

தீபாவளி நெருங்கும் மகிழ்ச்சியில் இல்லத்தரசிகளுக்கு மட்டும் கூடுதல் வேலைப்பளுவும் டென்ஷனும் சேர்ந்து கொள்ளும் என்பது மறுக்க முடியாத உண்மை. துணி எடுப்பது முதல் பலகாரம் செய்வது வரை அனைத்தையும் தாங்களே சுமப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படிப் புத்திசாலித்தனமாகக் கையாள்வது? கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்த்து, பண்டிகையைச் சுமையின்றிச் சிரிப்போடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவதற்கான எளிய மற்றும் ரகசிய வழிகள் இதோ! தொடர்ந்து வாசியுங்கள்.
தீபாவளி நெருங்கும் வேளையில் வீடே திருவிழாக் கோலம் பூண்டுவிடும். மகிழ்ச்சியான நேரம்தான் என்றாலும், அந்த மகிழ்ச்சியின் பின்னால் இருக்கும் வேலைகளின் பெரும்பகுதி பெண்களின் மேல் தான் விழுகிறது. துணி எடுக்கக் கடைகளுக்குப் போவது, பலகாரம் செய்வது, வீடு சுத்தம் செய்வது, விருந்தினர்களை உபசரிப்பது என்று பட்டியல் நீள்கிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைக் கொஞ்சம் புத்திசாலித்தனமாகக் கையாண்டால், பண்டிகையை இனிமையாகக் கொண்டாடலாம்.
வேலைகளைப்பகிர்ந்து கொள்ளுங்கள்: எல்லாம் நானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். ‘நான் செய்தால்தான் நன்றாக இருக்கும்’ என்ற எண்ணமே பல பெண்களின் மிகப்பெரிய சுமை. வேலைகளைக் குடும்பத்தினருக்குப் பகிர்ந்து கொடுங்கள்.
கணவர் கடைக்குப் போகட்டும், பிள்ளைகள் வீடு சுத்தம் செய்ய உதவட்டும், பெரியவர்கள் பலகாரம் செய்ய உதவட்டும். உதவி கேட்பது பலவீனம் அல்ல, புத்திசாலித்தனம்.
பட்டியல் போட்டுத் திட்டமிடுங்கள்: மனதில் இருக்கும் வேலைகள் எல்லாம் தலைக்குள் சுழன்றுகொண்டே இருந்தால் அழுத்தம் கூடும். ஒரு நோட்டில் எழுதி வைத்து, நாள் வாரியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். முதல் வாரம் ஷாப்பிங், இரண்டாம் வாரம் வீடு சுத்தம், கடைசி மூன்று நாட்களில் பலகாரம் என்று பிரித்தால் கடைசி நேரப் பதற்றம் குறையும். முடித்த வேலையைப் பட்டியலில் டிக் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி.
எல்லாம் பர்ஃபெக்டாக இருக்க வேண்டியதில்லை: பக்கத்து வீட்டில் பத்து வகைப் பலகாரம் செய்திருக்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்ய வேண்டியதில்லை. நான்கு வகை சுவையாகச் செய்தால் போதும். கடையில் வாங்கினால் குறைந்தா போய்விடுவோம்? பண்டிகையின் அழகு பலகாரங்களின் எண்ணிக்கையில் இல்லை, குடும்பத்தின் சிரிப்பில் இருக்கிறது.
பட்ஜெட்டில் பதற்றம் வேண்டாம்: போனஸ், செலவு, கடன் என்று பண்டிகைக் காலத்தில் பணக்கவலையும் கூடும். முன்கூட்டியே ஒரு தொகையை நிர்ணயித்து, அதற்குள் வாங்க வேண்டியவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
குடும்பத்தினரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். ‘இந்த ஆண்டு இவ்வளவுதான்’ என்று சொல்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. கடன் வாங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சியை விடக் கவலையையே தரும்.
எதிர்பார்ப்புகளைச் சமாளியுங்கள்: விருந்தினர் வருகை, உறவினர்களின் விமர்சனம், “இந்த ஆண்டு ஏன் கம்மி பட்ஜெட்டில் ஷாப்பிங்...? இவ்வளவு தானா பலகாரங்கள்? என்ற கேள்விகள் மனதைப் புண்படுத்தலாம். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில்லை. புன்னகையோடு கடந்து போகக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கென ஒரு சிறிது நேரம்: எல்லோருக்கும் வேலை செய்துவிட்டுத் தனக்கு மட்டும் நேரம் ஒதுக்காமல் இருப்பதே பல பெண்கள் செய்யும் தவறு. தினமும் பத்து நிமிடமாவது அமைதியாக அமர்ந்து தேநீர் அருந்துங்கள்; பிடித்த பாடலைக் கேளுங்கள்; மொட்டை மாடியில் சிறிது நடந்து வாருங்கள். இந்தச் சிறிய இடைவெளிகள் மனதுக்குப் புத்துணர்ச்சி தரும்.
தூக்கம், உணவு, ஓய்வு: பண்டிகை வேலைகளில் சாப்பிடுவதையும் தூங்குவதையும் மறந்துவிடுகிறோம். உடல் சோர்ந்தால் மனமும் சோர்ந்துவிடும். நேரத்துக்குச் சாப்பிடுங்கள், போதுமான தண்ணீர் குடியுங்கள், இரவில் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்குங்கள். சோர்வாக இருக்கும்போது சிறிது ஓய்வெடுப்பது சோம்பல் அல்ல, அடுத்த வேலைக்கான சக்தி.
மனம் விட்டுப் பேசுங்கள்: மனதுக்குள் புதைத்து வைக்கும் கவலைகள் அழுத்தமாக மாறும். தோழிகளிடமோ சகோதரிகளிடமோ கணவரிடமோ மனம் விட்டுப் பேசுங்கள். சிரித்துப் பேசுவதே பாதி மன அழுத்தத்தைக் குறைத்துவிடும். அழுத்தம் தொடர்ந்து நீடித்து, தூக்கமின்மை, எரிச்சல், எதிலும் ஆர்வமின்மை போன்றவை நாள்கணக்கில் நீடித்தால் மருத்துவரையோ ஆலோசகரையோ அணுகத் தயங்க வேண்டாம்.
நன்றி சொல்லுங்கள்/பெறுங்கள்: குடும்பத்தினரிடம் "நீங்கள் செய்த உதவிக்கு நன்றி" என்று சொல்லுங்கள். அதே நேரம் உங்கள் உழைப்புக்குப் பாராட்டை எதிர்பார்ப்பதிலும் தவறில்லை. ஒருவருக்கொருவர் நன்றி சொல்லும் வீட்டில் இனிமை கூடும். தீபாவளி என்பது இருளை விலக்கும் ஒளியின் திருநாள். வீட்டுக்கு ஒளி ஏற்றும் அதே நேரத்தில் நம் மனதிலும் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்வோம். திட்டமிட்டு, பகிர்ந்து, சிரித்துக் கொண்டாடினால் பண்டிகை எல்லோருக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், தீபாவளி பண்டிகை கால வேலைப்பளுவையும் சோர்வையும் முற்றிலுமாகத் தவிர்த்து, குடும்பத்தினருடன் மனநிறைவோடும் புத்துணர்ச்சியோடும் தீபாவளியைக் கொண்டாடி மகிழலாம்.