதனை மற்றவர்களுக்கும் கொடுத்து, தானும் உண்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

- கவிதா பக்கிள்

******************

2. கதை: நூறு தடா அக்கார அடிசில்:

ஆடிப்பூரம் | a girl and god
ஆடிப்பூரம் | a girl and godAI Image

கோதை மிகவும் உற்சாகமாக வளைய வந்தாள்.

முதல்நாள் இரவு அவள் தாய் ராதா, "என் தோழி கீதா இந்த வருடம் திருவாடிப்பூரத்தை ஒட்டி சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கா.

இந்த வருடம் வார இறுதியை ஒட்டி வெள்ளிக்கிழமைல வர்றதுனால லீவு போட்டுட்டு உன்னையும் அழைச்சிட்டு திருவில்லிபுத்தூர் வரச் சொல்லியிருக்கா."

கோதை சந்தோஷத்தில் குதித்தாள்.

சும்மாவா பின்னே! பத்தே வயது நிரம்பியவள், தாயிடம் தன் பெயருக்கான விளக்கம் தெரிந்த நாளிலிருந்து தீவிர நாச்சியார் பக்தை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கலிகால கடவுள்!
ஆடிப்பூரம்

திருப்பாவை முப்பதும், நாச்சியார் திருமொழியும் மனப்பாடமாக ஒப்புவித்து உள்ளூர்க் கோயில் திருவிழாவில் பரிசு வென்றிருக்கிறாள்.

"ஹை ஜாலி, இந்த வருடம் முதன்முறையா ஆண்டாள் கோயிலில் நாச்சியார் திருமொழியில் வருகிற, "நூறு தடா அக்கார அடிசில்" பார்க்கப்போறோம்."

வெள்ளிக்கிழமை அதிகாலை, சுறு சுறுப்பாக குளித்துத் தயாரானாள் கோதை.

ராதாவின் தோழி கீதா, அவளுக்கு புதுப் பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து, ஆண்டாள் கொண்டையும் போட்டுவிட்டு அலங்கரித்தாள்.

"என் கண்ணே பட்டுடும் போல இருக்குடி தங்கம், சாட்சாத் ஆண்டாள் மாதிரியே இருக்கே," என்று கூறி திருஷ்டி கழித்தாள்.

ஆண்டாள் சன்னதி, முன் வரிசையில் நின்று, ' திருவாடிப்பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே' என்று தொடங்கி கணீரெனப் பாடினாள் கோதை.

நூறு தடா அடிசில் காண ஆர்வமாக நின்றிருந்தாள் கோதை.

நாச்சியார் திருமொழி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்... கண்மூடி தானும் சேர்ந்து சொன்ன கோதை, இதோ, தீபாராதனை, நூறு தடா அடிசில் பார்க்கப் போறேன், மெய்சிலிர்க்க விழிகள் திறந்தவளுக்கு ஏமாற்றம்.

அங்கே ஒரே ஒரு பெரிய அண்டா அளவு வெள்ளிப் பாத்திரத்தில் அக்கார அடிசில் வைக்கப்பட்டிருந்தது.

"இந்தா குழந்தே! முதல் பிரசாதம் உனக்குத்தான்."

கோதை கையைப் பின்னே இழுத்துக் கொள்ள, "என்னம்மா இது, தாத்தா பிரியமாக் கொடுக்கிறாரில்லே," என்று கீதா எடுத்துச் சொன்னாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கற்பனை நெருப்பை அணைத்தவள்!
ஆடிப்பூரம்

தாயின் புறம் திரும்பி, "நூறு தடான்னு பாடிட்டு, ஒரே ஒரு பாத்திரம் மட்டும் வைத்து ஆண்டாளை இந்தத் தாத்தா ஏமாத்துறாரே?" என்று கோதை

"கோதை, பெரியவாள அப்படியெல்லாம் பேசக்கூடாது." கண்டிப்பான குரலில் சொன்னாள் ராதா.

ஏமாற்றம் சூழ நின்றவளை, "குழந்தாய் இப்போது பார் உன் விழிகளில் விழும் காட்சியை..."

மற்றவர்களுக்கு அசரீரியாக நாச்சியாரின் குரல் மட்டும் ஒலிக்க, கோதையின் பார்வைக்கு மட்டுமே தெரிந்தவள், சுட்டிய திசையில் நூறு தடா அக்கார அடிசில் நிரம்பித் தெரிந்தது.

"ஐ, நூறு தடா பார்த்துவிட்டேன்" குதூகலித்தாள் கோதை. நாச்சியாரின் உருவம் மறைந்தது.

அனைவருமே ஒருவிதமான பரவச நிலையில் இருந்தனர்.

சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு, "இப்போ புரியுதா பாப்பா? நாங்க ஒரு தடா வைச்சா அது நூறு தடாக்குச் சமம்."

கோயில் பட்டர் சொல்ல, அம்மா தட்டில் சேர்க்கக் கொடுத்த ரூபாய் நூற்றி ஒன்றில் நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு ஒற்றை ரூபாய் நாணயத்தை தட்டில் சேர்த்து நகர்ந்தாள்.

ராதாவும், கீதாவும் சங்கடமாய் பட்டரிடம், "மன்னிச்சிக்கோங்க, குழந்தை தெரியாமப் பண்ணிட்டா," என்று நூறு ரூபாய்த் தாள் ஒன்று எடுத்துத் தட்டில் சேர்க்க வர, தடுத்து நிறுத்தியவர், "குழந்தையும், தெய்வமும் ஒண்ணு. இன்னைக்கு அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடிதான் எங்கிட்ட விளையாடியிருக்கா. எனக்கு அவ கொடுத்ததே போதும்" என திருப்தியுடன் நடையைக் கட்டினார்.

- நாபா.மீரா

logo
Kalki Online
kalkionline.com