

இந்திய அரசியல் வரலாற்றில் துணிச்சலுக்கும் உறுதியான தலைமைப் பண்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் இந்திரா காந்தி. நாட்டின் முதல் பெண் பிரதமரான இவர், பல சவால்களை எதிர்கொண்டு இந்தியாவின் அரசியல் பயணத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர். அவரது நினைவு நாளான அக்டோபர் 31-ஐ முன்னிட்டு, அவரது வாழ்க்கையையும், காஞ்சி மஹா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடனான சந்திப்பு குறித்த சுவாரஸ்யமான பதிவையும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி அலகாபாத்தில் பிறந்த இந்திரா பிரியதர்ஷினி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மகள். சிறு வயதிலிருந்தே சுதந்திரப் போராட்டச் சூழலில் வளர்ந்த இவர், பின்னாளில் இந்திய அரசியலின் முக்கிய ஆளுமையாக உயர்ந்தார்.
1966-ம் ஆண்டு முதன்முதலாகப் பிரதமரான இந்திரா காந்தி, வங்கதேச விடுதலைப் போரின்போது இந்தியாவின் தலைமையை ஏற்றது, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட காலத்தில் எடுத்த அரசியல் முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் வரலாற்றில் இடம்பிடித்தார். அதே சமயம், 1975 முதல் 1977 வரை அமல்படுத்தப்பட்ட அவசரநிலை அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் சர்ச்சைக்குரிய அத்தியாயமாகவும் அமைந்தது.
மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடன் சந்திப்பு!
காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மஹா பெரியவா என்று பக்தர்களால் போற்றப்படுபவர். ஆன்மிகம், எளிமை, தர்மம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது வாழ்க்கை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களையும் ஈர்த்தது.
இந்திரா காந்தி மஹா பெரியவாளைச் சந்தித்ததாகக் கூறும் ஒரு சுவாரஸ்யமான பதிவு உள்ளது. அந்தப் பதிவின்படி, காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கத்தில் மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தங்கியிருந்தபோது இந்திரா காந்தி அவரைத் தரிசித்தார். அப்போது நாட்டில் தீய சக்திகள் பெருகிவிட்டதாகவும், அவை நீங்கி நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காகவே தாம் பிரார்த்திக்க வந்ததாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மஹா பெரியவா கையை உயர்த்தி அவருக்கு ஆசி வழங்கியதாகவும் அந்தப் பதிவு விவரிக்கிறது.
இது பக்தர் வழியாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், நாட்டின் நலனை முன்னிறுத்தியதாகக் கூறப்படும் இந்தச் சந்திப்பு, அரசியல் தலைவர்களுக்கும் ஆன்மிகப் பெரியவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
தேனம்பாக்கத்தில் மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைச் தரிசித்த நிகழ்வைக் தவிர, வட இந்தியாவில் மஹா பெரியவா முகாமிட்டிருந்த போது இந்திரா காந்தி அவரை மீண்டும் சந்தித்ததாகவும் ஒரு பதிவு தெரிவிக்கிறது.. அப்போது ஆன்மிகத்தின் பெயரால் மக்களைத் தவறாக வழிநடத்துபவர்களை அடையாளம் காட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இந்திரா காந்தி கூறியதாகச் சொல்லப்படுகிறது..
அதற்கு மஹா பெரியவா, மக்களே காலப் போக்கில் உண்மையான ஆன்மிகத்தையும் போலித்தனத்தையும் புரிந்து கொள்வார்கள் என்ற பொருளில் பதிலளித்ததாக அந்த பதிவு விவரிக்கிறது.. இந்திரா காந்தியின் வாழ்க்கையில் இது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்..
சிறுமியாக இருந்த போதே சுதந்திர போராட்டத்தில் இந்திரா!!
இந்திரா காந்தியின் சிறு வயது வாழ்க்கையிலும் ஓர் ஆச்சரியமான தகவல் உள்ளது.. அவருக்கு 12 வயது இருக்கும் போது, சுதந்திரப் போராட்டத்தில் உதவுவதற்காகக் குழந்தைகளை ஒருங்கிணைத்து ' வானர சேனை' என்ற அமைப்பை உருவாக்கினார்.. இந்த குழந்தைகள் காங்கிரஸ் கூட்டங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததுடன், முக்கிய தகவல்களை எடுத்து செல்லவும் உதவினர்.. சிறு வயதிலேயே நாட்டுப் பற்றுடன் செயல்பட்ட அவரது வாழ்க்கையின் இந்த பகுதி குறிப்பிடத்தக்கது..
இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நடந்தவை!!
இந்தியாவின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பசுமைப் புரட்சியின் பங்கு முக்கியமானது.. அதிக விளைச்சல் தரும் விதைகள், பாசன வசதிகள், நவீன வேளாண்மை முறைகள் ஆகியவற்றின் வளர்ச்சியால் உணவு தானிய உற்பத்தி அதிகரித்தது.. இந்த மாற்றத்துக்கு அவரது ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது..
1971 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில் வங்க தேசம் தனி நாடாக உருவானது.. இந்த நிகழ்வு இந்திய வரலாற்றில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.. 1972 ம் ஆண்டு இந்திரா காந்திக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது..
அதே நேரத்தில், 1975 முதல் 1977 வரை அமல்படுத்தப்பட்ட அவசர நிலை அவரது ஆட்சியின் மிகுந்த சர்ச்சைக்குரிய காலமாக அமைந்தது.. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டதும், பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டதும் விமர்சனங்களுக்கு வழி வகுத்தன..
1977 தேர்தலில் தோல்வியடைந்த அவர் 1980 ம் ஆண்டு மீண்டும் பிரதமரானார்.. 1984 ம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.. அவரது வாழ்க்கை அரசியல் முடிவுகளின் தாக்கத்தையும் தலைமைப் பொறுப்பின் சிக்கல்களையும் நினைவூட்டுகிறது..
1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியின் நினைவு நாள், அவரது சாதனைகளையும் சர்ச்சைகளையும் ஒருசேர நினைவூட்டுகிறது. நாட்டின் வளர்ச்சி, மக்களின் நலன், தலைமைப் பொறுப்பின் சவால்கள் ஆகியவற்றைச் சிந்திக்கச் செய்கிறது. மஹா பெரியவருடனான சந்திப்பு குறித்த இந்தப் பதிவும், இந்தியாவின் அரசியல் வரலாற்றுடன் ஆன்மிக மரபு எவ்வாறு பின்னிப் பிணைந்திருந்தது என்பதை எடுத்துரைக்கும் சுவாரஸ்யமான செய்தியாக அமைகிறது.
இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் வாழ்க்கைப் பயணம், அரசியல் சாதனைகள், அவர் எதிர் கொண்ட சவால்கள், சிறுவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் காட்டிய ஈடுபாடு மற்றும் காஞ்சி மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடனான சந்திப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.. அவரது வாழ்க்கை இந்திய வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றாக என்றும் நினைவுகூறப்படும்!!!