
நாம் எதையாவது ஒரு பொருளை பார்த்து விட்டால் அது பழைய ஞாபகத்தை தூண்டுவதாக இருக்கும். அதைப்பற்றி யாராவது பேசினாலும் அதே தான் நினைவுக்கு வரும். அது போல் நடந்த ஒரு சம்பவத்தை இப்பதிவில் காண்போம்.
அப்பொழுதெல்லாம் பள்ளிகளில் அரை மணி நேரம் நீதிபோதனை வகுப்பு இருக்கும். நீதி போதனை கதைகளை சொல்வதுண்டு. ஒரு நாள், யார் யாருக்கு என்னென்ன கலைகள், கைத்தொழில்கள் தெரியும்; அழகு குறிப்பு, சமையல் யாருக்கு தெரியும் என்று ஆசிரியர் அனைவரையும் கேட்டுக் கொண்டு வந்தார். அப்பொழுது சிலர் அவரவர் வீட்டில் செய்த அழகு குறிப்புகளை கூறினர். ஒரு பெண் சமையல் குறிப்புகளை அதிகமாக கூறினார். அவர் கூறுவதைப் பார்த்தால் அவரே சமைத்திருப்பது போல் தெரிய வந்தது.
ஆதலால் ஆசிரியர் அவரிடம், "உனக்கு சமைக்க தெரியுமா? இவ்வளவு நன்றாக சொல்கிறாயே!" என்றதற்கு, அந்தப் பெண், "ஆமாம் மிஸ், தினசரி நான்தான் சமைத்து அம்மாவுக்கும் சாப்பாடு வைத்துவிட்டு, பள்ளிக்கும் எடுத்து வருகிறேன்" என்று கூறினார். ஆசிரியர் ஏன் என்று காரணம் கேட்டதற்கு, "எனது அப்பா வீட்டில் இருக்கும் இரண்டு பஞ்சு மரங்களில் (cotton tree) உள்ள பஞ்சுகளை சுத்தம் செய்து தலையணை மெத்தை போன்றவற்றை செய்து மற்றவர்களுக்கு விற்பனை செய்வார். பஞ்சு மில்லிலும் வேலை பார்த்தார். சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இப்பொழுது எங்க அம்மா அந்த வேலையை செய்வதால் நான் சமைத்து எடுத்து வருகிறேன்," என்று கூறினாள். சில நாட்கள் கழித்து அவளின் அம்மாவும் இறந்து விட்டார்.
அதேபோல் எங்கள் வீட்டிற்கும் நாலாவதாக உள்ள ஒரு வீட்டில் பஞ்சு மரம் இருந்தது. அதன் அடிப்பகுதியிலிருந்து பச்சை பசேல் என்று இருப்பதால் அதன் மீது எங்கள் அனைவருக்கும் ஒரு ஆசை உண்டு. மேலும் அந்த வீட்டில் அந்த அம்மாவுக்கு இரண்டு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தது. ஆதலால் அவர்களுடன் விளையாட, தூக்கி வைத்து கொஞ்சுவதற்கு அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி செல்வது உண்டு. அப்பொழுது அந்த பஞ்சு மரத்தில் காய்க்கும் காய்களையும் பார்த்து ரசிப்பதுண்டு.
அதேசமயம், அவர்கள் வீட்டில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பஞ்சம் வறுமை ஏழ்மை இருந்தது. இருப்பினும் அவர்களின் மூத்த மகன் படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து சற்று முன்னேறும் நேரம் வந்தது. அப்பொழுது இந்த அம்மா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
போகியன்று எங்கள் வீட்டிற்கு புதிதாக திருமணமான எங்கள் உறவினப் பெண் பொங்கலுக்காக வந்திருந்தார். அன்று இரவு அந்த அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாததால் நள்ளிரவில் அவரை பார்ப்பதற்காக இவரும் அவரின் கணவரும் அவர்கள் வீட்டிற்கு செல்ல, அந்த நேரத்தில் அந்த அம்மா இறந்து விட்டார்கள். அதன் பிறகு அவரின் கணவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். நாளடைவில் அந்த வீடும் சிதிலமாக, அந்த பஞ்சு மரத்தை வெட்டி விட்டு புதிதாக அவரின் பையன் வீடு கட்டினார். மற்ற ஐந்து தம்பி தங்கைகளையும் அரவணைத்துக் கொண்டார்.
அதேபோல், எங்கள் உறவினப் பெண் வீட்டிலும் ஒரு பஞ்சு மரம் இருந்தது. அதைப் பார்ப்பவர்கள், "ஒன்று இந்த வீட்டை மாற்றுங்கள் அல்லது பஞ்சு மரத்தை வெட்டுங்கள்" என்று கூறுவார்கள். அப்பொழுது என் உறவினப் பெண் வீட்டில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்த நிலையில் இருந்தனர்.
அவரின் கணவரும் ஹார்ட்டிகல்ச்சர் (Horticulture) படித்தவர். அந்த வேலையில் தான் இருந்தார். ஆதலால் இதெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறி அதில் விழும் பஞ்சு காய்களையே மெத்தை, தலையணைக்குப் பயன்படுத்தினர். திருமணம் ஆகி 15-வது வருடத்தில் உறவினப் பெண்ணின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
இதனால் பணப்பற்றாக்குறை, தொடர்ந்து வாழ்வில் சோகம் என்று குடும்பத்தில் சூழ ஆரம்பித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் என் உறவினப் பெண்ணுக்கும் நோய் தாக்கம் ஆரம்பித்து விட்டது. அப்பொழுது தான், "அந்த பஞ்சு மரத்தையும் அதில் செய்த தலையணை, மெத்தைகளையும் பார்த்து ஒரு வேளை இந்த மரத்தை அப்பொழுதே வெட்டி இருந்தால் இதெல்லாம் நிகழ்ந்திருக்காதோ என்னவோ தெரியவில்லை. எத்தனையோ பேர் சொன்னதை நாங்கள் காது கொடுத்தும் கேட்கவில்லை. இப்பொழுது இதையெல்லாம் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது" என்று கூறி அந்த மெத்தை, தலையணைகளை தூக்கி பஞ்சு மரத்துக்கு அடியில் வீசினார். பிறகு இறந்தும் விட்டார். அவர் இறந்த நாள் கிறிஸ்துமஸ் தினம். அவரின் கணவர் வீட்டார் கிறிஸ்துமஸை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அவர் இறந்த பிறகு யாரும் கொண்டாடுவதில்லை.
அந்த சமயங்களில், 'மரம் என்பது இயற்கை தந்த வரம். அதில் வரும் பஞ்சு அந்த மரம் கொடுக்கும் கொடை. அதை நாம் கொண்டாட வேண்டும். அதை விடுத்து இயற்கையாக நிகழும் ஒரு இறப்பை ஒரு மரத்தில் ஏற்றி சொல்வதால் அதை ஒரு தற்குறிப்பேற்றணி என்றுதான் குறிப்பிட வேண்டும்' என்று நினைத்த துண்டு. ஆனால் இன்று, அதை நினைத்துப் பார்க்கும்போது பஞ்சு மரத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று வாஸ்துவாக சொல்வதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள தூண்டுகிறது. நேரடியாக இதையெல்லாம் பார்த்ததால் ஏற்பட்ட தாக்கமேயின்றி வேறென்ன என்று சொல்வது?
கிராமப்பகுதிகளில், பஞ்சு மரத்தை வீட்டில் வைக்கக்கூடாது என்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அது அந்த குடும்பத்தை பாதிக்கும், எதிர்மறை ஆற்றலும் ஏற்படுத்தும் என்ற மூடநம்பிக்கையால் தான். ஆனால் இந்த மூடநம்பிக்கை இன்றும் பரவலாக இருக்கு, அதை இன்றும் பலர் நம்புகின்றனர்.
ஆனால் உண்மையான காரணமாக சொல்லப்படுவது, பஞ்சு மரத்தில் இருந்து வரும் பஞ்சு காற்றில் பரவுவதால், அதை அருகில் இருப்பவர்கள் சுவாசிக்கும் போது ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும் என்பதும் தான் முக்கியமான காரணம். அதை தான் மூடநம்பிக்கையில் திரித்து சொல்லிட்டாங்கனு நினைக்கிறேன். சில மரத்தின் காற்று, அந்த மண் அந்த இடத்தில் நிகழும் வேதியியல் மாற்றங்கள் உடம்பில் பட்டாலே நோய் என்பார்களே!
உண்மையான காரணம் மறைந்து, சிலரின் இந்த மூடநம்பிக்கையே தற்போது உண்மையாக மாறிவிட்டதோ?