

உயிரற்ற பொருட்களுக்கும் உளமார்ந்த நன்றியை வெளிப்படுத்தும் விழாக்கள் நம் பண்பாட்டில் எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளன? இந்தியாவில் கொண்டாடப்படும் ஆயுத பூஜையும், மேற்கு நாடுகளில் விமரிசையாக நடைபெறும் 'தேங்க்ஸ் கிவிங்' விழாவும் ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளன என்பதை அறிவீர்களா? வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
செய்நன்றி கொன்றவர்களுக்கு உய்வேயில்லையென்று உரத்துக் கூறுகிறது நமது தெய்வப்புலவரின் திருக்குறள். நன்றி உடையவர்களே நானிலத்தில் உயர் இடத்தைப் பிடிக்கின்றனர் என்பது ஊரறிந்த உண்மை. உயிரற்ற பொருட்களுக்கு கூட உள்மன நன்றியினை உரித்தாக்கும் விழாக்கள் உலகம் முழுவதும், வெவ்வேறு பெயர்களில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த விதத்தில், நம் நாட்டில் கொண்டாடப்படும் ‘ஆயுத பூஜை விழா’வும், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடைபெறும் ‘தேங்க்ஸ் கிவிங் விழா’வும் ஒரே நோக்கம் கொண்டவையே!
நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளில் நாம் ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுகிறோம். தேவர்களுக்கும், மக்களுக்கும் அயராது தொல்லை அளித்து வந்த மகிஷாசுர அரக்கனை, அன்னை துர்கா தன் அசுர பலத்தால் நிர்மூல மாக்கினாள். அவளது ஆயுதங்களுக்குச் சக்தி அளித்த நாளே இந்த நன்னாள் என்று, புராணங்கள் புகழ் பாடுகின்றன.
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற உயரிய கோட்பாட்டின் கீழ் இயங்கும் மக்கள், அந்தத் தொழிலை அப்பழுக்கின்றி நிறைவேற்ற உதவும் ஆயுதங்களும் தெய்வநிலையை எட்டியவையே என்பதாக நினைந்து, அவற்றுக்குச் சிறப்புச் செய்யும் சிறந்த நாளே, இந்த ஆயுத பூஜை தினம்.
உழவைத் தொழிலாகக் கொண்டு பயிர் செய்து, உண்டி கொடுத்து உயிர்களைக் காப்பாற்றும் உழவர்கள் தங்கள் கலப்பைக்கும், பேனா பிடித்து ப் பணியாற்றிப் பெருந் தொகையான மக்களுக்கு உதவுவோர் பேனாவுக்கும், அதன் நீட்சியாகக் கம்ப்யூடரில் செயலாற்றிக் கடமையைச் செய்வோர் கம்ப்யூடருக்கும்-லேப் டாப்புக்கும், பெருந் தொழிற் சாலைகளில் இராட்சத எந்திரங்களை இயக்கிப் பணி புரிவோர் அவற்றுக்கும், வாள், துப்பாக்கி போன்ற கொடும் ஆயுதங்களைப் பயன்படுத்துவோர் அவற்றுக்கும், டூ வீலர், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுவோர் அவற்றுக்குமென்று, இப்படி அவரவர் அன்றாடம் தாங்கள் பணி புரிய உதவும் அனைத்துக்கும் ஓய்வளித்து, அவற்றைத் தூய்மைப்படுத்தி, அவற்றுக்குப் பூஜை செய்திடுவர். அடுப்படியில் தினம் உழைத்து, நமது வயிற்றுப் பசியைப் போக்கும் நமது அம்மாக்களும், சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியையும் சுத்தப்படுத்தி, பூஜைக்குத் தயார் செய்திடுவர்.
மாவிலைத் தோரணங்கள் கட்டி, பொரி, கடலை, சுண்டல், பழங்கள் மற்றும் இனிப்புகளைப் படைத்து, தீபாராதனை காட்டி வணங்குவர். நமக்கு உதவும் அனைத்தும் வணக்கத்திற்கு உரியவைதானோ!
இதில் நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன. சார்ஜ் செய்தால்தான் நம் கைபேசிகள் கூட வேலை செய்கின்றன. எந்திரங்கள் சீராக இயங்க வேண்டுமானால் முழுமையான பராமரிப்பும், அவற்றுக்கான ஓய்வும் தேவைப்படுகிறது. அதனை அறிந்தே, ஆண்டுக்கொரு முறை இவ்விழா சீருடனும், சிறப்புடனும் கொண்டாடப்படுகிறது. உயிரற்றவைக்கும், மனிதர்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் உன்னத விழா இது!
இந்தியாவில் ஆயுத பூஜை என்றால், அமெரிக்காவிலும், கனடாவிலும் தேங்க்ஸ் கிவிங் விழா. இவை இரண்டுமே ஏறத்தாழ ஒரே நேரத்தில்தான் நடத்தப்படுகின்றன.
நமது ஆயுத பூஜை அக்டோபர் 19 ல் இவ்வருடம் கொண்டாடப்படுகிறது. கனடாவில் ஒவ்வோர் ஆண்டின் அக்டோபர் மாத இரண்டாவது திங்கட்கிழமையும், அமெரிக்காவில் நவம்பர் மாத நான்காவது வியாழக் கிழமையும் தேங்க்ஸ் கிவிங் விழா நடத்தப்படுகிறது. அருமையான அறுவடையில் நல்ல விளைச்சலைத் தந்ததற்காகவும், அதன் மூலம் நல்ல உணவுப் பொருளைக் கொடுத்து எல்லோரையும் காப்பாற்றுவதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இது ஆரம்பிக்கப்பட்டதாம்.
பெறுகின்ற நன்மைகள், ஆசீர்வாதங்கள் ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாகவே இது நடைபெற்று வருகிறது.
இந்நாளின் பிரதான நிகழ்வாக, தேங்க்ஸ் கிவிங் டின்னர் (Thanks Giving Dinner) இடம் பெறுகிறது. இந்தப் பிரமாண்ட சிறப்பு விருந்தில் வான்கோழி வறுவல் (Roasted Turkey) முதன்மை பெறுவதுடன், க்ரான்பெர்ரி சாஸ் (Cranberry Sauce), உருளைக் கிழங்கு மசியல் (Mashed Potatoes) மற்றும் பறங்கிக்காய் பை (Pumpkin Pie) போன்ற பாரம்பரிய உணவுகள் அனைவருக்கும் பிரியமுடன் பரிமாறப்படுகின்றன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெசிஸ் தேங்க்ஸ் கிவிங் பேரட் (Macy’s Parade) கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் பலூன்களின் வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. நேரிலும், டிவியிலும் மக்கள் இதனைக் கண்டு களிக்கின்றனர்.
மேலும் இந்த நாளில், வசதி படைத்தவர்கள், வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் கருணை உள்ளத்துடன் சுவையான உணவு படைத்து மகிழ்கிறார்கள். இது முஸ்லீம் நண்பர்கள் கொண்டாடும் பக்ரீத்தை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உலகத்தில் வாழும் மக்கள், பல மொழிகளைப் பேசி, பல நாகரீகங்களைப் பின்பற்றிப் பல நாடுகளில் வசித்தாலும், அவர்களின் சிந்தனைகளும், அவர்கள் கொண்டாடும் விழாக்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியே உள்ளன!
ஈகையும், இரக்கமும், நன்றியறிதலும் எல்லா மக்களுக்கும் சொந்தம் என்பதை ஆயுத பூஜை, தேங்க்ஸ் கிவிங் போன்ற விழாக்கள் நிரூபிக்கின்றன.
வாசகர்கள் நமது பாரம்பரிய ஆயுத பூஜைக்கும் வெளிநாட்டு தேங்க்ஸ் கிவிங் விழாவிற்கும் இடையேயான அழகிய இணைப்பையும், நன்றியுணர்வின் உலகளாவிய பரிமாணத்தையும் உணர்ந்து பெருமிதம் கொள்வர்.