

நாட்டின் இரும்பு மங்கையாக வரலாற்றில் பதிவான இந்திரா காந்தியின் கடினமான முடிவுகளுக்குப் பின்னால், ஒரு புத்தகம் இருந்ததை உங்களால் நம்ப முடிகிறதா? சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆனந்த் பவனின் தனிமைச் சுவர்களில் தொலைந்த சிறுமி இந்திராவின் கைகளில் தவழ்ந்த ஒரு சிறிய புத்தகம், அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்தது. தேனீக்களின் உலகத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட அந்த அரிய தத்துவம் என்ன? அவரை இந்தியாவின் சக்திவாய்ந்த பிரதமராக மாற்றிய அந்த ரகசியத்தை இப்போதே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
“இந்த உலகம் ஒரு பெரிய புத்தகம் போன்றது. அதன் கல், மண், நதி ஒவ்வொன்றும் ஒரு பக்கம். அதை வாசிக்கக் கற்று கொள்“ – நேரு.
சுதந்திரப் போராட்டக் களத்தின் பேரிரைச்சலுக்கு இடையே, அலகாபாத்தின் ஆனந்த் பவனில் ஜன்னலோரத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்தப் பதிமூன்று வயதுச் சிறுமியின் மனதிலும் அப்படியொரு பேரதிசயம் நிகழ்ந்தது.
அவள் கைகளில் இருந்த ஒரு சிறிய புத்தகம் அவளுக்குள் ஒரு புதிய பிரபஞ்சத்தைத் திறந்து காட்டியது. அந்தப் புத்தகம் அவளது பார்வையை மாற்றியது. சிந்தனையை விசாலமாக்கியது. முடிவெடுக்கும் திறனைக் கூர்மையாக்கியது.
புத்தகங்களால் செதுக்கப்பட்டு, வரலாற்றில் புயலாக வீசிய அந்தச் சிறுமி தான், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி!
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள். இந்தியாவின் மூன்றாவது பிரதமர். கிழக்கு பாகிஸ்தான் பகுதி வங்க தேசம் என்னும் தனி நாடாக உருவாக்கியவர். நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியவர். பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியவர். காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கிய இரும்பு மங்கை. இந்த இரும்புக்குள் ஈரம் சுரந்ததுக்கு காரணம் ஒரு புத்தகம் என்றால், நம்பமுடிகிறதா?
இந்திரா பிரியதர்சினி நவம்பர் 19, 1917-ல் உத்திரப் பிரதேசம், அலகாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜவஹர்லால் நேரு. தாய் கமலா நேரு, மார்ச் 26, 1942-ல் ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்து கொண்டதால், இந்திரா பிரியதர்சினி இந்திரா காந்தி ஆனார்.
இந்திரா காந்தியின் பதிமூன்று வயதில் அவரது சிந்தனையை மிகவும் கவர்ந்து. இயற்கையின் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அவருக்கு ஒரு தீராதா பிணைப்பை ஏற்படுத்தியது.
மோரிஸ் மேட்டர்லின்க் (Maurice Materlink) எழுதிய “தி லைஃப் ஆஃப் தி பீ (The Life Of The Bee) என்ற புகழ் பெற்ற புத்தகம். இது தேனீக்களின் வாழ்க்கை முறை பற்றிய நூலாகும்.
நேரு அவர்கள் அலகாபாத் சிறைச்சாலையில் இருந்த போது, முசோரியிலே இருக்கக் கூடிய தன் மகள் சிறுமி இந்திரா பிரியதர்சினிக்குப் பிறந்த நாளையொட்டி ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக இந்திரா தன் தந்தை நேருவிடம் சொன்னார். அதன் பிறகு மூன்று நான்கு கடிதங்கள் எழுதினார். அந்தக் கடிதங்களும் இந்திராவுக்கு மிகவும் பிடித்து விட்டது.
பிறகு அந்தக் காலக்கட்டத்தில் இருக்கிற வரலாற்றையும் வேறுபல சுவாரசியமான செய்திகளையும் இணைத்து தந்தை மகள் என்ற உறவு சார்ந்த கடிதத்தையும் தாண்டி சரித்திரத்தையும் நிகழ்வுகளையும் சேர்த்து அந்தக் கடிதங்களில் சொல்லத் தொடங்கினார். அந்தக் கடிதங்கள் இந்திராவுக்கு மிகவும் விரும்பத் தக்கவையாக இருந்தன.
இந்திரா அவர்களும் வாசிப்பின் மீது மிகவும் தீவிரம் காட்டினார். ஆனந்த் பவனில் சிறுவயது நாட்கள் பெரும்பாலும் தனிமை நிறைந்தவையாக இருந்தன. காரணம் அவரது பெற்றோர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால், புத்தகங்களே இந்திராவுக்கு சிறந்த தோழர்களாயின.
இந்திராவுக்கு பதிமூன்று வயது நடந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில், நேரு அவர்கள் நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய எழுத்தாளர் மோரிஸ் மேட்டர்லின்க் ( Maurice Materlink ) எழுதிய “தி லைஃப் ஆஃப் தி பீ (The Life Of The Bee) (1901) என்ற நூலை இந்திராவின் பிறந்த நாள் பரிசாக பரிசளித்தார்.
தேனீக்களின் அதிசய உலகம்:
மேட்டர்லின்க் இந்நூலில் தேனீக்களின் வாழ்க்கையை வெறும் அறிவியல் பார்வையில் மட்டும் அணுகாமல், ஒரு கவித்துவமான தத்துவப் பார்வையில் விவரித்திருந்தார்.
ஒரு தேனீக்கூட்டிற்குள் இருக்கும் அசாத்தியமான ஒழுக்கம், சுயநலமற்ற உழைப்பு மற்றும் ராணித் தேனீயைச் சுற்றி இயங்கும் ஒட்டு மொத்த சமூகக் கூட்டமைப்பு. தேனீக்கள் எவ்வாறு இயற்கையோடு இயைந்து பூக்களோடு உரையாடி, தங்களின் கூட்டைக் கட்டமைக்கின்றன என்ற நுட்பமான விவரிப்பு இந்திராவின் மனதை கொள்ளைக் கொண்டன.
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற தத்துவத்தை இந்த நூல் அவருக்கு புகட்டியது.
ஒரு தனித்த தேனீயால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் அவை ஒன்றாக இணையும் போது ஒரு மாபெரும் கூட்டைக் கட்டமுடியும் என்ற சமூகக் கூட்டமைப்பு தத்துவம், பிற்காலத்தில் அவர் ஒரு மக்கள் தலைவராக உருவெடுக்க உதவியது.
பின்னர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, சூழலியல் மீதான அவரது அக்கறைகள் சட்டங்களாக மாறின. சூழல் மாசுபாடு தொடர்பாக இன்று நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் இந்திரா காந்தியின் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டவை தான். கானுயிர்ப் பாதுகாப்பு, வனபராமரிப்புச் சட்டம் அவர் இயற்றிய சட்டங்களில் மிகமுக்கியமானவை.
ஆம், ஒரு தேனீயின் வாழ்க்கை முறை, இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண் பிரதமராக உருவெடுத்த ஒருவரின் மனதை ஆழமான தத்துவார்த்த மாற்றத்தை விதைத்தது என்பது வியப்பிற்குரிய ஒன்றல்லவா!
வாசிப்பு எப்படி ஒரு சாதாரண தனிமையை ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றி, மிகப்பெரிய ஆளுமை உருவாக்கத்திற்கு வித்திடுகிறது என்பதை உணர்ந்து உத்வேகம் பெறலாம்.