உலகின் மிக மென்மையான மற்றும் லேசான கைத்தறி ஆடை மஸ்லீன் (Muslin) ஆடைதான். இவ்வகைத் துணிகள் ஈராக்கின் மோசூல் நகரில்தான் முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, மோசுல் நகரின் பெயரில் அழைக்கப் பெற்ற இந்த ஆடை, பின்னர் மஸ்லீன் என்று பெயர் மாற்றம் பெற்றுவிட்டது என்று சொல்கின்றனர். மஸ்லின் என்ற சொல், நுண்ணிய பருத்தி துணிகளுக்குப் பெயர் பெற்ற ஒரு பண்டைய இந்தியத் துறைமுகமான மசூலிபட்டம் (மசூலிப்பட்டணம்) என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தின் மேக்னா ஆற்றின் கரையில் வளர்க்கப்பட்ட அரிதான பருத்தியிலிருந்து மிகவும் மென்மையான, கைகளால் நூற்கப்பட்ட நூல்களைக் கொண்டு, டாக்காவைச் சுற்றியப் பகுதியில் இத்துணி நெய்யப்பட்டது.
ஓர் ஆடையின் நுண்மையான மற்றும் லேசான தன்மையின் அடிப்படையில் அதற்கு அலகுகள் தரப்படுவது உண்டு. அந்த வகையில் கதர் பருத்தித் துணிகளின் அலகு 30-லிருந்து தொடங்கும். மஸ்லினின் துணிகள் 400 அலகிலிருந்து 600 அலகுகள் வரை என்று சொல்லப்படுவதிலிருந்து அதன் மென்மைத் தன்மையை அறிய முடியும்.
மஸ்லின்கள் மிகவும் மெல்லிய, வெளிப்படையான, மென்மையான மற்றும் எளிதில் சுவாசிக்கக்கூடிய துணிகள் வார்ப்பில் 1000 முதல் 1800 நூல்கள் வரை இருக்கலாம் மற்றும் 0.91 மீ × 9.14 மீ (1 யார்டு × 10 யார்டு) அளவில் 110 கிராம் (3.8 அவுன்ஸ்) எடையுள்ளதாக இருக்கும். சிறு மோதிரத்துக்குள் மொத்த மஸ்லின் துணியையும் நுழைத்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு அவை மெலிதாக இருக்கும் என்கின்றனர். டாக்கா மஸ்லின் சேலைகள் ஒரு தீப்பெட்டிக்குள்ளோ, சிற்றுண்டிப் பெட்டியிலோ அடைத்து விடும் அளவுக்கு இலேசாக, நுணுக்கமாக நெய்யப்படுபவை. மஸ்லின் துணியில் தைக்கப்பட்ட ஓர் சட்டையின் எடை 10 கிராம்தான் இருக்கும்.
முகலாயர் காலத்தில் மஸ்லின் துணி மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. முகலாயப் பேரரசர்களும், அவர்களது ராணிகளும் மஸ்லினுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தொழில் வளரச் செய்தனர். அந்நாட்களில் மஸ்லின் துணிகள் ஈரான், ஈராக், துருக்கி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மால்-மால் என்ற பெயரில் நெய்யப்பட்ட மிகவும் நுண்மையான மஸ்லின் ஆடைகள் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியது. ஐரோப்பாவால் மிகுதியாக இறக்குமதி செய்யப்பட்ட தரம் வாய்ந்த மஸ்லின் துணி முன் காலத்தில் சின்தோன் என அழைக்கப்பட்டது.
பிற்காலத்தில் பிரிட்டிஷ் வணிகர்கள் அதிகபட்ச லாபத்திற்காக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய அளவில் தயாரிக்க முடிவு செய்தனர். ஆனால் சாதாரண பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் மஸ்லின், கையால் நெய்யப்பட்ட தாகா மஸ்லினுடன் போட்டியிட முடியவில்லை. அதாவது, மஸ்லின் துணியை இயந்திர நெசவால் உருவாக்க முடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே வழியில் கையில் நெய்யப் பெற்று வந்த மஸ்லின் துணி நெசவுப் பணியும் படிப்படியாகக் குறைந்து அழிந்து போய்விட்டது என்கின்றனர்.
தற்போது இந்த மஸ்லின் துணியினைக் கையில் நெசவு செய்து மீட்டெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ 2013 ஆம் ஆண்டில் வங்காளத்தின் மரபு வழியில் நூற்புக் கலையான மஸ்லின் துணி நெய்வதை, மனிதக் குலத்தின் வாய்வழி மற்றும் புலனாகா மரபு வழியைச் சேர்ந்த தலைச் சிறந்த படைப்புகள் என்னும் பட்டியலில் சேர்த்துள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.