
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கணவன் மனைவிக்குள் அதிக சண்டை, விவாகரத்து, கொலை போன்ற சம்பவங்கள் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளன. கணவன் மனைவிக்குள் நடைபெறும் சண்டையில் தான் அதிக கொலைகள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவியை கொலை செய்யவும், மனைவி கணவனை கூலிப்படையை வைத்து கொலை செய்யவும் தயங்குவதில்லை. அதிலும் கொலை செய்வது மட்டுமில்லாமல் அதை மறைப்பதற்காக அவர்கள் செய்யும் கொடூர யுத்திகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கிறது. கொலை செய்வதற்கும், கொலையை மறைப்பதற்கும் கூகுள், யூடியூப்பில் தேடும் கொடூர புத்தி உடைய கொலைகாரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குடும்ப பிரச்னைகள் காரணமாக கணவனையோ அல்லது மனைவியையோ துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பலத்த அதிர்ச்சியையும், மக்களுக்கு பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது மட்டுமில்லாமல், இப்படியும் யோசித்து கொலைசெய்வார்களா என்று குலைநடுங்க செய்துள்ளது.
முன்னாள் ராணுவ வீரரான 45 வயதான குரு மூர்த்தி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெயர் மாதவி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென்று மாதவி மாயமானார். மாதவியின் பெற்றோர் அவருடன் போனில் பேச முயற்சித்த போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. குருமூர்த்திடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்காததால் சந்தேகமடைத்த மாதவியின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது, மாதவியின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரித்தபோது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரத்தில் மாதவியை கொலை செய்ததாக கூறிய குரு மூர்த்தி, அதன் பின்னர் போலீசிடம் மாட்டாமல் இருக்க மனைவியின் உடலை துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குருமூர்த்தி உடல் பாகங்களை வீசியதாக சொன்ன இடத்தில் சென்று பார்த்த போது, எந்த தடங்களும் கிடைக்கவில்லை. இதனால் குருமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தடங்கள் கிடைத்தால் மட்டுமே அவர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க முடியும். மேலும் குருமூர்த்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், உடல்பாகங்கள் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
ஒருவரை கொலை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. அதுவும் நாட்டை காக்கும் ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் கொடூரமாக கொலை செய்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு விஷயத்திற்கும் கொலை மட்டுமே தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 5 நிமிட உணர்ச்சி வசத்தால் நிகழ்ந்த இந்த கொலையால் இன்று 2 குழந்தைகள் தாயை இழந்து தவிக்கின்றன. ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட வயது வரை தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பு கண்டிப்பாக தேவை. அன்பும், அரவணைப்பு கிடைக்காத போது அந்த குழந்தைகள் சமுதாய பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
குருமூர்த்தி மனைவியை கொலை செய்ததை விட அதை மறைக்க செய்த செயல் கொடூரத்தின் உச்சமாகும். எந்தளவு அவரது மனதில் வன்மம் இருந்தால் இந்தளவு கொடூரமான செயலை செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. குடும்ப பிரச்சனையை உட்கார்ந்து பொறுமையாக பேசித் தீர்த்து இருந்தால் இப்போது இரண்டு குழந்தைகளும் அனாதையாக நின்றிருக்காது.
கோபமே அனைவருக்கும் முதல் எதிரி. கோபத்தால் எதற்கும் தீர்வு கிடைக்காது என்பதற்கு குரு மூர்த்தியே சாட்சி.