

கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்த சேகரின் அருகில் வந்த அவன் மனைவி பைரவி "ஏங்க இது உங்களுக்கே நல்லா இருக்கா நீங்க ஹேர் கட் செஞ்சு மூணு மாசம் ஆச்சு, அக்கம் பக்கம் எல்லாம் உங்க வீட்டுக்காரருக்கு எதுவும் வேண்டுதலான்னு கேட்கிறாங்க.
"எதுக்குத்தான் முடியை இப்படி வளத்து வச்சிருக்கீங்களோ உங்க தலையும் தாடியும்" என சிடுசிடுத்தாள்.
"இப்ப ட்ரெண்டே தாடி தான் பட ஹீரோஸ் எல்லாம் இப்படித்தான் இருக்காங்க நீ பார்க்கல" என்றான் சேகர் சிரித்தபடி. "என்னவோ போங்க எனக்கு பிடிக்கல" என அலுத்துக் கொண்டாள் பைரவி .
அன்று சேகருக்கு ஆபீஸில் வேலை சீக்கிரம் முடிந்து விட்டது. வீட்டுக்குச் செல்லக் கிளம்பியவனுக்கு மனைவி பைரவியின் புலம்பல் நினைவுக்கு வர தன் டூவீலரை நேரே சலூனுக்கு விட்டான். அங்கு முடி திருத்துபவர் அவன் தாடியை மழித்து, தலைமுடி, மீசையை ட்ரிம் செய்து முடித்தார்.
அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் சேகர். அவன் முகம் அவனுக்கே புதிதாக தெரிந்தது. வாவ் இது பைரவிக்கு ஒரு ஸர்பிரைஸ் என நினைத்த படி வீட்டுக்கு திரும்பினான்.
வீட்டு வாசலுக்கு வந்த சேகருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் வர அங்கேயே நின்று டூவீலரில் சாய்ந்து கொண்டு போனை பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் பைரவியிடமிருந்து போன் வந்தது "ஹலோ" என்றவனிடம் பைரவி பதட்டமாக "என்னங்க நீங்க எங்கே இருக்கீங்க. ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டீங்களா. நம்ம வீட்டு வாசல்ல ரொம்ப நேரமா ஒருத்தன் போன் பார்த்துட்டு நம்ம வீட்டை நோட்டம் விட்டுட்டு இருக்கான். எனக்கு பயமா இருக்குங்க. நீங்க சீக்கிரம் வாங்க" என்றாள் பயந்த குரலில்.
"இதோ வரேன்" என்று கூறி போனை கட் செய்தவன்"அட இவ என்ன இப்படி பயந்துக்கிறா" என நினைத்து சிரித்த படி வீட்டினுள் நுழைந்தான் சேகர்.
அங்கே ஹால் சோபாவில் ஓய்வாக பதட்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்திருந்த பைரவியை பார்த்து "ஏய் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சு வந்தா என்னை அடையாளமே தெரியலையா உனக்கு? பயந்துட்டையா நீ" என்றான் சேகர் ஒரு சின்ன சந்தேகத்துடன்.
"அடையாளம் தெரியாம என்ன, நீங்க தான் சர்ப்ரைஸ் கொடுப்பீங்களா நாங்க உங்களை கலாய்க்க மாட்டோமா" என்றாள் பைரவி நமுட்டு சிரிப்புடன்.
"அட..சே.. என்னை கலாய்ச்சயா.., நான் நினைச்சேன், நீ அப்படியெல்லாம் பயப்படற ஆளில்லையேன்னு" என்று கூறி அசடு வழிந்தான்சேகர்.
"இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே என் மாமா.." என்று கூறி கலகலவென சிரித்தாள் பைரவி.