சிவபெருமானின் உக்கிரமான கங்காள மூர்த்தி தோற்றம்: மகாபலியின் வரலாறு!

சிவபெருமானின் கங்காள மூர்த்தி வடிவம் மற்றும் மகாபலி சக்ரவர்த்தி வரலாறு
கங்காள மூர்த்தி
கங்காள மூர்த்திAI Image
Updated on
MM strip
MM strip

சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்றான கங்காள மூர்த்தி தோற்றத்தின் ஆன்மீக ரகசியத்தையும், மகாபலி சக்ரவர்த்தியின் புராண வரலாற்றையும் முழுமையாக அறியுங்கள்.

சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று கங்காள மூர்த்தி அம்சம். ஈசன் இந்த வடிவம் கொண்ட சுவையான வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாமா?

சிவபெருமானின் ஆலயம் ஒன்றில் எரிந்துகொண்டிருந்த தீபம் அணைந்து போகக்கூடிய நிலையில் இருந்தபோது, அவ்வழியாக வந்த எலி, எதேச்சையாக திரியைத் தன் வாலினால் தூண்டிவிட, தீபம் நன்றாக எரிந்தது. அறியாமல் எதேச்சையாக செய்தாலும், சிவத் தொண்டிற்கு மகிமை அதிகமல்லவா. ஆலய தீபத்தைத் தூண்டிவிட்டு எரியச் செய்த புண்ணியத்தின் பலனாக மறுபிறப்பில் மன்னராகும் பேறு பெற்றது எலி.

மகாபலிச் சக்ரவர்த்தியாக எலி பிறந்தது. அரக்கர் குலத்தில் பிறந்தாலும், சிறந்த மன்னனாக ஆட்சி புரிந்தான் மகாபலி. திருமால் வாமன அவதாரம் எடுத்து வந்து, மகாபலியிடம் மூன்றடி மண் தானம் கேட்டார். மன்னனும் தருவதாக ஒப்புக்கொண்டான். வாமன வடிவில் வந்த பரந்தாமன், விஸ்வரூபம் எடுத்தார். தன் ஓரடியில் பூமியையும், இரண்டாவது அடியில் விண்ணுலகையும் அளந்தார்.

மூன்றாவது அடியை எங்கே வைத்து அளப்பது என்று திருமால் கேட்க, தானம் அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது என்பதால், தன் தலையில் வைத்து மூன்றாவது அடியை அளக்குமாறு சொன்னான் மன்னன்.

இதையும் படியுங்கள்:
இரவுதோறும் பவானி அம்மனைக் காண கருவறைக்குள் வரும் 5 அடி நீள பாம்பு!
கங்காள மூர்த்தி

திருமாலும் மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அளக்க, மன்னன் பூமிக்குள் புதைந்து பாதாள லோகம் சென்றான். இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களைக் காண வரம் தரவேண்டும் என்று திருமாலிடம் வேண்டினான். அவரும் வரமளிக்க, அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருநாளன்று நாட்டு மக்களைக் காண மாவலி சக்ரவர்த்தி வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் வண்ணமாக அத்தப்பூக் கோலமிட்டு, விருந்து சமைத்துக் கொண்டாடுகிறார்கள்.

உலகிலேயே மிகச்சிறந்த மன்னனாக, மக்களால் கொண்டாடப்பட்ட அரசனாக விளங்கிய மகாபலியை பூமிக்குள் அனுப்பியதால், வாமன அவதார மூர்த்திக்கு ஆணவம் ஏற்பட்டது. தேவர்களும் முனிவர்களும் இதனால் துன்பத்திற்கு ஆளானார்கள்.

அவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தங்கள் நிலை குறித்தும், வாமன மூர்த்தியின் ஆணவம் குறித்தும் தெரிவித்தனர்.

தேவர்களைக் காக்க சிவபெருமான் தன் வச்சிரதண்டத்தால் வாமன மூர்த்தியின் மார்பில் தாக்கி அவரைக் கொன்றார். வாமனரின் தோலை உரித்து உடலில் போர்த்திக் கொண்டார். முதுகெலும்பினை தண்டமாக கையில் எடுத்துக்கொண்டார்.

கங்காள மூர்த்தி
கங்காள மூர்த்திAI Image

வாமன மூர்த்தி இறந்துபோக, அவதார நோக்கம் முடிந்த திருமால், சுய ரூபம் பெற்று வைகுண்டம் சென்றார். வாமன மூர்த்தியை அழித்து, அவரின் தோலை உடுத்தியபடி, அவரின் முதுகெலும்பை தண்டமாகக் கையில் ஏந்தியிருக்கும் சிவபெருமானின் இந்தக் கோலமே கங்காளநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

கங்காளமூர்த்தியின் ரூபத்தை அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்க முடியாது. நான்கு திருக்கரங்களில் அருளும் இவரின் வலது மேல் கை கீழே வரை வந்திருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும். வலது கீழ் கையில் உடுக்கைக்குரிய கோலும், இடது மேல் கையில் தண்டும் அதில் வாமனரின் சடலம் தொங்கிக் கொண்டிருக்கும். இடது கீழ் கையில் உடுக்கை இருக்கும்.

நெல்லை அம்பாசமுத்திரம் அருகில் இருக்கும் பிரம்மதேசம் அயனீஸ்வரம் ஆலயத்தில் பிரமாண்ட கங்காளநாதரைத் தரிசிக்கலாம். சுமார் ஏழடி உயரத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் கங்காளநாதர். அவரைச் சுற்றி பூத கணங்கள், தேவர்கள், மகாவிஷ்ணு, ரிஷிகள் என அனைவரும் சுதை சிற்பங்களாக ஒரே சந்நிதியில் அருள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அம்மனுக்கு அழகழகாய் புடவைகள்... எந்த நிறத்திற்கு என்ன பலன்? தெரிந்து கொள்ளலாமா!
கங்காள மூர்த்தி

ஒருசில சிவாலயங்களில் உற்சவ விக்கிரகங்களில் கங்காளநாதர் இருப்பதைக் காணலாம்.

இந்த ஆன்மீக வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலம் சிவபெருமானின் உக்கிரமான திருவிளையாடல்களுக்குப் பின் உள்ள தத்துவார்த்த உண்மைகளையும், நமது அறியாமைச் செயல்கள் கூட எத்தகைய நற்பலன்களைத் தரும் என்ற விழிப்புணர்வைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com