

சியாமளா, தேவி, உமா மூவரும் ஒரு பார்க்கில் அமர்ந்து வழக்கம் போல ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். தினம் தினம் காலை வேளைகளில் இப்படி திட்டம் தீட்டுவது வழக்கம்.
“இன்னைக்கு சாயங்காலம் நாம பூந்தமல்லி திநகர் 49ஏ வண்டியிலே ஏறி பெரிசா ஏதாவது அடிக்கணும்...” தேவி சொல்ல, சியாமளா இருவருக்கும் தன் திட்டத்தை விவரித்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் எவ வெயிட்டான பார்ட்டின்னு முடிவு பண்ணி ஸ்கெட்ச் போட்டு அவளுக்கு முன்னேயும் சைட்லேயும் நின்னு இடிச்சி கோபப்படுத்தி திசை திருப்புங்க. பின்பக்கம் நின்னு சமயம் பார்த்து அவளோட பர்ஸையோ செயினையோ நான் அடிச்சிடறேன்.”
தொடர்ந்து சியாமளாவே பேசினாள். “இன்னைக்கு நாம பஸ்லே மூணு சம்பவம் செய்யணும். எல்லாத்தையும் நான் என்னோட பேகுலே வெச்சிக்கறேன். கடைசியா ஒரு இடத்திலே இறங்கி மூணு பேரும் பிரிச்சிக்கலாம்.”
சியாமளாவின் திட்டத்திற்கு மற்ற இருவரும் "டன்" என்று சொல்லி சம்மதித்தார்கள். திட்டம் தீட்டியபடி கூட்டமாக இருந்த போரூரில் 49ஏ பஸ்ஸில் மூவரும் ஏறிக்கொண்டார்கள். உள்ளே நோட்டம் விட்டபடியே நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பெண் கழுத்தில் நிறைய நகை அணிந்திருந்தாள். தேவியும் உமாவும் அவளுக்கு முன்னேயும் அருகிலும் நின்று இடிக்கத் தொடங்கினார்கள். பொறுமையாக இருந்த அந்த பெண்ணுக்குக் கோபம் வந்து “ஏம்மா கொஞ்சம் இடிக்காமத்தான் நில்லுங்களேன்” என்றாள்.
“நீங்களே பார்க்கறீங்க இல்ல. கூட்டம் அதிகமா இருக்கு. நான் என்ன பண்றது. சொல்லுங்க.”
உமா அப்பாவியாய் இப்படிப் பேச சமயம் பார்த்து சியாமளா அவளுடைய செயினை கட் செய்து தன் ஹேண்ட் பேகில் வைத்தாள்.
சம்பவம் முடிந்தது என்று தெரிந்ததும் மூவரும் சட்டென அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள்.
இரண்டாவது சம்பவமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மூன்றாவது சம்பவத்தைச் செய்து முடித்ததும் நகர எத்தணித்தாள் சியாமளா. உமாவும் தேவியும் வந்த நிறுத்தத்தில் முன்பக்க வழியாக இறங்கிக் கொண்டார்கள். ஆனால் சியாமளாவால் இறங்க முடியவில்லை. அவள் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் அவள் மீது மோதினாள்.
இறங்க முடியாத ஆத்திரத்தில் “ஏம்மா. கண்ணுத் தெரியலையா. ஏன் இப்படி எருமைமாடாட்டம் மோதறே ?” என்று சியாமளா வார்த்தைகளைக் கொட்டி விட்டாள்.
“யாரைப்பாத்து எருமைமாடுன்னு சொல்றே. மூஞ்சி மொகரையெல்லாம் பேந்துடும். ஜாக்கிரதை!”
இடித்த அந்த பெண் கோபத்தில் கடுமையாகப் பேசினாள்.
“சரி சரி விடுங்க. சின்ன விஷயத்தை ஏன் பெரிசு பண்றீங்க?”
கூட்டத்தில் இருந்த ஒருவர் சமாதானப்படுத்தினார்.
இனி பஸ்ஸில் இருந்தால் மாட்டிக்கொள்ளுவோம் என்று நினைத்த சியாமளா அடுத்த நிறுத்தத்தில் இறங்கியே ஆக வேண்டும் என்ற உறுதியோடு படிக்கட்டின் அருகே சென்றாள்.
கேகே நகரில் ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றதும் சட்டென இறங்கி எதிரில் இருந்த ஒரு சந்துக்குள் சென்று மறைந்தாள். பரபரவென நடந்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு சேர்ந்தாள்.
தேவியையும் உமாவையும் வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டு சியாமளா வேகவேகமாகத் தன் ஹேண்ட் பேகைத் திறக்கும் போதுதான் கவனித்தாள். ஹேண்ட்பேகின் பக்கவாட்டில் பிளேடு போடப்பட்டிருந்தது. படபடப்புடன் உள்ளே பார்த்தாள். கொள்ளையடித்த பொருட்கள் எதுவும் அதற்குள் இல்லை!