

புத்தகங்களின் பெருமையோடு ஆரம்பித்து, மனித குலத்தின் ஆகப்பெரிய சோகமான ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களையும், அதன் ஆறாத வடுக்களையும் விவரிக்கும் இந்தக் கட்டுரையின் சுவாரஸ்யமான மற்றும் ஈர்க்கக்கூடிய அறிமுகக் குறிப்பு இதோ: இரத்தவெறி பிடித்த போர்களின் கோர முகம் என்ன? அப்பாவி மக்களின் தவிப்புகள் எத்தகையவை? உலகத் தலைவர்களுக்கு இந்தக் கட்டுரை எழுப்பும் எச்சரிக்கை மணி என்ன?
புத்தகம் என்பது எண்ணப் பதிவாகிய கருத்துக்களை எழுத்துருவில் காட்டும் ஒரு கருவி. காலத்தின் கண்ணாடி என்றும் காலப் பெட்டகம் என்றும் புத்தகங்களை அழைப்பதுண்டு. முன்பெல்லாம் பனையோலைகளில் எழுத்தாணியால் எழுதி ஓரத்தில் துளைகளைப் போட்டுக் கயிற்றில் கோர்த்து வைத்தனர். பொத்துக் கோத்ததைப் ‘பொத்தகம்’ என்றனர். நாளடைவில் அது புத்தகம் என்று வழங்கலாயிற்று. நூலுக்குரிய இலக்கணத்தை நன்னூல் விரிவாகவே விளக்கியுள்ளது.
புத்தகம் அறிவுப் பெட்டியின் சாவி;
மனயிருள் நீக்கும் மகத்துவ ஒளி;
மௌன நண்பன்;
டிக்கட் செலவின்றிப் பயணிக்க உதவும் வாகனம்;
மருத்துவர் உதவியின்றிச் சோகத்தைத் துரத்தும் சாதனம்
என்று புத்தகங்களின் பெருமை நீண்டு கொண்டே போகும்.
‘அதிகாரம் ஊழல் செய்கிறது; அதிக அதிகாரம் முழுமையாய் ஊழல் செய்கிறது!’ (Power corrupts, Absolute power corrupts absolutely) என்பதைப்போலவே, மனித வாழ்க்கையை எளிதாக்கும் விஞ்ஞான நாகரீகமே, மனத வாழ்வின் அழிவுக்கும் காரணமாக அமைவதே வேதனை! இன்று விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சக் கட்டமாக இருப்பது அழிவைத் தரும் அணுகுண்டுகளே!
‘இன்பம் இன்பம் என்பதெல்லாம் துன்பத்தின் சாயலே!’ என்ற கவிஞரின் வரிகள் எவ்வளவு அற்புதமானவை!
அணுக் குண்டுகள் கொடுத்த அழிவைக் கண்கூடாகக் கண்ட பின்னாலும், இந்த மனிதச் சமுதாயம் இன்னும் போருக்காக அலைகிறதென்றால், என்னவென்றுதான் சொல்வது இந்த மனிதர்களை? இரத்தவெறி பிடித்த விலங்குகளுக்கும் இவர்களுக்கும் ஏது வேற்றுமை?
அந்தக் காலத்திலும் அரசர்கள் போர்களை நடத்தினார்கள். அசுவமேத யாகங்கள் செய்தார்கள். தங்கள் நாடுகளை விஸ்தரிக்கவும், பொருட்களைச் சேர்க்கவும் யுத்தத்தை மேற்கொண்டார்கள். ஆனால் எப்படி? அரசனும், அரசனும் மோதினார்கள்.
படைத்தலைவனும் எதிரி நாட்டுப் படைத்தலைவனும் சண்டையிட்டார்கள். வீரர் களும் வீரர்களும் நேருக்குநேர் அடித்துக் கொண்டார்கள். வீரத்திலும் நேர்மையை அனுசரித்தார்கள். ’இன்று போய் நாளை வா!’ என்று இதய சுத்தியுடன் கூறினார்கள்.
நிராயுத பாணிகளைக் கொல்வதை இழுக்காக எண்ணினார்கள்.
ஆனால் தற்காலப் போர்கள் முதலில் கொல்வது நிராயுத பாணிகளைத்தான்!
அதிலும் போருக்குச் சம்பந்தமேயில்லாத அப்பாவி மக்களை. ஆகாயத்திலிருந்து போடப்படுகின்ற அணுக்குண்டுகள், ஆடென்றும்,மாடென்றும், மனிதரென்றும் பார்க்காமல் அத்தனை உயிர்களையும் பலி வாங்குகிறது. பாலங்கள், பலமாடிக் கட்டிடங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள் என்ற பேதமெல்லாம் அது பார்ப்பதில்லை. எல்லாம் நிர்மூலந்தான்! ஆண்டுக் கணக்கில் திட்டமிட்டு, ஆயிரமாயிரம் பேரின் உழைப்பில் உருவாகும் அவையெல்லாம் ஒரு நொடியில் பாழ்! பல்லாயிரக் கணக்கோரின் அவலம் காற்றில் கலக்க, அட்ராசிடிகாரர்களின் ஆணவச் சிரிப்பு அந்தக் காற்றையும் கலங்கப்படுத்துகிறது!
அது 1945 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி. கதிரவன் எப்போதும் போலத்தான் தன் பயணத்தைத் தொடர்ந்தான்-ஹிரோஷிமா நகரின் மீதும்.
காலைப் பறவைகள் கிரீச்சிட்டு ஓய, காலை எட்டே கால் மணி!நகரின் மையப் பகுதியில் வந்து விழுந்து வெடிக்கிறது அந்த யுரேனிய அணுகுண்டு. என்ன நடந்தது என்று எவரும் அறிவதற்குள்ளாகவே ஒரு பெரும் சோகப் பிரளயம் அந்தப் பிராந்தியத்தை ஆட்கொண்டு விடுகிறது. சுமார் 16 கி.மீ. நிலப்பரப்பு முழுவதும் இடிபாடுகள்.
90000 லிருந்து 166000 மனித உயிர்கள் காவு கொடுக்கப்படுகின்றன. பாதி உடனடியாக! மீதி 2 லிருந்து நான்கு மாதங்களில்-அணுஅணுவாகச் சித்திரவதையை அனுபவித்து!
அந்தத் துயரம் ஓயும் முன்னால், அடுத்த மூன்று நாட்களில் குறிவைக்கப்படுகிறது நாகசாகி! 1945 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 9 ஆம் நாள் காலை 11மணி. புளூடோனியக் குண்டு ஒன்று விழுகிறது நகரின் மீது. விழுந்ததுதான் தெரிந்தது. அடுத்த நொடியில் அனைத்தும் தீப்பிழம்பில்.
18 கி.மீ. உயரத்திற்குத் தீப்பிழம்புகள் வியாபித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. சுமார் 80000 மனித உயிர்கள் அவஸ்தையிலும், அல்லோல கல்லோலத்திலும். தீப்பிழம்புகள் கரும்புகை மேகங்களாக மாறிக் கலவரப்படுத்த, கலவரப்படத்தான் கீழே மனிதர்கள் இல்லையே!
கதிர் வீச்சில் 15-20 சதவீதத்தினரும், தீக்காயங்களில் 20-30 விழுக்காட்டினரும், கதிர் வீச்சு நோய்களால் 50-60 சதவிகிதத்தினரும் இறந்ததாகக் கணக்கிடப்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலோர் அப்பாவிப் பொது மக்களே!
இது நடந்து 81 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருக்கும் நிலையிலும், இதன் வடுக்கள் ஆறாத போதிலும் உலகத் தலைவர்கள் போர் மேகம் சூழ வழி வகுப்பது ஏனென்றே தெரியவில்லை.
மனிதர்கள் உருவாக்கிய அந்த நரகத்தில், இன்றைக்கும் பிறக்கும் குழந்தைகளில் பல, சதைப் பிண்டங்களாகவே இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!
இந்தச் சோக வரலாற்றைச் சார்ல்ஸ் பெல்லிகிரினோ (Charles Pelligrino), தனது கோஸ்ட்ஸ் ஆப் ஹிரோஷிமா (Ghosts of Hiroshima) புத்தகத்தில் நிஜக் கதையாக, விளக்கியுள்ள விதம் பெரும் பாராட்டுக்குரியது.
துன்பங்களை அனுபவித்தவர்களின் வாய் வார்த்தைகளாலேயே அந்தச் சோக வரலாற்றைச் சுவை படப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். image0.jpeg
பதினொரு வயதான பாலகன் எகியோ புககடா (Echiyo Fugakata) சொன்னதைக் கேட்போமா?
“நூறு மின்னல்கள் சேர்ந்தாற்போன்ற ஒளி வெள்ளம்! வானமே இடிந்தாற் போன்ற வெடிச் சப்தம்! அனலாய்க் கதிர் வீச்சு!வினாடிகளில் கண்முன்னே வீடு இடிந்து தரைமட்டமாகியது. பசுமாடொன்று இடிந்த வீட்டின் மீது மோதி என் தலையில் வந்து விழுந்தது. எனது இரண்டு கால்களும் நொறுங்கிச் செயலிழந்து விட்டன.
பசுவின் கீழே கிடந்த என்னை எனது பாட்டி ஓடி வந்து தூக்கினார். அவர் வெளியில் நின்றிருந்ததால் அவர் முதுகில் சருமம் கிழிந்து வரி வரியாய்த் தொங்கியது. சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். எனது அத்தை என்னைத் தூக்கினார்.
அவருக்குக் காயமில்லை. ஆனால் அக்டோபரில் அவர் முடி கொட்ட ஆரம்பிக்க, சருமத்தில் ஊதா நிறத்திட்டுக்கள் தோன்றின. சில நாட்களிலேயே, சாப்பிடும்போதே அவர் இறந்து விட்டார். இலையுதிர் காலம் ஆரம்பித்ததும் நல்ல மழை பொழிந்தது. எல்லா இடங்களிலும் குவிந்து கிடந்த சாம்பல்களை மழை நீர் அடித்துப் போக, அங்கெல்லாம் அமிழ்ந்து கிடந்த எலும்புக் கூடுகள் வானத்தைப் பார்க்க ஆரம்பித்தன!
டாக் புருமோடோ (Tak Furumoto) சொன்னது இதுதான்!
“நான் அமெரிக்கச் சிறை முகாமில்தான் (Prison Camp) பிறந்தேன். இருந்தாலும் என் முன்னோர்கள் ஜப்பானில் வசித்த காரணத்தால் ‘மீண்டும் திரும்பி வராதீர்கள்!
(Back Where you came from and Never Return) என்ற எச்சரிக்கையுடன் நாங்கள் ஜப்பானுக்கு அனுப்பப் பட்டோம். எங்கள் துரதிர்ஷ்டம் நாங்கள் ஹிரோஷிமாவில் குடியேறினோம்! விக்டர் ஜான் (Victor Chan) மற்றும் ஜே.ஆர்.பிஞ்ச் (J.R.Finch) புலம்பித் தவித்துக் கூறியது இதைத்தான்!
“இந்தப் பிறவியில் எங்களுக்குத் தண்டனையும் சாபங்களும் கொடுக்கப்பட்டன.
இவ்வளவுக்கும் நாங்கள் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. முடிந்தவரை பிறருக்கு உதவிகளைத்தான் செய்தோம். அந்த உதவிகளுக்காக ஆசீர்வதிக்கவும் பட்டோம். அவை கூட எங்களைக் காப்பாற்றவில்லையே!”
இவை சில துளிகள்தான். படத்தின் ட்ரைலர் போல. முழுப்படம் நம்மை மூலைக்குத் தள்ளி அழ வைக்கும்!
இதனைத் திரைப்படமாக்க பிரபல இயக்குனர் ‘ஜேம்ஸ் காமரூன்’ (James Cameron) தயாராகி வருகிறாராம். அவதார் பட வேலைகள் முடிந்த பிறகு 2029 க்குப் பிறகு படம் வெளி வரலாம் என்று பேசப்படுகிறது.
உலகத் தலைவர்கள் அணுகுண்டு கலாச்சாரத்திற்கு விடை கொடுத்துவிட்டு நம்மை வாழ விட வேண்டும்!
அந்தக் கல்லறையின் ஒரு சமாதியை ஒரு பெண் தன் விசிறியால் விசிறிக் கொண்டிருந்தாராம். அந்த வழியாகச் சென்றவர் இரக்கப்பட்டு, ”ஏனம்மா! இந்த வெயிலில் அமர்ந்து விசிறுகிறாய்?அவருக்கு வியர்க்கவா போகிறது?” என்று அணுசரணையுடன் கேட்டாராம்! அதற்கு அந்தப் பெண்மணி, ”என் கல்லறை காயும் வரையாவது உன் மறு திருமணத்தைத் தள்ளிப்போடு! என்று கடைசியாகச் சொல்லிச் சென்றார் என் கணவர். அவர் இறுதி ஆசையை நிறைவேற்றவே இப்படிச் செய்கிறேன்!” என்றாராம்.
ஹிரோஷிமா நாகசாகி கல்லறைகள் இன்னும் ஈரமாகத்தான் இருக்கும். அந்த வடுக்கள் மறையும் முன்னே அடுத்த போருக்குத் தயாராவதில் துளியும் நியாயமிலையே! உலக மக்களில் பெரும்பாலானோர் போர்களை விரும்பவில்லை என்பதே நிதர்சனம்!
யுத்தங்களை நிறுத்தி யுக்தியுடன் செயல்பட உலகத் தலைவர்கள் முன் வர வேண்டும்!
அதுவே இந்தப் பூமி வாழ் மக்களின் ஒன்றார்ந்த பிரார்த்தனை!