

தீய பழக்கங்களால் வாழ்க்கையைத் தொலைத்து, தற்கொலைக்கு முயன்ற ஒரு சாதாரண மனிதர், எப்படி முருகனின் திருவருளால் தமிழ் இலக்கியத்தின் உச்சமான 'திருப்புகழ்' வழங்கும் அருணகிரிநாதராக மாறினார்? கந்த சஷ்டி திருநாளில் பக்தர்களை சிலிர்க்க வைக்கும் அருணகிரிநாதரின் அற்புதமான வரலாற்று உண்மைகளையும், திருப்புகழின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தீபாவளி அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்து கோலாகலமான ஸ்கந்த சஷ்டி விழா எல்லா முருகன் தலங்களிலும் ஆரம்பம். இந்த விசேஷ நாட்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதோடு மட்டுமில்லாமல் முருகனுக்கு கந்த திருப்புகழ் பாடல்களையும் பக்தர்கள் பாடுவார்கள். இந்த அருமையான திருப்புகழ் பாடல்களை நமக்கு அளித்தவர் அருணகிரிநாதர்.
இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், 'திருப்புகழ்' இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது.
அருணகிரிநாதர் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் 1370 இல் பிறந்தவர். இவர் தந்தையார் திருவெங்கட்டார் தாயார் முத்தம்மை. அருணகிரி இளமையிலேயே நல்ல கல்வி கற்று தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களை கற்று தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனால் இவர் இள வயதில் தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு தன் சொத்தை இழந்ததோடு இல்லாமல் பெருவியாதி வந்தும் அவதிப்பட்டார். அப்போது ஒரு பெரியவர் இவரிடம் குமரக் கடவுளின் பெருமைகளை பற்றி சொல்லி, சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும் உபதேசித்தார்.
ஆனால் தன் செயல்களுக்கு வெட்கி அவமானப்பட்ட அருணகிரி, மேற்கொண்டு வாழ விரும்பாது, தன் உயிரை விட தீர்மானித்தார். திருவண்ணாமலை கோவில் கோபுரத்தின் மேலே ஏறி அங்கிருந்து கீழே குதித்து தன் உயிரை விட முயற்சி செய்தார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரை தாங்கி, 'அருணகிரி நில்!' என்று சொல்வதை கேட்டார். திகைத்து போன அருணகிரி தன்னை காப்பாற்றியது யார் என பார்த்தபோது குமரக்கடவுள் தன் திருக்கோலத்தை காட்டி அவருக்கு அருளினார்.
கீழே குதித்த அருணகிரியை தன் திருக்கரங்களால் ஆட்கொண்டு முருகப்பெருமான் அருள் பாலித்த அந்த இடம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கம்பத்து இளையானார் சந்நிதி என்று அழைக்கப்பட்டு பக்தர்களால் பரவசத்துடன் வணங்கப்படுகிறது.
முருகன் அவரை, ”அருணகிரிநாதரே!” என்று அழைத்து தன் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தை பொறித்து யோக மார்க்கங்களும், மெய்ஞானமும் அவருக்கு கை வரும்படியாக அருளினார். அவர் தொழு நோய் முருகன் திருக்கரங்கள் பட்டதும் மறைந்து விட்டது. பக்தியின் பாதையை அவருக்கு காட்ட எண்ணிய முருகப்பெருமான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்து கொடுத்து விட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றை பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
பிறகு அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலுமுள்ள கோவில்களுக்கு சென்று 16,000 திருப்புகழ் பாடல்களை இயற்றினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றூள் சுமார் 2000 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு இன்று வரை பாடப்படுகின்றன.
இந்த பாடல்கள் பல ஆண்டுகளாக இங்கும் அங்கும் ஓலைச் சுவடிகளில் மட்டுமே பிரதிகள் இருந்தன. மன்னர்களும் புரவலர்களும் தமிழை ஆதரிக்காததால் பிற நூல்களைப் போல திருப்புகழ்ப் பாடல்களும் பாடுவாரின்றிக் கிடந்தன.
வி.டி. சுப்பிரமணிய பிள்ளை மற்றும் அவரது மகன் வி.எஸ். செங்கல்வராய பிள்ளை போன்றோர் அவற்றின் மதிப்பைப் புரிந்துகொண்டு அவற்றை மீட்டெடுத்து வெளியிட்டனர். இந்த திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நல்வாழ்க்கை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. அருணகிரிநாதர் ஆறு படை வீடுகளுக்கும் சென்று அங்கே திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார். பலவகை நோய்களை தீர்க்க, தொழில் சிறக்க, திருமணம் நடக்க, மோட்சம் கிடைக்க என்று பல்வேறு திருப்புகழ் பாடல்களை பாடி பக்தர்கள் பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளார்கள்.
இவர் இயற்றிய 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. வரும் கந்தசஷ்டி திருவிழாவின்போது (நவம்பர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை) பக்தர்கள் அனைவரும் திருப்புகழ் பாடல்களை பாடி முருகப்பெருமானை வழிபடுவோம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து மீண்டு, மனநிம்மதியையும் ஆன்மீக பலத்தையும் பெற்று, முருகனின் திருவருளால் தடைகளைத் தகர்த்து வாழ்வில் வெற்றி காணும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.