அப்பம் - ஆப்பம் : என்ன வித்தியாசம்? ஆஹா... விளக்கம் அற்புதம்!

appam vs aappam
appam vs aappamImage credit: AI image
Published on
Mangayar Malar
Mangayar Malar

அப்பத்துக்கும் ஆப்பத்துக்கும் என்ன வித்தியாசம் (appam vs aappam).

அப்பத்தின் நீட்டல் விகாரம் தான் ஆப்பம் என்றார் நண்பர் தமிழாசிரியர்.

அ,ஆ.

அப்பம் உருவில் சுற்றிலும் நீளமாய் இருந்தால் ஆப்பம் எனவும் கொள்ளலாம்.

அப்பம், சிறிது..மொத்தமாய் தடிமனாய் இருக்கும் உப்பலாக. ஒரு சாயலுக்கு ஆண்ட்ரோமிடா (Andromeda) கேலக்ஸி போட்டோ மாதிரி இருக்கும்.

ஆப்பம், வட்டமாக நடுவில் மட்டும் தடிமனாக ஓரத்தில் பொரிந்து இருக்கும்.

அப்பம் பிளாக் ஹோல் புகைப்படம் போல தோன்றும். யாரிடமும் ப்ளாக் ஹோல் போட்டோவைக் காட்டுங்களேன். அப்பம் சார் என்பார்கள்.

அஸ்ட்ராணமி இல்லாத இடமில்லை. எங்கும் வியாபித்து இருப்பது ஸ்பேஸ் எனும் வெற்றிட அண்ட வெளி தானே..!

அப்பம் எண்ணெய் குடித்து இருக்கும்... ஆப்பத்தில் அந்த அபாயமில்லை.

அப்பத்துக்கு பணியாரம் என்றும் பெயர் உண்டு.

குழிப்பணியாரம் மட்டும் பெரிய கோலிக்குண்டு போலிருக்கும். குழிப்பணியார சட்டி பல்லாங்குழி போல வட்டமாய் இருக்கும். மாவை ஊற்றி கம்பியால் புரட்டி வேக விடுவர். அடிப் பக்கம் கொஞ்சம் கருகிக் காணப்படும்.

அப்பத்தை சுவாமிக்கு நைவேத்யம் வைப்பார்கள். ஆப்பம் ஆசாமிகளுக்கு மட்டும் தான்.

அப்பத்தில் ஸ்வீட் அப்பம், கார அப்பம் இரண்டும் செய்யலாம். காரைக்குடி பக்கம் கந்தரப்பம் என வெள்ளையாக பஞ்சு போல் இருக்கும். பூஜையில் இலையில் படைப்பார்கள்.

ஆப்பம் ஒரு டிபன். அப்பம் ஒரு ஸ்நாக்ஸ் மாதிரி.

ஆப்பம் தேங்காய் பால் அமுதம். தேங்காய்ப் பாலை ஆப்பத்தின் மேல் ஊற்றியும் சாப்பிடலாம். தனியாக ஒரு கிண்ணத்தில் பாலைத் தொட்டு தொட்டும் சாப்பிடலாம்.

முதல் முறையில் ஆப்பத்தின் நடுப் பகுதியாகிய மையம் பாலில் ஊறி கையில் நழுவி பின் வாயில் நழுவும். தொட்டு சாப்பிடும் முறையில் பால் மீந்து விடும். அதைக் கடைசியில் குடித்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
3 வகை கேரளத்து அப்பம்
appam vs aappam

கருப்பட்டி ஆப்பம் பிரவுன் கலரில் பனைவெல்ல வாசனையோடு மணக்கும்... நடுவில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, தேங்காய் துவையல் தொட்டு சாப்பிட்டால் மணம் சூழ அற்புத உணர்வைப் பெறலாம். இப்போவெல்லாம் ஒரிஜினல் பனை வெல்லம் கிடைக்கிறது அரிது. விலை எட்டாத உயரம்.

ஆப்பம் சுடுவது தனிக் கலை. அதற்கு மாவு தயாரிப்பது தனி பக்குவம். தோசை போல் திருப்பிப் போட மாட்டார்கள் கல்லில். மூடி வேக வைப்பார்கள்..

மாவை ஆப்ப சட்டியில் நடுவில் ஊற்றி துணியால் காதுகளைப் பிடித்து தூக்கி சட்டியை ஒரு வட்டப் பாதையில் லாவகமாகச் சுற்ற மாவு சீராக ஓரங்களில் பரவி நடுவில் செட் ஆகும்.

மூடி வேக வைத்து திருப்பியால் லேசாக ஓரத்தில் நெம்பினால் ஆப்பம் சட்டியை விட்டு கைக்கு வரும். அடடா அப்போது ஒரு வாசனை கிளம்பும்.

தட்டில் வைக்க ஆப்பத்தின் மையம் தட்டில் பதிந்து இருக்க ஓரம் ஐரோப்பிய பாலே (Ballet) நடன மாதரின் நைலான் ஸ்கர்ட் போல சுற்றிலும் எழும்பி இருக்க அது ஒரு புது வித மலர்.

ஆப்பத்துக்கு கெட்டி சட்னி தொட்டுக் கொள்ளலாம். பொடி நல்லெண்ணெயும். ஓகே தான். சாம்பார் எடுபடாது.

தள்ளுவண்டி டிபன் சென்டர்கள் மற்றும் இரவு நேர திடீர் உணவகங்களில் ஆப்பம் பாயா ஜோடி இருக்கும்.

அப்பம், குழிப் பணியாரம், அதிரசம் எல்லாமே தின்பண்ட பரிணாம வளர்ச்சியில் ஒரே சமூகமே. டிஎன்ஏ ஒன்று தான்.

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு முறை மசாலா ஆப்பம் செஞ்சி பாருங்க!
appam vs aappam

அப்பத்தின் இன்னொரு வெர்ஷன் உள்ளது. கிராமத்து டீக்கடைகளில் போடுவார்கள். இனிப்பு போண்டா.

மைதா அரிசி மாவைக் கலந்து பேக்கிங் சோடா போட்டு உருண்டையாக செவ்வாய் கிரகம் போல் இன்னும் கறுத்து பிரவுன் கலரில் இருக்கும். கிரிக்கெட் பால் அளவிலும் போடுவர். காம்பஸ் வைத்தால் உருண்டை வடிவம் கன கச்சிதமாக ஜியோமெட்ரி சுத்த அளவுகளில் இருக்கும். அது படிக்காத மாஸ்டரின் கை வண்ணம். பேக்கிங் சோடா இருப்பதை நாவால் உணரமுடியும். இவற்றில் எது மூத்தது என்றால் அப்பமே.

பைபிளின் பல வாசகங்களில் அப்பம் குறிப்பிடப் படுகிறது. "அப்பம் அல்லாதவற்றுக்காக பணத்தையும் திருப்தி அடையாத பொருளுக்காக பிரயாசத்தையும் செலவழிக்க வேண்டாம்", என்று வரும்.

பட்டினத்தாரைக் கொல்ல நஞ்சு கலந்த அப்பத்தைத் தர அவர் தன் ஞான திருஷ்டியால் அறிந்து," தன் அப்பம் தன்னைச் சுடும்.. வீட்டப்பம் ஓட்டைச் சுடும்", என்று சொல்லி வீட்டின் மேல் வீச, வீடு தீப்பற்றி எரியும்.

இதையும் படியுங்கள்:
சுடச்சுட சொஜ்ஜி அப்பம் - கமகம வெங்காய கொத்சு!
appam vs aappam

இடியாப்பம்....... பெயரில் அப்பத்தைத் தாங்கி இருந்தாலும் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு வஸ்து. குழந்தைகள் முதியவர்கள் எல்லோருக்கும் ஏற்ற சுலப ஜீரண உணவு.

இடியாப்பம் சுடுவது ஒரு கலை. அம்மணிகள் வயது இருபதில் ஆரம்பித்தால் அறுபதில் தான் பதம் பிடிபடும். இன்றும் குப்புசாமி தான் இடியாப்ப உரலை அமுக்கி பிழிந்து மனைவிக்கு உதவுகிறார்.

அவர் மனைவி கமலா குப்புசாமி அகப்படாத சமயத்தில் மாவில் நல்லெண்ணெய் விட்டு, சுடுநீர் அதிகம் சேர்த்து எளிதில் பிழிந்து விடுவார்.

குப்புசாமி பிழியும்போது மட்டும் டைட்டாக வைத்து விடுவாள். பிழியும் சவாலில் கை அத்துப் போகும். நானும் ஒரு புறம் உரலை அமுக்குகிறேன் என்பாளே தவிர முழு பலமும் குப்புசாமியுடையது தான்.

அவள் பிழிந்தால் இடியாப்பம் அடைந்து போய் இருக்கும்.

குப்பு பிழிவது நூல் நூலாக ஒன்றோடொன்று ஒட்டாமல் இடியாப்ப சிக்கலாய் அழகாய் இருக்கும்.

பிழிந்த பின் மொட்டை மாடியில் அரைமணி நேரம் ஃப்ரெஷ் காற்றை உள் இழுத்து சம நிலைக்கு வருவார். தம் கட்டின களைப்பு நீங்க. இடியாப்பத்துக்கு பல தொட்டுக்கைகள் சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
ஆப்பம் முதல் புளியோதரை வரை: ஆரோக்கியம் தரும் 'மூங்கில் அரிசி' மேஜிக்!
appam vs aappam

சீனி, நாட்டுச் சர்க்கரை, தேங்காய் பால், மிளகாய்ப் பொடி, சட்னி. இடியாப்பத்தை கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம், கருவேப்பிலை் போட்டு, வதக்கிய தேங்காய்ப் பூ தூவி தாளித்தால் நல்ல கார உணவு. அவசரத்துக்கு பொடி நல்லெண்ணெய் கலந்து ரெடி பண்ணலாம்.

இடியாப்பம் தொண்டையில் சிக்கியதாய் சரித்திரம் இல்லை.

அப்படியும் ஒரு கேஸ் வந்த போது டாக்டர் வியந்தார். இடியாப்பம் ஜீனி தேங்காய் துருவல் ரெசிப்பி சாப்பிடும் போது தேங்காய் துகள் மூச்சுக் குழலில் சிக்கின கேஸ் அது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com