'கூலிக்கு மாரடித்தல்' என்றால் என்ன? இதுவும் ஒரு கலையன்றோ!

men dressed as women sing and cry into a mic & A crowd of people around them
culture of Professional mourning
Published on
mangayar malar strip

இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களே ஒப்பாரி என்கின்றனர். இறந்தவர்களின் இழப்பை எண்ணி இறந்தவர்களையும், தம்மையும் ஒப்பிட்டுப் பாடுவதும் ஒப்பாரியாகும். தாலாட்டும் ஒப்பாரியும் பெண்குலத்தின் படைப்பாகும். ஒப்பாரியை ஒப்பு + ஆரி எனப் பிரித்து ஒப்புச் சொல்லி அழுதல் எனச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

ஒப்பாரிப் பாடுதல் என்பதை ஒரு தொழிலாகச் செய்யும் கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். இதனைக் கிராமப்பகுதிகளில், 'கூலிக்கு மாரடித்தல்' என்று குறிப்பிடுகின்றனர். இறந்தவர்களின் வீடுகளில், மார்பில் அடித்துக் கொண்டேப் பாடுவதால் இது மாரடிப் பாட்டு என்று வழங்கப்படுகிறது. மாரடிப் பாட்டினைக் குறிப்பிட்ட இடம், காலம் என்று கணக்கிட்டு நிகழ்த்துவதில்லை. இறந்தவர்களின் வீடுகளில் மட்டுமே பாடப்படுகின்றது. இறந்தவர்களின் உடல் வீட்டிற்குள் இருக்கும் போது, மாரடிப் பாட்டுக் கலைஞர்கள் வீட்டின் முற்றத்தில் வாசல் பகுதியில் நின்று கொண்டு இதனை நிகழ்த்துகின்றனர்.

மாரடிப் பாட்டு வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறப்புச் சடங்கின் ஒரு பகுதியாக உள்ளது. பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இறந்துவிட்டால் மட்டுமே மாரடிப் பாட்டு நிகழ்த்தப்படுகிறது.

மிகவும் வறுமை நிலையில் வாடுபவர்களே இம்மாரடிப் பாட்டினை நிகழ்த்துவார்கள். இக்கலைஞர்கள் முதலில் இறந்தவர் ஆணா? பெண்ணா? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், அவர்களைப் பற்றிய பிற தகவல்களையும் தெரிந்து கொண்டு, அவர்கள் நிகழ்த்துக்கின்ற மாரடிப் பாட்டில் அத்தகவல்களைக் கலந்து பாடுகின்றனர். முதலில் இறந்தவர்களின் பெயரைக் குறிப்பிட்டு மாரடித்துக் கொள்வர். பின்பு பாடும் போது இரு கைகளாலும் மார்பிலும் தோள்களிலும் அடித்துக் கொள்கின்றனர். ஆண்கள் பெண்களாக வேடமிட்டு மாரடிப்பது உண்டு.

பொதுவாக, இறப்பு வீடுகளில் துக்க நிகழ்வில் கூலிக்காக வந்து துக்கம் அனுசரிப்பது போல் நடிப்பதனை ‘கூலிக்கு மாரடித்தல்’ அல்லது ‘தொழில்முறை துக்கம் கொள்பவர்கள்’ என்று சொல்லலாம். இவர்களை, உண்மையாகத் துக்கப்படுபவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் தொலைந்த வைரம்: கோஹினூர் திரும்பி வருமா?
men dressed as women sing and cry into a mic & A crowd of people around them

ஒரு தொழிலாக இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைக் கடந்து, எகிப்து, சீனம், நடுநிலக் கடல், அண்மைக் கிழக்குப் பகுதிகளிலும் கூலிக்கு மாரடிக்கும் தொழிலைச் செய்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர். வெறுமனே நீண்ட, உரத்த, உயர்ந்த குரலில் அழுகையை எழுப்பும் துக்கப்படுபவர்கள் (Wailers), தொழில்முறை துக்கப்படுபவர்கள் (Moirologists), ஊமைத்தன்மை (Mutes) என்றும் அழைக்கப்படுகின்றனர்.

புலம்புவதற்கு அல்லது புகழ்பாடி ஒப்பாரி வைப்பதற்கு, துக்க வீட்டுக் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க, இறுதிச் சடங்கு நிகழ்வை மேம்படுத்துவதற்கு ஊதியம் பெறுகிறவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

கூலிக்கு மாரடிக்கும் செயலைச் செய்ய பணியமர்த்தப்பட்டவர்கள் பெரும்பாலோர் பெண்களாகவே இருக்கின்றனர். ஆண்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு காரணமாக அவர்கள் இதற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர்.

துக்க நிகழ்வு என்பது சில நேரங்களில் பெண்களுக்குக் கிடைக்கும் ஒரு சில ஊதியத் தொழில்களில் ஒன்றாகும். ஒரு துக்க நகழ்வில் துக்கம் கடைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கைக் கூடுதலாக இருப்பது செல்வம், சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

பண்டைய எகிப்தில், துக்கம் அனுசரிப்பவர்கள் துக்கத்தைக் கூடுதலாகக் காண்பிப்பார்கள். அப்போது முடியைக் கலைத்துப் போடுதல், உரத்து அழுதல், மாரில் அடித்துக் கொள்ளுதல், உடலில் மண்ணைப் பூசிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்வர். இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பிணத்தைப் பின்தொடரும் மக்கள் கூட்டத்தை கல்லறைகள் மற்றும் பிரமிடுகளில் சித்தரித்து செதுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
பிரமிக்க வைக்கும் பிரமாண்டம்! உலகின் மிகவும் உயரமான 7 பிரபலமான சிலைகள்!
men dressed as women sing and cry into a mic & A crowd of people around them

சீனாவில், 756 முதல் சீன இறுதிச் சடங்குகளில் தொழில்முறை துக்கப்படுபவர்கள் தொடர்ந்து கலந்து கொள்கிறார்கள். இறுதிச் சடங்கு ஊர்வலங்களின் போது நிகழும் நாடக நிகழ்ச்சிகளிலிருந்து தொழில்முறை துக்கப் பாரம்பரியம் உருவாகியிருக்கிறது. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இறுதிச் சடங்குகளில் இசை நிகழ்ச்சிகள் இருந்தன. அத்தகைய ஒரு காட்சியை அறிஞர் ஜீஹீ ஹாங் விவரித்துள்ளார்.

இதேப் போன்று, உரோமானிய வரலாற்றில், இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் துக்கப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டனர். மேலும், அவர்கள் பெரும்பாலும் நாடக நிகழ்ச்சியாக கருதப்பட்டனர். ஆரம்பகால வரலாற்றில், Praeficiae என்று அழைக்கப்படும் கூலிக்கு மாரடிப்பவர்கள், இறந்தவர்களுக்காகப் பாடுவதற்காக இறுதி ஊர்வலத்தில் இசைக்கலைஞர்களைப் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர்.

கூலிக்கு மாரடிப்போர் போலியாக அழுதாலும் சுற்றுச்சூழலின் கவனத்தைத் திருப்பி மரண வீட்டினைச் சோகம் ததும்ப வைத்திருப்பர்.

இறந்தவரைப் பற்றிய புகழ், அவரது நிறைவேறா ஆசைகள், கடைசியாக அவர் சாப்பிட்ட உணவு, அவரது இறுதி வார்த்தைகள் என உறவினர்களால் அவ்வப்போது சொல்லிக் கொடுக்கப்படும் குறிப்புகளை ஓலங்களாக அவர்கள் எழுப்பிக் கொண்டிருப்பர்.

மாரடிப்பில் ஒருவர் முன்னே பாடி மாரடிக்கப் பின்னே பலர் பின்பாட்டோடு மாரடிப்பர். அப் பின்பாட்டும் முன்பாட்டும் தொடர்பு கொண்டு முழுமையாகும். தொடர்பு சரியாக அமையாவிடில், மாரடி அவலத்திற்கு மாறாக, நகைப்புக்கு இடமாகி விடும்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரியத்தின் பாதை – காலத்தை கடந்த பயணம்!
men dressed as women sing and cry into a mic & A crowd of people around them

கிராமப்புறங்களில் முன்பெல்லாம், இறப்பு வீடுகளிலிருந்து, இறந்தவரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் வரை சோகம் நிறைந்திருக்கும். இதற்காக, கூலிக்கு மாரடித்து தொழில் செய்பவர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். நாகரீக வளர்ச்சியில் இந்தக் கலையும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கான கலைஞர்களும் தற்போது அதிகமாக இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com