

ஆண்களை விட பெண்களின் உடல் அமைப்பு சிறப்பானதாகும். தனித்துவமாகவும் இருக்கிறது. பெண்களின் உடல், சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறும் தன்மை கொண்டது. அந்த வகையில் பெண்களின் உடலின் சிறப்புகள் மற்றும் நம்ப முடியாத விஷயங்களை இப்பதிவில் காண்போம்.
1. பெண்கள் ஆண்களை விட தீவிரமாக வலியை உணர்வார்கள்:
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜனில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அதிக வலி ஏற்பிகள் மற்றும் மேம்பட்ட நரம்பு மண்டல எதிர்வினை காரணமாக அதிகமாக வலியை உணர்கிறார்கள். இதனால்தான் மாதவிடாய்க்கு முன் ஏற்படும் வலி, ஒற்றைத் தலைவலி, ஃபைப்ரோமியால்ஜியா போன்ற நோய் பாதிப்புகள் பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றன.
2. வாசனை உணர்வு பெண்களுக்கே அதிகம்:
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்களின் வாசனை உணர்வை மேம்படுத்துவதால் பெண்களுக்கு ஆண்களை விட வாசனை அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்ட விடுப்பு, கர்ப்ப காலங்களில் பெண்களிடம் இது அதிகமாக இருப்பதோடு, நினைவாற்றல் மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றில் இது முக்கிய பங்காற்றுகிறது.
3. வித்தியாசமான மாதவிடாய் ரத்தம்:
கருப்பை உட்சுவர் திசு, கருப்பை வாய் சளி மற்றும் யோனி சுரப்புகள் போன்ற பல பொருட்கள் கலந்து வெளிவரும் மாதவிடாய் ரத்தம் வெறும் ரத்தம் போன்று இருக்காது. இது யோனியின் பிஹெச் (pH) அளவை பராமரித்து, இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதுகாத்து இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளோடு செயல்படுகிறது.
4. இயற்கையான நெகிழ்வுத் தன்மை பெண்களுக்கே உண்டு:
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், தசைநார் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதோடு, அதிக மூட்டு நெகிழ்வுத் தன்மையையும் நெகிழ்வான இயக்கத்தையும் வழங்குகிறது. இதனால்தான் யோகா, நடனம் போன்றவற்றில் பெண்களின் அசைவுகள் அற்புதமாக இருக்கின்றன.
அதேசமயம் தசைகள் வலுவடையாமல் இருந்தால் தசைநார் காயங்களின் அபாயத்தையும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகரித்துக் கொடுக்கிறது.
5. பெண்சக்தி எப்பொழுதுமே நோய் எதிர்ப்பு சக்தி:
ஆண்களை விட பெண்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருப்பதால் நோய்த் தொற்றுகள் பெண்களை குறைவாகவே தாக்குகின்றன. அதேபோல் குணமடைவதிலும் பெண்களே முதலில் இருக்கின்றனர்.
6. கொழுப்பை திறமையாக சேமிக்கும் பெண்கள்:
பெண்களின் இடுப்பு, தொடை மற்றும் மார்பு பகுதிகளில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாக கொழுப்பு சேர்வதை எதிர்மறை பண்பாக பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும், ஹார்மோன் உற்பத்தி, கர்ப்ப காலத்தில் தேவையான ஆற்றல் வழங்கவும் உயிரியல் நன்மையை இது வழங்குகிறது.
7. மென்மையான சருமமும் அதிக உணர்திறனும்:
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்களின் சருமத்தை மென்மையாகவும் நெகிழ்வாகவும் மற்றும் ஈரப்பதத்தை அதிகரித்தும் மாற்றுகிறது. சுற்றுச்சூழல் மாற்றங்கள், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள், முதுமை காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாகவும் இது மாற்றுகிறது.
8. முடி வளர்ச்சி அதிகம் உடைய பெண்கள்:
ஆண்களை விட பெண்களுக்கு தான் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும். கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்கு பிறகும் மாதவிடாய் நிறுத்தத்தின் போதும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முடியின் தடிமன், வளர்ச்சி விகிதம் மற்றும் முடி உதிரும் சுழற்சிகளை கணிசமாக பாதிக்கிறது.
9. பெண்களுக்கு ஆண்களை விட அதிகம் குளிரும்:
பெண்களின் உடல் முக்கிய உறுப்புகளை வெப்பமாக வைப்பதற்கே முன்னுரிமை அளிப்பதோடு, பெண்களின் தசை அளவு குறைவாக இருப்பதால் பெண்கள் குளிரை அதிகம் உணர்வதால் கைகளும் கால்களும் விரைவாக குளிர்ச்சி அடைகின்றன.
10. அதிக நெகிழ்ச்சி தன்மை கொண்ட ரத்த நாளங்கள்:
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, மாதவிடாய், கர்ப்பம் போன்றவற்றை சமாளிக்க உதவும் ரத்த நாளங்கள் பெண்களுக்கு அதிக நெகிழ்ச்சி தன்மை கொண்டதாக உள்ளது.
சக்தி என அழைக்கப்படும் பெண்கள், உடல் அளவில் ஆண்களை விட பல வியத்தகு விஷயங்களை உள்ளடக்கி வைத்திருக்கின்றனர். இதனை பெண்கள் அதிகம் தெரிந்து, முழுமையாக அறிந்து கொண்டால் ஒவ்வொரு பெண்களும் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference