மாமியார் கட்டுப்பாட்டில் சிக்கிய இளம்பெண்: டாக்டரிடம் உதவி கேட்ட கதை!

குழந்தை பிறந்த பிறகும் வீட்டின் கட்டுப்பாடுகளால் மூச்சுத் திணறிய ஒரு தாய், மருத்துவரிடம் உதவியை நாடிய நெகிழ்ச்சியான நிகழ்வு.
பெண் | Young woman and doctor
பெண் | Young woman and doctorImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

அந்த இளம்பெண் எனது கிளினிக் நுழையும்போதே எனக்கு ஆச்சர்யம். கையில் மூன்று மாதக் குழந்தை.

“ஏம்மா சின்னக் குழந்தையை தூக்கிக் கொண்டு தனியாகவா வந்தீங்க? கூட யாரும் வரல?”

“பக்கத்து வீட்டு அக்கா வந்திருக்காங்க... வெளிய இருக்காங்க”

“உள்ளே வரச் சொல்லுங்க.”

“பிறகு வரச் சொல்றேன் டாக்டர்.” என்றார்.

நான் திகைப்புடன் அவரை பார்த்தேன். மிகத் தெளிவான முகம். பளிச் என்று உடுத்தியிருந்தார். உதட்டு சாயம் கூட போட்டிருந்தார். ஒரு மருத்துவரிடம் செல்லும்போது தேவையற்ற அளவு அலங்காரத்தோடு இருந்தார்.

“ஏம்மா என்னை பாக்க வந்தீங்களா? இல்ல கோயிலுக்கு ஏதாவது போக வந்தீங்களா?” என்று சற்றே கிண்டலாக கேட்டேன்.

அந்தப் பெண் சொன்னது சட்டென என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளியது.

“சார். எனக்கு அப்பா அம்மா கிடையாது. நான் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். டீச்சர் டிரைனிங் முடிச்சிருக்கேன். லவ் மேரேஜ் எங்களது. என் கணவர் நல்ல வேலையில் இருக்கிறார். என்னை நல்லா பார்த்துக்கறார்.”

எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

“என் மாமியாருக்கு என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. பெண் குழந்தை பிறந்தது. அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. டெலிவரி ஆன பிறகு சாப்பாட்டுல ஏக கட்டுப்பாடு. பத்தியம். தலை வாரக் கூடாது. நல்லா டிரஸ் பண்ண கூடாது. வெளிய போக கூடாதுன்னு ஏராளமான கெடுபிடி.

Young woman and doctor
Young woman and doctorImage credit: AI Image

இப்ப கூட குழந்தைக்கு சளி பிடிச்சிருக்குன்னு சொன்னா ஏதோ பாட்டி வைத்தியம் பண்றேன்னாங்க. நான் ஒத்துக்கல. அப்புறம் டாக்டர்கிட்ட அவங்களே கொண்டு பொறேன்னாங்க. நான் தான் கொழந்த பாலுக்கு அழுவுமேன்னு சொல்லி பக்கத்து வீட்டு அக்காவை கூட்டிட்டு வந்தேன். சார்! குழந்தை பிறந்த பிறகு இன்றைக்கு தான் முதல் முறையாக தலை வாரி முகத்தில் பவுடர் போட்டிருக்கேன், சேலை கட்டியிருக்கேன். வீட்டை விட்டு வெளியே வந்திருக்கேன்.

ஏகப்பட்ட கண்டிஷன். குழந்தைக்கு திருஷ்டி பட்டுடும். காத்து கருப்புன்னு சொல்லி பயமுறுத்தி வீட்லயே அடச்சு வெச்சு இருக்காங்க” என்று சொல்லி உடைந்து போய் அந்தப் பெண் அழ ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்:
மாம்பழத் தோலை குப்பையில் வீசுவீர்களா? இனி வேண்டாம்! இதோ 5 அற்புத பயன்கள்!
பெண் | Young woman and doctor

என்ன ஆறுதல் சொல்வதென தெரியாமல் திகைத்து நின்றேன்.

அழுகையினூடே அவர் மேலும் தொடர்ந்தார் “டாக்டர், குழந்தைக்கு ஒண்ணும் இல்லை. நல்லா பால் குடிக்குது. நல்லா யூரின், மோஷன் போகுது. நல்லா தூங்குது. விளையாடுது. முகம் பார்த்து சிரிக்குது. இரண்டு தடுப்பூசிகள் வீட்லயே கிராம சுகாதார செவிலியர் வந்து போட்டுட்டாங்க. எதுக்கும் நீங்க ஒரு முறை பாப்பாவை செக் பண்ணுங்க,” என்றார்.

நான் சிரித்துக் கொண்டே “நீங்கதான் நான் கேள்வி கேக்கறதுதுக்கு முன்னாடியே ஒரு டாக்டருக்கு தேவையான அத்தனை தகவலையும் மூச்சு விடாம சொல்லி முடிச்சிட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ்மா. எதுக்கும் குழந்தைய முழுமையா செக் பண்ணிடறேன்,” என்று சொல்லிவிட்டு குழந்தையின் எடை, நீளம், தலை சுற்றளவு, தலை முதல் பாதம் வரை கவனமாக பரிசோதித்தேன். அவர் சொன்னது போல குழந்தை நலமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன்.

“குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்குமா,” என்றேன்

“டாக்டர், எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா?”

நான் நிமிர்ந்து பார்த்தேன்.

இதையும் படியுங்கள்:
வெள்ளி நகைகள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க இதைப் பின்பற்றுங்கள்!
பெண் | Young woman and doctor

“டாக்டர்! இப்போ பக்கத்து வீட்டு அக்காவை கூப்பிடறேன். அவங்க முன்னாடி குழந்தைக்கு லேசா சளி இருக்கு. மருந்து கொடுத்து விட்டு அடுத்த வாரம் வந்து குழந்தைய காட்டணும்னு சொல்லுங்க ப்ளீஸ். அப்பதான் நான் வெளி உலகை பார்க்க முடியும் டாக்டர் ப்ளீஸ்...” என்று கெஞ்சினார்

“சரி,” என்று அரை மனதுடன் தலை ஆட்டினேன்.

டாக்டர்கள் வைத்தியத்தை தாண்டி இந்த உலகத்தை புரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

டாக்டர்.க.இராவணன் M.D (Paed) குழந்தைகள் நல மருத்துவர்

Dr.RAV’s Child Clinic, அரக்கோணம்

logo
Kalki Online
kalkionline.com