
மதச்சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். அதனாலேயே நமது நாட்டில் அதிகளவில் ஆன்மிக விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ம்தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி வரை கிட்டதட்ட 45 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தினமும் லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலக நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து புனித நீராடி செல்கின்றனர். சமீப காலமாக வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்தியாவின் ஆன்மிக கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு நம்முடைய மதச்சடங்குகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து தினமும் பலர் மகா கும்பமேளாவிற்கு புனித நீராட வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் பிரயாக்ராஜுக்கு வந்து மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான ராஜ குளியல் அதாவது கடந்த 14-ந் தேதி மட்டும் 3½ கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 22-ம்தேதி (நேற்று) வரை 9.24 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதிவருகிறது. அன்றைய தினம் சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் முக்கிய தேதிகளான பிப்ரவரி 3-ம்தேதி (பசந்த பஞ்சமி ), பிப்ரவரி 12-ம்தேதி (மாகி பூர்ணிமா), மற்றும் பிப்ரவரி 26-ம்தேதி (மகா சிவராத்திரி) ஆகிய தேதிகளில் பத்கர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
45 நாட்கள் நடைபெற உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தினமும் லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.