
மார்கழி என்றாலே அனைவரது நினவுக்கும் வருவது கோலம்தான். மார்கழி மாதத்தில் கோலமிடும் வழக்கம் எப்படி தோன்றியது? என்பதற்கு புராணக்கதை ஒன்று இருக்கிறது. ஆம், மகாபாரதப் போர் மார்கழி மாதத்தில்தான் நடந்தது.
அவ்வேளையில், பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர் வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலைச் சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு வியாசர் ஏற்பாடு செய்தார். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்து வந்தார் என்று கூறப்படுகிறது. பாண்டவர்களையும், பாண்டவர்களைச் சார்ந்தவர்களையும் அடையாளம் கண்டு கிருஷ்ணர் காத்தது போன்று, மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலங்கள் போட்டு வைக்கும் திருமாலின் பக்தர்களையும் திருமால் காப்பார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்கழி மாதத்தில் கோலமிடும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.
மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓஸோன் நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்துக் கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர்.
மேலும், நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்கவேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷ வாயுவான கார்பன் - டை - ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை இறைவனின் பெயரால் நம் முன்னோர்கள் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் என்று சொல்பவர்களும் உண்டு.
மார்கழி மாதம் முழுவதும் தேவர்கள் அனைவரும் தங்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளான திருமாலை வழிபடுகிறார்கள். தேவர்களெல்லாம் தம்மைப் பூஜித்து வழிபடும் மாதம் என்பதால்தான் பகவான் கிருஷ்ணர், மாதங்களில் தாம் மார்கழியாக இருப்பதாக சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார். மேலும் மார்கழி மாதத்தில் கோலம் போடுவதால் பலவிதமான நன்மைகள் உள்ளன.
இம்மாதம் கோலமிடுவது மட்டுமில்லாமல், அதில் பரங்கிப்பூவையும் வைப்பது தனிச்சிறப்பு என்கின்றனர். இப்படி கோலத்தில் பரங்கிப்பூ வைப்பது, திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.
கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. கோலம் இடுதல் ஒரு கலை. இதில் ஒரு ஆரோக்கிய ரகசியமும் ஒளிந்துள்ளது. கோலம் இடுவதற்காக காலையில் எழுவது உடலுக்கும், மனதிற்கும் நல்லது. விடியற்காலையில் எழுந்து கோலம் இடும் பழக்கம் ஓசோனிலிருந்து வரும் சுத்தமான காற்று கிடைக்க செய்கிறது. கோலம் இடுவது ஒரு வகையில் கணக்கு எனலாம்.
கோலங்கள் போடாத வீடுகளில் கூட மார்கழி மாதத்தில் கோலமிட்டு நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசணி பூவையாவது வைத்திருப்பார்கள். நம் வீட்டில் பூக்கும் எந்த பூ கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.