சிறுகதை: புரியாத பாசப் போராட்டம்!

பிள்ளைப் பாசமா? பெற்றோர் அலட்சியமா? - ஒரு தந்தை சந்திக்கும் தர்மசங்கடம்!
family bonding story
family bonding storyimage credit: AI
Updated on
MM strip
MM strip

“டாக்டர் என்ன சொன்னாருங்க..?”

வாசலிலேயே நின்றிருந்த இலக்கியா பதட்டத்துடன் என்னைப் பார்த்து கேட்டாள்.

என் கைவிரல் பிடித்திருந்த ப்ரீதி “ஒண்ணும் இல்லை, ச்சூ போயிடுச்சு..” என்றபடி உள்ளே ஓடினாள். அவளது இடதுகை சுண்டுவிரலில் தொப்பி மாதிரி பேண்ட்-எய்ட் (Band-Aid) கட்டு போடப்பட்டிருந்ததை கவனித்துவிட்டாள் இலக்கியா.  

“எக்ஸ்ரே, ஸ்கேன் ஏதாவது எடுத்தாங்களா.?” பின்னாலேயே வந்தாள்.

ஹாலில் இருந்த குடிநீர் பாட்டில் திறந்து கொஞ்சம் அருந்தினேன் நான். சோஃபாவில் அக்கடாவென விழுந்தேன். ஒன்றும் இல்லை, கதவு இடுக்கில் சுண்டு விரல் சிக்க வைத்துக் கொண்டாள் பாப்பா. எத்தனை இயல்பான விசயம். அதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

“கேட்டுக்கிட்டே இருக்கேன். பதிலே சொல்ல மாட்டேன்றீங்க..!” டென்ஷனில் கத்தினாள். அவளது சத்தம் கேட்டு அறைக்குள்ளிருந்து அம்மா வெளியில் வந்தாள். என் முகம் பார்த்தாள்.

“ஹேய்.. ஈசி, பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்லை. டென்சன் ஆகாதே,” என்றேன் மென்குரலில்.

"எப்படி கத்தினாள் தெரியுமா? அப்படியே மூஞ்சியெல்லாம் ரத்தம் பாய்ஞ்சு செவ்வாழைப்பழம் மாதிரி சிவந்து போச்சு. கண்ணீர் தாரைதாரையா கொட்டுது..”

திகில் பட பாணியில் அந்த சம்பவத்தை மீண்டும் விவரித்தாள் இலக்கியா.

“டாக்டர் மருந்து கொடுத்திருக்காரா?” என்றாள் அம்மா.

“ஆயின்மெண்ட் கொடுத்திருக்காரு. வலி நிவாரணி மாத்திரை ரெண்டு செட் இருக்கு. சாப்பிட்டதும் கொடுக்கணும்.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை : பக்தியும் போதைதான்!
family bonding story

 “கடவுளே இவளை இனி மாத்திரை சாப்பிட வைக்கிறதுக்குள்ள..” புலம்பினபடியே உள்ளே சென்றாள் இலக்கியா.

அம்மா அருகில் உட்கார்ந்தாள். “பேண்டேஜ் போடறப்ப அழுதாளோ..?”

 “ரொம்ப இல்லம்மா. எல்லோரும் சேர்ந்து சமாளிச்சுட்டோம்.”

சட்டென ஞாபகம் வந்தது. “அம்மா உனக்கு பாதம் வலிக்குதுன்னு சொன்னியே. கால் கீழே வெச்சா உணர்ச்சியே இல்லைன்னு. இப்ப எப்படி இருக்கு?”

“ம்..? அதைவிடு. சரியாகிடும்..” புன்னகைக்க முயன்றாள்.

 “நீ சொல்லியே ஒரு மாசம் இருக்கும்ல..” யோசித்தேன்.

“கிளம்பும்மா. ஒரு நடை போயிட்டு வந்துடுவோம்..”

பின்வாங்கினாள். “வேணாம் விடுடா. நீ இப்பத் தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தே. திரும்பவும் அங்கேயா. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.”

எனக்குள் குற்ற உணர்ச்சி அழுத்தியது. “வேணாம்மா. சொல்லி ஒரு மாசம் ஆச்சுன்றே... இதே ரொம்ப கால தாமதம். பிரச்னை பெரிசாகறதுக்குள்ள அதை என்னன்னு பார்த்துடுவோமே. பத்து நாள் முன்னாடி வேற ஞாபகப்படுத்தினாய். அப்பவும் என்னால கூட்டிட்டுப் போகமுடியலை. இப்ப பெரிய வேலை ஒண்ணும் இல்லை. கிளம்பும்மா போயிட்டு வந்திடுவோம்..”

“விட்றா. நாளைக்குப் பார்த்துக்குவோம்.”

என் மனம் ஆறவில்லை. என் குழந்தைக்கு ஒன்று எனில் துடித்துப் போகும் நான், பெற்ற அம்மாவுக்கு ஒன்று எனில் பெரிதாக மதிக்கவில்லையே... ஏன்? அலட்சியப்படுத்துகிறேனே. தாய் மேல் அன்பு குறைந்துவிட்டதா? இல்லை வாரிசுகளுக்கான முக்கியத்துவத்தில் பெற்றவர்கள் அப்படியே பின்தங்கிவிட்டார்களா?

இதையும் படியுங்கள்:
சிறுகதை : ஒற்றைச் சுடர்
family bonding story

மனதில் இருப்பதை அம்மாவிடம் கொட்ட... புன்னகைத்தாள்.

“கவலைப்படாதே. இதெல்லாம் இயல்பான விசயம் தான். எல்லா பெத்தவங்களுக்கும் உண்டான குணம் இது. என்ன காரணம் தெரியுமா? நம்ம யாருக்கும் இறந்தகாலம் பிடிக்கறதில்லை. அது மேல மதிப்பும் இருக்கிற தில்லை. ஆனா எதிர்காலத்து மேல ஒரு பயமும், மரியாதையும் இருக்கும். நம்ம குழந்தையை நம்ம கவனிச்சுக்கிட்டாத் தானே நம்மளோட வயசான காலத்துல அது நம்மளை கவனிச்சுக்கும்ன்ற உளவியல் வெளிப்பாடு இது!  நாங்களும் இப்படி தான் இருந்தோம். எங்களைப் பெத்தவங்களும் இப்படித் தான் இருந்தாங்க.”

அம்மா சொல்லிக் கொண்டே அறைக்குள் நகர... யோசனையில் ஆழ்கிறேன் நான்.

logo
Kalki Online
kalkionline.com