
- ச. கிருபாநந்தன்
கிரியா என்றால் செயல். சிந்தனை வழிச் செயல் மூலம் செய்யும் பயிற்சிகளை கிரியா யோகாசனம் என்று சொல்வார்கள். யோகாசனப் பயிற்சிகள், ஒரு காலத்தில் காட்டில் தவம் புரியும் யோகிகள், மாமுனிவர்கள் மட்டுமே செய்து வந்த பயிற்சிகள். இன்று உலகம் முழுவதும் அனைவரையும் கற்கும் வகையில் பரந்து விரிந்து ஜனநாயக மயமாகியுள்ளது.
யோகாவின் வரலாறு
பொதுவாக யோகா ஒரு தெய்வீகக்கலை. ஸ்ரீ பதஞ்சலியோக சூத்திரத்தில் 185 ஸ்லோகங்களில் பதஞ்சலி மகரிஷி யோகத்தின் வரலாற்றை விவரித்துள்ளார்.
தொடக்கத்தில், யோகக்கலை சிவபெருமானால், ஸ்ரீபார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டது. அதன் பின்னர் பார்வதியாரால் பிரம்மனுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிறகு பிரம்மா மூலம் நாரத முனிவர் மற்றும் வாஸ்தாவின் குமாரர்களும் இக்கலையைப் பற்றி அறிந்தனர். அன்று முதல் வாஸ்தாவின் தலை முறையினர் இக்கலையினை வளர்க்கலாயினர்.
கிரியா யோகா
யோகா பயிற்சிகள் நாம் ஏன் செய்ய வேண்டும்? நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு யோகா கலை முக்கியமான பங்கு வகிக்கிறது. மன அமைதி, மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், ஆகியன ஒருங்கே பெற வேண்டுமானால் யோகாவை கற்பது அவசியமாகிறது.
யோகாப் பயிற்சி முறைகளில் ஐந்து வழிமுறைகள் முக்கியமாக கருதப்படுகிறது.
*முறையான குருவின் மூலம் பயிற்சி பெறுதல்.
*முறையாக உடலைத் தளர்த்துதல்.
*முறையான மூச்சுப்பயிற்சி.
*முறையான உணவுப் பழக்க வழக்கங்கள்.
*நல்ல சிந்தனையும், தியானமும் ஆகும்.
கிரியா யோகா பயிற்சிகள் கிரியா பாபாஜி அவர் களால் முறைப்படுத்தப்பட்டது. மற்ற யோகாசன பயிற்சிகளிலிருந்து கிரியா யோகா பயிற்சிகள் வேறுபடுகின்றன.
*ஒரு யோகப் பயிற்சியினை செய்தபிறகு, மாற்று யோகப் பயிற்சியினை கட்டாயமாக மேற் கொள்ள வேண்டும்.
*இவ்வாறு செய்கிற பயிற்சி முறைகள் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும், உடலைத் தளர்த்திக்கொள்ளவும் பேருதவி செய்கிறது.
இன்றைய தொழிற் நுட்பக்காலத்தில் கிரியா யோகாவின் பங்கு தொடக்கக் காலத்தில், இயந்திரமயமாகாத சமயத்தில் நாம் உடல் உழைப்பில் அதிகமாக ஈடுபட்டு வந்தோம்.
உதாரணத்திற்கு - ஏர் உழுதல், வண்டி இழுத்தல், இல்லத்தரசிகள் - வீட்டில் தங்கள் வேலைகளை தாங்களே மேற்கொள்ளுதல், அம்மி ஆட்டுக்கல், கல் இயந்திரம் என உடல் உழைப்போடு நோயின்றி வாழ்ந்தோம்.
கணினி மயமான இக்காலத்தில், நோய்களும் பெருகிவிட்டன. உடல் உழைப்பு குறைந்துவிட்டன. நம் உடலிலே இருக்கும் நோய் எதிர்ப்புத்திறன் குன்றி இயற்கைக்கு முரணான உணவு வகைகளை சாப்பிட்டு அவதிப்படுகிறோம்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (குறள் - 945)
நம் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் அளவறிந்து உணவை சாப்பிடுதல் உயிர்க்கு கேடுஇல்லை என்பார் திருவள்ளுவர்.
கிரியா யோகா பயிற்சி முறையினை மேற்கொள்பவர்கள் சைவ உணவு வகைகள் உண்டாலே ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் யோகாசன குருமார்கள்.
பெரும்பாலான நோய்கள், 85 சதவிகிதம் மனதால் உருவாகின்ற நோய்கள் என்று மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரியா யோகாசன பயிற்சி முறைகள்...
கிரியா யோகாசன பயிற்சிகளை 52 வயது முதல் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். ஆண்கள், பெண்கள் இருபாலருக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
குருவின் உதவியுடன் முறையாக யோகா பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் அக்டோபர் 2014 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்