

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக திரைத்துறையில் கால் பதித்து, புதிய வார்ப்புகள் படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்து பெற்று, இயக்குநர் மற்றும் திரைக்கதை மன்னராக தமிழ்த் திரையுலகில் கோலோச்சியவர் கே. பாக்யராஜ்.
இவரது கதைகள் மேலோட்டமாகப் பார்த்தால் சட்டென்று கவரும். ஏற்கனவே நடந்தது போன்ற உணர்வை தந்தாலும், ஆழ்ந்து கவனித்தால் தெரியும் அவர் தொட்டு விளக்கிய சமூகத்தின் அமைப்புகள். அவரது கதைகள் ஒவ்வொன்றும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கை, சாதி, ஏழை-பணக்காரர் பாகுபாடு மற்றும் குடும்ப உறவுகளின் சிக்கல்களை நகைச்சுவையுடன் அலசும். அதே சமயம் சவுக்கடி போல் இருக்கும்.
சமூகத்தின் ஆழமான கருத்துகளையும் மனிதரின் காதல் சார்ந்த உணர்வுகளையும் சாமானியர்களும் புரிந்துகொள்ளும் விதமாக எளிமையான திரைக்கதையில் சொல்வது இவரது தனிச்சிறப்பு. நாம் எதை முரண்பாடு என எண்ணுகிறோமோ அதை சிரித்தபடியே நமக்குள் கடத்துவதில் பாக்யராஜை மிஞ்சியவர் எவருமில்லை எனலாம். அதனால் தான், இளம் இயக்குநர்கள் பலரும் திரைக்கதை அமைக்க அவரது படங்களைப் பார்த்து கற்றுக் கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.
அப்படி என்ன சமூக மாற்றங்களை இவரது படங்கள் சொன்னது? மறைந்த பாக்யராஜ் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது சிறந்த படக் கருத்துகள் சில இங்கு..
தமிழ்நாட்டில் நிலவிய மூடநம்பிக்கைகளை சற்றே உடைத்ததில் இவருக்கும் பங்குண்டு எனலாம். பாக்யராஜ் தனது படங்களில் ஜோதிடம், சகுனம், ஜாதகம் போன்ற மூடநம்பிக்கைகளை மிகவும் யதார்த்தமாக எடுத்துக் காட்டி கேள்விக்குள்ளாக்கியிருப்பார்.
குறிப்பாக சிக்கலான தாலி செண்டிமெண்ட் கதைகளுக்கு, அருமையான நகைச்சுவை திரைக்கதை அமைத்து இமாலய வெற்றி கண்டவர் இவரே. உதாரணமாக 'அந்த 7 நாட்கள்' படத்தை சொல்லலாம். தீவிரமாக காதலித்த தமிழ்ப் பெண்ணும் மலையாள இளைஞரும் காதல் கைகூடாமல் வேறொருவருடன் பெண்ணுக்குத் திருமணம் முடிய, அந்தப் பெண் தனது காதலை விட்டுத் தராமல் புது வாழ்வில் பொருந்தாமல் பிடிவாதம் காட்ட, அந்த சூழலில் கணவர் எடுக்கும் முடிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சி தந்தது எனில் அதை விட நாயகனான மலையாள இளைஞர் கொடுக்கும் சாட்டையடி பார்த்தவர்கள் மனதை நிறைத்தது எனலாம்.
ஆம். தனது மனைவியை அழைத்துச் செல்லும்படி அவள் காதலனிடம் கெஞ்சும் கணவரிடம் "என்ட காதலி உங்களுக்கு மனைவியா வரலாம்.. பக்சே... உங்க மனைவி ஒரு நாளும் எனக்கு காதலியா வரமாட்டா...' என்று சொல்லும் நெத்தியடி வசனம் மூலம், இன்றும் அந்த 7 நாட்கள் படத்தை மறக்க விடாமல் பேசும் பொருளாக இருந்து வருகிறது.
சாதி மற்றும் ஏற்றத்தாழ்வு எதிர்ப்புகளை இவரது படங்களில் காணலாம். அதற்கான உதாரணம் தான் "இது நம்ம ஆளு" திரைப்படம். இளையவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வயது வந்தவர்களுக்கான படமாக அப்போது பேசப்பட்டது. அதற்கு காரணம் ஒரு பிராமண இளைஞனுக்கும், பிராமணரல்லாத பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல்.
ஒரு சூழலில் திருமணத்தில் இணைபவர்கள் பிராமணப் பெண்ணின் தகப்பனாரின் தீவிர எதிர்ப்பால், இளைஞரிடம் பெற்ற சத்தியத்தால், தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் போக நேரிடுகிறது. இதை எதிர்த்து தனது தந்தையிடம் போராடும் அப்பெண் இறுதியில் உயிரையும் இழக்கத்துணிய சத்தியத்தை மீறுகிறார் அந்த கணவர். அதே நேரம் தனது சாதி காதலால் வேறு சாதியில் கலந்து விட்டதை சகியாமல் தந்தை தற்கொலைக்கு முயல அதைத் தடுத்து பேசும் சாதி ஒழிப்பு வசனங்கள் அப்போது அப்ளாஸ் கிடைத்தது.
சாதி கடந்த காதலுக்காக பெண்ணின் தாத்தா பேசுவது போல போற போக்கில் அசால்ட்டாக எழுதியதுதான் 'நாரோடு சேர்ந்து பூவும் நாறிடுச்சு' என பழமொழியை மாற்றிய வசனம் அதில் ஒன்று. .
இவரது கதைகளில் ஏழை எளியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் அழுத்தமாக ஒலிக்கும். அதை விட அதிகமாக தாம்பத்ய உறவுகளை அதன் இலக்கணம் மாறாமல் அதே சமயம் சுவாரஸ்யமாக காலம் காலமாக இருந்து வரும் நியதிகளை உடைத்திருப்பார். அதற்கு உதாரணமாக 'முந்தானை முடிச்சு' படத்தை சொல்லலாம்.
தனது கிராமத்திற்கு கைக் குழந்தையுடன் வாத்தியாராக வருபவர் மனைவி இழந்தவர் எனத் தெரிந்ததும் குறும்புக்கார நாயகி அவரின் மீது காதலுடன் கணவராக அடையும் பொருட்டு அவருடன் உடலளவில் இணைந்து விட்டதாக பொய் சொல்லி திருமணம் செய்து கொள்வாள். இதற்கு தண்டனையாக அவளைப் புறக்கணிக்கும் நாயகனின் மனதை எப்படி மாற்றுகிறார் என்பதுதான் கதை.
காதலை ஏற்றுக் கொள்ளும் மனமில்லாத அந்தக் காலத்தில் படித்த வாத்தியார் மீது சாதி அற்ற தூய காதலையும் அதற்காக ஒரு பெண் மேற்கொள்ளும் துணிவையும் காட்டி பெண்களின் இயக்குநரானார் பாக்யராஜ். குறிப்பாக மூட நம்பிக்கையை எதிரான குழந்தையைப் போட்டுத் தாண்டும் சீன் அப்போது பலவிதமான விவாதங்கள் கிளப்பியது. சமூக அந்தஸ்தையும் சாதியையும் குறிப்பாக மூடநம்பிக்கைகளைத் தாண்டி மனிதநேயமே உயர்ந்தது என்பதை அப்படத்தில் ஆழமாக வலியுறுத்தியிருப்பார் பாக்யராஜ்.
பெண்ணியம் என்று இன்று அங்கீகரிக்கப்பட்ட பல விஷயங்களை அன்றே தனது படங்களில் புகுத்தியவர் பாக்யராஜ். பெண்களின் கல்வி, சுயமரியாதை மற்றும் குடும்பத்தில் பெண்களின் பங்கு ஆகியவற்றை மையப்படுத்தி பல கதைகளை உருவாக்கியுள்ளார். அதில் ஒன்று தான் "சுவரில்லாத சித்திரங்கள்".
பெண்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்காமல், சமூகத்தில் அவர்களுக்குரிய மரியாதையும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி இறுதியில் வேறு வழியின்றி அந்தக் காலப் போக்கின் படி சமூகத்திற்காக பயந்து போராடிய அனைவரையும் தற்கொலைக்கு ஆளாக்கியிருப்பார்.
ஆதரவற்ற பெண்களை அவர்களின் பொருளாதாரத் தேவைகளுக்காக தங்கள் இச்சைக்கு பயன்படுத்தி கொள்ளும் ஆண்களையும் வேறு வழியின்றி அதற்கு துணை போகும் பெண்களின் நிலையையும் சுட்டிக் காட்டி அதிலுள்ள நியாயங்களை காட்டியிருப்பார்.
யாரும் தொடத்தயங்கும் தாலி மற்றும் சம்பிரதாயங்கள் பற்றிய பார்வைகளை மாற்றியவர் இவர். 'தூறல் நின்னு போச்சு', 'சுவர் இல்லாத சித்திரங்கள்' போன்ற படங்கள் மூலம் வெறும் தாலி செண்டிமெண்டை மட்டும் நம்பி வாழும் சமூகத்திற்குப் பதிலாக, மனிதர்களின் உண்மையான அன்பும் புரிதலுமே குடும்ப வாழ்க்கைக்கு அச்சாணி என்பதை உணர்த்தியுள்ளார்.
பொதுவாகவே பாக்யராஜ் படங்களில் வரும் கதாநாயகர்கள் வெகு சாமானியர்களாகவும், வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை வைத்து மிகச்சிறந்த சமூகப் பாடங்களை இவர் கற்றுத் தந்திருப்பார். அதில் ஒன்று "தாவணிக்கனவுகள்". தங்கைகளின் நலனுக்காக தனது கனவை தியாகம் செய்யும் அண்ணனாக பொருளாதாரத்துக்காக போராடும் இளைஞராக சமூகத்தில் வலிமையற்றவர்களின் வலியை உணர்த்தியிருப்பார்.
இப்படி அவரது ஒவ்வொரு படங்களிலும் இந்த சமூகத்திற்கான செய்தி ஒன்று ஒளிந்திருக்கும். இந்த அற்புதமான கலைஞர் என்றும் அவரது முற்போக்கான திரைப்பட கருத்துகளால் திரையுலக ரசிகர்கள் இடையே நிலைத்து இருப்பார்.