
பெண் குழந்தைகளுக்கான உரிமைகளும், சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும் என்கிற நோக்கத்துடன், பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையில் 2011 ஆம் ஆண்டில், கனடா நாடு தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானம் மற்றும் சில நாடுகளால் முன்மொழியப்பட்டு, அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் அவை 2011 ஆம் ஆண்டில், அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளாக (International Day of the Girl Child) அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் நாளில், பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகமெங்கும், பாலினச் சமத்துவம், அனைத்துத் துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளைக் களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து, பெண் குழந்தைகள் நினைத்ததைச் சாதிக்க உறுதுணையாக நின்று, அவர்கள் பின்னாளில் சாதனைப் பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவு கூரும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும், சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும், இந்நாளில் பல நடவடிக்கைகளைத் தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் நல அரசுகள் வழியாக உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவதற்கு முன்பாகவே, இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் நாளில் இந்தியாவில், தேசியப் பெண் குழந்தை நாள் (National Girl Child Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்நாளைக் கொண்டாடுவதன் மூலம், பாலினச் சமத்துவம், சம வேலைக்கு சம ஊதியம், பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல்கள் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசியப் பெண் குழந்தை நாள் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டில், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றிமைக்கும் சிறந்த திட்டமாகும். பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இத்திட்டத்தின் வழியாக, பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்க வைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல், பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல், இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல், பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல் போன்றவை நோக்கமாகக் கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமேப் பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
இதேப் போன்று, ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத வேண்டும். இவ்வாறு, முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர உதவும். பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக, ஆண்டு வருமான வரம்பு ரூ. 72,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் வயது உச்ச வரம்பு 40 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம், பெண்களுக்கான உயர்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவை தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசு, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 போன்ற பெண்கள் தொடர்பான பல்வேறு சிறப்புச் சட்டங்களை நிர்வகித்து வருகிறது. வரதட்சணை தடைச் சட்டம், 1961; பெண்களின் அநாகரீகமான பிரதிநிதித்துவம் (தடை) சட்டம், 1986; பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம், 2013 மற்றும் குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006. இந்த அமைச்சகம் சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, கமிஷன்களை நிர்வகித்து வருகிறது.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2005 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012. குற்றவியல் சட்டம் (திருத்தங்கள்), சட்டம் 2013 பாலியல் குற்றங்களுக்கு எதிரான பயனுள்ள சட்டரீதியான தடுப்புக்காக இயற்றப்பட்டது. மேலும், குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2018, 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை உட்பட இன்னும் கடுமையான தண்டனை விதிகளை பரிந்துரைக்கும் வகையில் இயற்றப்பட்டது. விசாரணை மற்றும் விசாரணைகளை ஒவ்வொன்றும் 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் மற்றொன்றுக்கு இடையே கட்டாயப்படுத்துகிறது.