

இன்றைய நவீன உலகில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால், இந்த குளிர்சாதனப் பெட்டி எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? மைக்கேல் பாரடே மற்றும் ஜேக்கப் பார்க்கின்ஸ் ஆகியோரின் உழைப்பில் தொடங்கி, காலத்திற்கேற்ப எப்படிப் பரிணமித்தது என்பதன் பின்னணியை அறிவது ஆச்சரியமானது. அதுமட்டுமின்றி, மின்சாரச் செலவைக் குறைக்கவும், காய்கறிகள் மற்றும் உணவுகளை நீண்ட நாட்கள் புதியதாகப் பாதுகாக்கவும் பல எளிய வழிமுறைகள் உள்ளன. உங்கள் சமையலறையை மேலும் ஸ்மார்ட்டாக மாற்றும் இந்தச் சுவாரஸ்யமான தகவல்களையும், அவசியமான பராமரிப்பு ரகசியங்களையும் தொடர்ந்து படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
வீடுகளில் ஃப்ரிட்ஜ் எனப்படும் ரெஃப்ரிஜிரேட்டர் கட்டாயம் இருக்கும்.
ஃப்ரிட்ஜ் என்றால் பொருள்களை குளிர்வித்தல் என்பது பொருள். ஒரு பொருளை குளிர்விப்பதற்கு அப்பொருளிலுள்ள உஷ்ணத்தை அகற்ற வேண்டும். முற்காலத்தில் அவ்வாறு செய்வதற்கு பனிக்கட்டியையும் பனியையும் பயன்படுத்தினர் .
அம்மோனியம் நைட்ரேட், உப்பு போன்றவையும் நீரில் கரைக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டன. முதன் முதலில் பனிக்கட்டி, உப்பு கலந்த நீர் முதலியவையே பயன்படுத்தப்பட்டன. இதைத்தவிர இன்னொரு முறையும் கண்டறியப்பட்டது.
ஆவியாதல் என்ற முறையில் திரவம் ஆவியாகும் போது உஷ்ணம் எடுத்துக் கொள்ளப்பட்டு குளிர்ச்சி தோன்றுகிறது. ஒரு துளி ஆல்கஹாலை கையில் வைத்து அது ஆவியாகும் போது இந்த உண்மையை உணரலாம். கிபி 1820-இல் மைக்கேல் பாரடே என்னும் விஞ்ஞானி அம்மோனியா வாயுவை அழுத்தத்திற்கு உட்படுத்தி எவ்வாறு அதை திரவமாக்குவது என்பதை கண்டறிந்தார்.
அதன் அழுத்தம் நிறுத்தப்பட்டு ஆவியாகும் போது உஷ்ணத்தை எடுத்துக்கொண்டு குளிர்ச்சியை தந்தது. முதலில் அமோனிய வாயு திரவம் ஆகும் போது உஷ்ணத்தை வெளிவிடுகிறது. பிறகு அது மீண்டும் திரவ நிலைக்கு மாறும் போது உஷ்ணத்தை எடுத்துக் கொள்கிறது.
இந்த முறைப்படி தொடர்ச்சியாக இயங்க செய்யப்படுவதன் மூலம் ஃப்ரிட்ஜ் பொருள்களைக் குளிர்விக்கிறது. இது ரெஃப்ரிஜிரேட்டருக்கு அடிப்படையாக அமைந்தது.
ரெஃப்ரிஜிரேட்டரை முதன் முதலில் வடிவமைத்தவர் ஜேக்கப் பார்க்கின்ஸ் ஆவார்.
ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்களில் நீற்றற்ற அமோனியா வாயு தான் குளிரை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. இது விஷத் தன்மை கொண்டதாக இருந்ததால் பின்பு சல்பர் டை ஆக்சைடு பயன்படுத்தப்பட்டது. இதுவும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டதால் பின்பு CFC-12 எனப்படும் டை குளோரோ டை புளூரோ மீத்தேன் என்ற வாயு பயன்படுத்தப்பட்டது.
டை குளோரோ டை புளூரோ மீத்தேன் மனிதர்களுக்கு தீங்கிழைக்கவில்லை என்றாலும் ஓசோன் படலத்தை வெகுவாக பாதித்தது. எனவே இப்படி தயாரிக்கும் ஃப்ரிட்ஜ்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இது இல்லாத ஃப்ரிட்ஜ்கள் தான் பயன்பாட்டில் உள்ளன. இப்போது ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே கிடையாது. சிங்கிள் டோர், டபிள் டோர் என பல வகைகளில் பல்வகை நிறுவனங்கள் ஃப்ரிட்ஜ்கள் விற்கப்படுகின்றன.
ஃப்ரிட்ஜ் வாங்கினால் மட்டும் போதாது; முறையாக பராமரிக்க சில டிப்ஸ் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஃப்ரிட்ஜ்ஜை வாங்கியதும் அதை பயன்படுத்தும் போது காற்றோட்டம் உள்ள அறையில் வைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜ்ஜை சமையலறையில் வைத்தால் புகைப்பட்டு நிறம் மங்கிப் போய்விட வாய்ப்பு இருக்கிறது.
ஃப்ரிட்ஜ் வைக்கும்போது சுவரிலிருந்து குறைந்தது 30 சென்டிமீட்டர் தூரம் தள்ளி வைத்தால் தான் அது வெப்ப காற்றை வெளியிட வசதியாக இருக்கும்.
வெப்பத்தை அதிகமாக வெளியிடும் ஏசி அயன் பாக்ஸ் போன்றவற்ற ஃப்ரிட்ஜ் அருகில் வைக்காதீர்கள்; காரணம் அதன் பாதிப்பால் இது அதிக அளவு மின்சக்தியை இழுத்து விடும்.
ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள ஐஸ் கட்டிகளை எடுக்க வரவில்லை என்றால் கத்தியை கொண்டு எடுக்காமல் பழைய கேஸ்கட்டை அதன் மேல் போட்டு வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பை தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுகளை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
ஃப்ரிட்ஜ்ஜை அடிக்கடி திறந்து மூடாதீர்கள்; அடிக்கடி திறந்து மூடினால் மின்சாரம் அதிகமாக செலவாகும். காய்ந்த துணி கொண்டுதான் துடைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜ்ஜினுள் எலுமிச்சம் பழத்தை நறுக்கி வைத்தால் கெட்ட வாடை வராது. அதனுடன் ஒரு கிண்ணத்தில் கரித்துண்டும் வைத்தால் ஒன்றின் வாசனை மற்றொன்றில் பரவாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ்ஜில் கோடைகாலமானால் அதற்கு தக்கவாறும் மழைக்காலமானால் அதற்கு தக்கவாறும் அதன் எண்களை பட்டனில் திருகி கொள்வது அவசியம்.
அதிகமான அளவு சமைத்த உணவுகளையும் வாங்கும் காய்கறி பழங்கள் போன்றவற்றையும் நிரப்பக்கூடாது; ஓரளவு இடைவெளி இருந்தால் தான் அதன் குளிர்ச்சித்தன்மை பரவலாக அனைத்திற்கும் கிடைத்து பொருட்களும் தகுந்த முறையில் குளிரச் செய்யும்.
ஃப்ரிட்ஜ்ஜுக்குள் பச்சை காய்கறிகளை பாலிதீன் கவரில் போட்டு வைக்க வேண்டும்.
பச்சை மிளகாய் காம்புகளை எடுத்துவிட்டு வைத்தால் எத்தனை நாட்களானாலும் பச்சையாக இருக்கும்.
முட்டைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது கூரான பகுதி கீழேயும் அகலமான பகுதி மேல்நோக்கியும் இருக்கும்படி வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ்ஜில் வாழைப்பழத்தை வைக்காதீர்கள்; ஆனால் வாழைக்காயை இரண்டு நாட்களுக்கு வைத்திருந்தால் பழுக்காமல் அப்படியே இருக்கும்.
கருவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை அதன் காம்புகளை ஆய்ந்து எடுத்துவிட்டு பிறகு இலைகளை மட்டும் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம்; வாடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ்ஜை ஈரம் இல்லாத துணியை வைத்து வாரம் ஒரு முறை சுத்தமாக துடைத்த பிறகு, மறுவாரத்திற்கான பொருட்களை வைத்தால் ஃப்ரிட்ஜ் பளிச்சென்று அப்படியே இருக்கும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு, மின்சார கட்டணத்தைக் கணிசமாகக் குறைத்து, காய்கறிகளை நீண்ட நாட்கள் புதியதாகப் பாதுகாக்கக்கூடிய எளிய வழிகளைத் தெரிந்து கொள்ளலாம்.