குறைவான செலவில் வீட்டை அழகாக்கும் சுடுமண் சிற்பங்கள்!

குறைந்த செலவில் வீட்டை இயற்கை முறையில் அழகாக மாற்ற உதவும் சுடுமண் சிற்பங்களின் அலங்கார முறைகள் மற்றும் பராமரிப்பு டிப்ஸ்.
சுடுமண் சிற்பங்கள் | Terracotta sculptures
சுடுமண் சிற்பங்கள் | Terracotta sculpturesImage credit: Gemini AI
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 
MM strip
MM strip

வீட்டிற்குப் பெருமை சேர்க்கும் பாரம்பரியக் கலை அழகை குறைந்த செலவில் கொண்டு வர விரும்புகிறீர்களா? விலையுயர்ந்த நவீனப் பொருட்களுக்கு குட் பை சொல்லிவிட்டு, இயற்கையான சுடுமண் சிற்பங்கள் மூலம் உங்கள் இல்லத்தை எப்படி கம்பீரமாகவும் நேர்த்தியாகவும் மாற்றுவது என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

வீட்டிற்கு ஒரு தனித்துவமான கலை அழகையும், பாரம்பரியப் பொலிவையும் தரும் சுடுமண் சிற்பங்கள். நம்முடைய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், வீட்டிற்கு நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்றத்தை தருவதிலும் இந்த சூடுமண் சிற்பங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறைந்த செலவில் வீட்டை இயற்கை முறையில் அழகுபடுத்த இந்த சிற்பங்கள் உதவுகின்றன.

வீட்டுக்கான அலங்காரத் தோரணங்கள், சிறிய மேஜைகள், விளக்குகளுக்கான நிழற்கூடுகள் போன்றவை வீட்டை அழகாக்குகின்றன. விலை உயர்ந்த நவீன அலங்காரப் பொருட்களைக் கொண்டு வீட்டை அழகு படுத்துவதை விட இம்மாதிரியான சுடுமண் பொருட்களைக் கொண்டு அழகு படுத்த செலவு குறையும், வீட்டிற்கு அழகான தோற்றத்தையும் தரும்.

1) வரவேற்பறை அலங்காரம் (Living Room):

வரவேற்பறையை கம்பீரமாக மாற்ற யானை, குதிரை வடிவத்திலான பெரிய அல்லது சிறிய சுடுமண் சிற்பங்களை வைக்கலாம். இவற்றை வைப்பதற்கான சிறிய யானை முகம் கொண்ட ஸ்டூல் எனப் பலவகையான பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றை அழகாக இடத்திற்கு ஏற்ப வைத்து வரவேற்பறையை அழகு படுத்தலாம்; அலங்கரிக்கலாம். இவற்றைத் தவிர புத்தர் மற்றும் காந்தி போன்ற மகான்களின் சிறிய சிலைகளும் வரவேற்பறைக்கு ஒரு அமைதியான மற்றும் அழகான தோற்றத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
ஃபிரிட்ஜ் வரலாறு மற்றும் எளிமையான பராமரிப்பு டிப்ஸ்!
சுடுமண் சிற்பங்கள் | Terracotta sculptures

வரவேற்பறை டீப்பாய் அல்லது அலமாரிகளில் வைப்பதற்கென்று சிறிய அளவிலான அழகான சிலைகள், பொம்மைகள் கிடைக்கின்றன. இவற்றை அதற்கான இடத்தில் வைத்து விட வரவேற்பறையே ஒரு புதிய அழகைப் பெறும்.

2) பால்கனி & தோட்ட அலங்காரத்தில்:

பால்கனியை அழகுபடுத்த அன்னப்பறவை, காளை போன்ற விலங்கு வடிவங்களிலான பூந்தொட்டிகள் சிறப்பாக இருக்கும். மேலும் பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்ட தொங்கும் சுடுமண் மணிகள் (Terracotta Chimes/Bells) பால்கனிக்கு அழகிய தோற்றத்தையும், ஓசையையும், நேர்த்தியையும் தரும். ஓசை எழுப்பும் சிம் அலங்கார மாலைகள் முன்பு மூங்கில், பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் கிடைத்தன.

இப்பொழுது இவை சுடுமண்களிலும் விதவிதமான வண்ணங்களில், பாரம்பரியமான பூஜை மணியின் வடிவத்தில் கிடைப்பதால் பால்கனி மற்றும் பூஜை அறையின் முகப்பில் தொங்கவிட அழகான தோற்றத்தைத் தரும். அத்துடன் காற்றில் அசையும் பொழுது இனிமையான ஓசையையும் எழுப்பும்.

தோட்டத்தை அழகாக்க பலவிதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் பூந்தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் சிறு மண்பாண்டங்கள் ஆகியவையும் கிடைக்கின்றன. முக்கியமாக தோட்டத்தை அலங்கரிக்க துளசி மாடம் வெவ்வேறு அளவுகளில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. இவை தோட்டத்தை ஒரு அற்புதமான இடமாக மாற்றுகிறது.

சுடுமண் சிற்பங்கள் | Terracotta sculptures
சுடுமண் சிற்பங்கள் | Terracotta sculpturesImage credit: Gemini AI

3) பூஜை அறை சிலைகள்:

விநாயகர், லட்சுமி போன்ற தெய்வங்களின் அழகிய சிலைகளையும் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அத்துடன் வீட்டின் நுழைவாயிலில் சுடுமண் உருளியில் தண்ணீர் நிரப்பி, பூக்களை மிதக்க விடுவது மங்களகரமான தோற்றத்தைத் தரும்.

4) சுவர் அலங்காரம் (Wall Decor):

சுவர்களில் மாட்டி வைக்கக்கூடிய பாரம்பரிய கலைநயம் மிக்க சுடுமண் தட்டுகள் மற்றும் சிறிய ஓவியங்கள் வீட்டின் சுவர்களுக்கு புதிய பொலிவைக் கொடுக்கும்.

பழங்குடி மனிதர்களின் முக அமைப்பைக் கொண்ட சுவர் சிற்பங்களும், சூரிய கடவுளின் சிற்பங்களும், நடன கலைஞர்களின் உருவங்களும், இயற்கை காட்சிகளும் சுவர் அலங்காரத்தில் தனிச்சிறப்பைப் பெறுகின்றன.

5) விளக்கு மாடங்கள்:

மாலையில் பால்கனியில் ஏற்றுவதற்கு ஏற்ற துளைகள் கொண்ட சுடுமண் விளக்குக் கூண்டுகள் அழகான ஒளி அமைப்பைத் தருவதுடன், கலைநயம் மிக்க தோற்றத்தைத் தந்து வீட்டிற்கும் அழகு சேர்க்கும்.

6) பறவைகளுக்குத் தண்ணீர் கிண்ணம்:

பால்கனியின் சுவர்களில் தொங்க விடக்கூடிய அல்லது தரையில் வைக்கக்கூடிய சுடுமண் தண்ணீர் பாத்திரங்களை வைக்கலாம்.

7) சுடுமண் சிற்பங்களின் சிறப்புகள்:

களிமண்ணால் செய்யப்பட்டு, சூளையில் சுடப்பட்டு உறுதியாக உருவாக்கப்படுவதால் இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் இயற்கையானது.

இதையும் படியுங்கள்:
திருமணத் தடையை நீக்கும் 1300 ஆண்டுகள் பழமையான தர்மபுரி கோட்டை கோவில்!
சுடுமண் சிற்பங்கள் | Terracotta sculptures

எளிதில் தேய்மானம் அடையாது; துருப்பிடிக்காது மற்றும் பல வண்ணங்களில் கிடைப்பதால் வீட்டின் உட்புற வடிவமைப்பிற்கு மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

சுடுமண் சிற்பங்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இன்றும் சில கிராமங்களில் காவல் தெய்வங்களாக கோவில்களில் சுடுமண் சிற்பங்களே இருப்பதும், மூலவர் மட்டுமின்றி குதிரை, நாய் போன்ற சுடுமண் சிற்பங்களுக்கும் பூஜை செய்து வழிபடும் வழக்கம் நிலவி வருகிறது.

8) பராமரிப்பு முறைகள்:

சுடுமண் பொருட்களை சுத்தம் செய்ய ரசாயனங்கள் கலந்த சோப்புகளை பயன்படுத்த வேண்டாம்.

மென்மையான உலர்ந்த துணி அல்லது சிறிய பிரஷ் கொண்டு தூசுகளைத் தட்டி பராமரிக்கலாம்.

வண்ணம் தீட்டப்பட்ட சிலைகள் எனில் அதன் மேல் நேரடியாகத் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சுடுமண் சிற்பங்கள் குறைந்த செலவில் ரசாயனங்கள் அற்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, உங்கள் இல்லத்திற்குச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய அழகையும் கம்பீரமான தோற்றத்தையும் பெற்றுத் தருகிறது.