

பிறந்த நாளும் புத்தாண்டும் பெரிதாகப் பிரபலமில்லாத அந்தக் காலத்தில், தீபாவளி மட்டுமே நம் கிராமத்து மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியாக இருந்தது! கடைகளில் விலைகொடுத்து வாங்கிய தினசரி காலண்டர் தாள்களை மடித்துத் தீபாவளி நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த பசுமையான நினைவுகள் உங்களிடம் இருக்கிறதா? அறுபது வருட காலத்தை பின்னோக்கி நகர்த்தி, உங்களை மீண்டும் ஒரு சிறுவனாய் மாற்றும் அற்புதத் தீபாவளி அனுபவங்களை வாசிக்கத் தயாராகுங்கள்!
இப்பொழுதுபோல பிறந்த நாள் கொண்டாட்டங்களோ, திருமண அனிவர்சரிகளோ, புத்தாண்டு தின விழாக்கள் எல்லாம் எங்கள் சிறு வயது காலத்தில் பிரபலமாக இல்லாததால், தீபாவளி மட்டுமே சிறப்புப் பெற்றிருந்தது!
புத்தாடை என்றால் அது தீபாவளி அன்றைக்குத்தான் என்பது போன்ற வரையறை அந்தக் காலம் வழக்கத்தில் இருந்தது. மூன்று காரணங்களுக்காகத் தீபாவளி எங்கள் மனங்களில் இனிதான இடத்தைப் பெற்றிருந்தது. புதிய ஆடைகள், இனிப்பு - காரப் பலகாரங்கள் மற்றும் பட்டாசு ஆகியவையே அவை.
ஆண்டின் ஆரம்பத்திலேயே தீபாவளி தினத்தை அறிந்து, அதை வீட்டிலிருக்கும் தினசரி நாட்காட்டியின் குறிப்பிட்ட அந்தப் பேப்பரை மட்டும் உள்ளுக்குள் மடித்து வைத்து விடுவோம். அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலுமே தினசரி நாட்காட்டிகள் இருக்கும்.
நாம் தொடர்ந்து தினசரியோ, மாதா மாதமோ பொருட்கள் வாங்கும் கடைகளில், இப்பொழுதெல்லாம் தினசரி காலண்டர்களை இனாமாகவே கொடுத்து விடுகிறார்கள். அந்தக் காலத்தில் பெரும்பாலும் காசு கொடுத்தே காலண்டர்களை வாங்கும் நிலை இருந்தது. அந்தக் காலத்தில் தினசரி காலண்டர்கள் மல்டி பர்பஸ் சாதனமாகவும் பயன்பட்டது.
காலையில் எழுந்ததும் முந்தைய ஷீட்டைக் கிழிக்கும்போதே, அன்றைய நாளின் ஜாதகத்தை அது சில நொடிகளில் காட்டி விடும்.
தேதி, மாதம், வருடத்தோடு அன்றைய சிறப்புகளையும், ராகு காலம், எமகண்டம், குளிகை போன்றவற்றின் நேரத்தையும், அன்றைய சூலத் திசைகளையும் எளிதில் நம் கண்களில் படச் செய்யும்.
அதைக் கிழித்து, அதில் பல்பொடியை மடித்துக் குளத்திற்கு எடுத்துச்சென்று அங்கு பல் துலக்குவது வாடிக்கை.
செல்ப் ஷேவ் செய்துகொள்பவர்கள் ஃபோமுடன் வழிக்கும் முடியை இதைக் கிழித்து இதனில் துடைப்பர்.
கடைக்குச் செல்கையில், வாங்க வேண்டிய பொருட்களைக் குறித்துக் கொள்ள அவசரமாகப் பேப்பர் கிடைக்காதபோது, இதன் ஒரு தாளைக் கிழித்து அதன் பின்னாலுள்ள வெள்ளைப் பக்கத்தில் குறித்துக் கொள்வதுண்டு.
மழைக் காலங்களில், வாசலில் பெருக்கெடுத்தோடும் நீரில் காகிதக் கப்பல் விட, இதன் ஒரு தாளைக் கிழித்து சாதாக் கப்பலும், மற்றொன்றில் கத்திக் கப்பலும் செய்து வாரி நீரில் விட்டு மகிழ்வதுண்டு.
சமயங்களில், குருவி, காகம் போன்றவற்றின் எச்சம் உடையிலோ, உடம்பிலோ பட்டுவிட்டால், கைக்கடக்கமான இதனைப் பயன்படுத்தித் துடைத்து எடுப்பதுண்டு.
அவசரத்திற்கு, ஓடும் மூக்கைச் சிந்தவும் பயன்படுத்துவதுண்டு.
ஆனால், இதற்கு இப்பொழுது தெய்வீக சக்தி வந்துவிட்டது. ஆம். ஆலயங்களில் விபூதிப் பிரசாதங்களை மடிக்கும் பிரமோஷனை இது அடைந்துவிட்டது!
தீபாவளிக்கு எத்தனை நாட்கள் இருக்கின்றனவென்பது மனப்பாடமாக மனதில் இருந்தாலும், சுமார் ஒரு மாதம் முன்பிருந்தே நேரம் கிடைக்கும்போதெல்லாம் காலண்டரை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு ஷீட்டாக எண்ணிக்கொண்டே நகர்த்துவதில் ஓர் அலாதி இன்பம் இருக்கவே செய்தது.
தீபாவளியின் முதல் நாள் இரவில் தைக்கக் கொடுத்த ஆடைகளை அண்ணன்கள் வாங்கிவர டவுனுக்குச் சென்றிருப்பார்கள். எப்போது வருவார்கள், நமது ஆடையைப் பார்க்கலாமென்ற ஆவலில் வீட்டுக்கும் முற்றத்துக்கும் அலைந்தே களைத்துப்போய் விடுவதும் உண்டு.
பழைய சட்டை, டவுசரை எடுத்துக்கொண்டு போய், அதற்கேற்ற அளவுகளில் துணி எடுத்து அவர்களே தைக்கக் கொடுத்துவிட்டு வந்து விடுவார்கள். எனவே, எங்களுக்கான ஆடையை சஸ்பென்சாக வைத்திருந்து, தீபாவளியன்றுதான் சஸ்பென்சை உடைப்பார்கள். அதிலும் ஒரு சுவாரசியம் இருந்தது. என்ன? நமக்குப் பிடித்த கலர் துணி என்றால் சந்தோஷம் அதிகமாக இருக்கும். இல்லையென்றால் சுவாரசியம் சற்றே குறையும்.
வடையும், சுழியனும், இட்லியும், சாம்பாரும், சட்னியுமென்று இரவு முழுவதும் விழித்து அம்மா வேலை செய்ய, நாங்களும் உதவுவோம். நடு நடுவே இரண்டொரு பட்டாசுகளைக் கொளுத்தியபடி! அப்படியே தூங்கியும் போவோம். ஐந்து மணிக்கு எழுப்பி, புதுத் துணிகள், பலகாரங்கள், பட்டாசுகள் ஆகியவற்றைச் சாமிக்குப் படைத்துவிட்டு, சாமிக்கு முன் வைத்த எண்ணையை அம்மா எல்லோர் தலையிலும் தேய்த்து விட, நாங்களெல்லாம் பிடாரி குளத்துக்கு, சீயக்காய், அரப்புடன் ஓடுவோம். எங்களூர் கங்கா, பிடாரி குளந்தான். அதில்தான் எல்லா நாட்களிலும் ஸ்நானம்!
குளித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் புத்தாடை உடுத்தி, பலகாரங்களை ஒரு கை பார்த்த பிறகு, பட்டாசு வேடிக்கை தொடங்கி விடும்.
லக்ஷ்மி வெடியைப் பூமியில் சற்றே அழுத்தி வைத்து, அதன் திரியை கண் கொட்டங்கச்சியின் ஒருகண் வழியாக வெளியே இழுத்து, வெடி கொட்டங்கச்சியின் உள்ளே அழுந்தியிருக்குமாறு செய்து விட்டு், திரியில் நெருப்பை வைத்துவிட்டு ஓட, பல சமயம் கொட்டங்கச்சி பனை மர உயரம் சென்று வரும்; சில சமயம் வெடித்துச் சிதறும்! உற்சாகம், கொட்டங்கச்சியைப்போலவே உயரே எழும்பும்!
சிலர், சீனி வெடிக்கட்டைப் பிரித்து வைத்துக்கொண்டு, வாசலின் ஓரத்தில் தட்டில் வடை, சுழியனையும் வைத்துக்கொண்டு, அவற்றை ஒருகையால் எடுத்துக் கடிப்பதும், மறு கையால் கையில் இருக்கும் சிகரெட்டால் வெடியைக் கொளுத்துவதுமாகத் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வர்.
சிறுவர்கள் தங்கள் பாக்கெட்டில் மறைத்து வைத்திருக்கும் சிறு நட்டுகளைக் கொண்டு கேப் வெடிகளை நண்பர்களுக்குப் பக்கத்தில் வெடித்து, அவர்களைப் பயப்படச் செய்வர். போகையிலும் வருகையிலும் வடையையோ சுழியனையோ சாப்பிடுவதுடன்,
நடுநடுவே முறுக்கு, சீடை, பயத்தம் உருண்டை, அதிரசம் ஆகியவற்றையும் ஒரு கை பார்ப்பதுண்டு.
உலக மகா யுத்தங்கள் நடைபெற, இம்மீடியட் காரணங்களும், பர்மனண்ட் காரணங்களும் உண்டென்பதைப்போல, தீபாவளியின் இம்மீடியட் காசஸ் இட்லி, வடை, சுழியன்! பர்மனண்ட் காசஸ் சீப்பு முறுக்கு, சீடை, லட்டு, பொருவிளங்கா உருண்டை, பயத்தம் உருண்டை போன்றவை! உண்மையில் அந்தக் காலத்தில் எங்கள் பெற்றோர்களுக்கு, தீபாவளி ஒரு மகா யுத்தந்தான்!
அதிலும் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்தவர்களுக்கு, தலைத் தீபாவளி, வரிசை என்று செலவு பிய்த்துக்கொண்டு போகும். ஜவுளிக்கடை, மளிகைக் கடைகளில் கடன் வாங்கியே அனைத்தையும் சமாளிப்பர். குறுவை நன்றாக விளைந்ததென்றால், கடனைக் குறைத்திடுவர். இல்லையென்றால் சிரமந்தான். ஆனாலும் எப்படியோ பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டுமென்ற உந்துதலில் எல்லாவற்றையும் சமாளிப்பர்!
பகலெல்லாம் அங்கே, இங்கே என்று நண்பர்களுடன் ஆட்டம் போட்டு விட்டு, மாலையானதும் பட்டாசுகளுடன் வாசலில் குடும்பத்துடன் குழுமி விடுவோம்.
பெரியவர்கள் அதிக ரிஸ்க் இல்லாத கம்பி மத்தாப்பு, கலர் மத்தாப்பு, சாட்டை, பென்சில் என்று அமர்ந்தவாறே அவற்றைக் கொளுத்தி ஆனந்தமடைந்திடுவர்.
சிறுவர்கள் ரோல் கேப், வெங்காய வெடி, புஸ் வானம், சங்கு சக்கரம் என்று சற்றே ஓடியாடுவர். இளைஞர்கள் லட்சுமி வெடி, அணுகுண்டு வெடி என்று கொளுத்தி தெருவையே அதிர வைத்திடுவர்.
அப்பொழுதெல்லாம் வெடி கொளுத்துவதற்கு அரசாங்கம் நேரம் குறித்துக் கொடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை. விரும்பிய நேரத்தில் வெடித்துக் கொள்ளலாம்.
தீபாவளியை இன்னுஞ் சிறப்பாகக் கொண்டாட, இரண்டொரு நாட்கள் முன்பாகவே, நமது மெரீனா பீச் போன்ற இடங்களில் அரசாங்கமோ அல்லது பெரிய நிறுவனங்கள் தனியாகவோ, இணைந்தோ வாண வேடிக்கைக்கு ஏற்பாடு செய்யலாம்.
வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் பொது இடங்களில் இவ்வாறான வாண வேடிக்கை நிகழ்ச்சிகளைச் சிறப்பாகச் செய்து மக்களை மகிழ்விக்கிறார்கள்.
இருங்க! ஆணியில் மாட்டியிருந்த தினசரி நாட் காட்டி கீழே விழுந்துவிட்டது. எடுத்து மாட்டிவிட்டு வருகிறேன்! கையிலெடுத்த நான் வியந்து நிற்கிறேன்! நான் என்றோ சொன்ன கதையை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு என் பேரன் அதில் தீபாவளி தினத்தை மடித்து வைத்திருக்கிறான்.
ஒவ்வொரு தாளாக நகர்த்தி எண்ணுகிறேன்!
அப்படி நகர்த்துகையில் நான் அறுபது ஆண்டுகளை நகர்த்திவிட்டுச் சிறுவன் ஆனதைப்போல் மனத்துள் ஓர் உற்சாகம் பீறிடுகிறது!
அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!