
நாம் நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், நாள்ப்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கவும் வாழ்நாளை நீட்டிப்பதற்கும் உதவும் உணவு வகைகளை தேடிப்பிடித்து உட்கொண்டு வருகிறோம். அவற்றில் ஜப்பானிய உணவு வகைகள், மெடிட்டரேனியன் உணவு வகைகள் என பல நாடுகளைச் சேர்ந்த உணவுவகைகளும் அடங்கும். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது 'கிளிமஞ்சாரோ டயட்'.
மிகவும் சிம்பிளான வெண்டைக்காய், கிட்னி பீன்ஸ், முழு தானியமான கார்ன் மற்றும் 'ம்பெக்' (Mbege) எனப்படும், சிறுதானியத்துடன் வாழைப்பழம் சேர்த்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் ஒரு வகை பானம் ஆகியவை அடங்கிய உணவே 'கிளிமஞ்சாரோ டயட்' என அழைக்கப்படுகிறது.
தொழில் முறை பதப்படுத்துதலுக்கு உட்படாத இந்த வகை உணவுகள் அதிக ஊட்டச் சத்துக்கள் நிறைந்தவை. நாள்ப்பட்ட வியாதிகள் உண்டாவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் உடலின் வீக்கங்களை எதிர்த்துப் போராடக் கூடிய இயல்புடையவை. பாரம்பரியமாக கிளிமஞ்சாரோ டயட்டைப் பின்பற்றுவதால் தான்சானிய நாட்டு மக்கள் வெஸ்ட்டர்ன் நாட்டு மக்களை விட அதிக ஆரோக்கியம் மிக்கவர்களாக விளங்குகின்றனர்.
தான்சானியாவின் சுமார் 25 வயதுள்ள 77 ஆண்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். வெவ்வேறு வகையான உணவுகளை உட்கொள்ளச் செய்து அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை பரிசோதித்ததில் கிளிமாஞ்சரோ டயட்டை உட்கொண்ட 23 நபர்களின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரித்தும், உடல் வீக்கங்கள் குறைவடைந்தும் காணப்பட்டது. மேலும், சோதனைக் காலம் முடிந்த பின்னும் வராக் கணக்கில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவின்றி அதே நிலையில் இருந்தது ஆச்சர்யப்பட வைத்தது.
இதற்கு மாறாக, கிளிமாஞ்சரோ டயட்டை விட்டு விட்டு, ஒயிட் பிரட், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட சாஸேஜ் போன்ற பக்கா வெஸ்ட்ர்ன் உணவுவகைகளை உட்கொண்டு வந்தவர்களின் உடலில், வீக்கம் உண்டு பண்ணச் செய்யும் ப்ரோட்டீன் அளவு உயர்ந்திருப்பதையும், நோயெதிர்ப்புச் சக்தி குறைந்திருப்பதையும் காண முடிந்தது.
அமெரிக்கர்களின் உணவு முறை, படிப்படியாக உடலில் வீக்கங்களை அதிகரிக்கச் செய்கிறது. மெட்டபாலிஸ ரேட்டை சமநிலையற்றதாக ஆக்குகிறது. அமெரிக்காவில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை, தான்சானியாவின் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது.
க்ரீஸ் மற்றும் இத்தாலி போன்ற,100 வயதை கடந்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளை ப்ளூ சோன் என்கின்றனர். தான்சானியா இன்னும் அந்த நிலையை எட்டவில்லையெனினும், கிளிமாஞ்சரோ டயட்டை பின்பற்றுவதன் மூலம், நீரிழிவு, கேன்சர் மற்றும் இதய நோய்களின் தாக்கம் குறையும் வாய்ப்பேற்பட்டு, விரைவிலேயே நூறு ஆண்டுகளை கடந்தவர்களின் எண்ணிக்கை தான்சானியாவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் கிம்ச்சி, சார்க்ராட் (sauerkraut) போன்ற நொதிக்கச் செய்த உணவுகளை உட்கொண்டு நாமும் நெடுங்காலம் வாழ்வோம்.