
“என்னப்பா கங்கா ஸ்நானம் ஆச்சா?” அதிகாலையில் என் அக்கா வழக்கம் போல கைப்பேசியில் அழைத்தாள்.
இன்று தீபாவளி. ஊரே கொண்டாட்டமாயிருக்கு. எங்க வீட்டிலும் காலையில் எண்ணெய் வைத்து குளித்து சாமி கும்பிட்டு புது துணி உடுத்தி திகட்ட திகட்ட பட்டாசு வெடித்து பின் இனிக்க இனிக்க இனிப்பு தின்று விட்டு தொலைக்காட்சியில் பட்டிமன்றம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
“அதென்ன கங்காஸ்நானம்?” என்று கேட்டான் மகன்.
“தீபாவளியன்று அதிகாலையில் அரைத் தூக்கத்தில் எழுந்து, விடிகாலைக் குளிரில் தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு கங்கா ஸ்நானம் செய்வது” என்று அவனுக்கு பதில் சொல்லி விட்டு கைப்பேசியில் தொடர்பில் இருந்த அக்காவிடம் “ஆச்சுக்கா” என்றேன். அவளிடம் பேசி விட்டு கைப்பேசியில் தொடர்பை துண்டித்தேன்.
“எப்போம்மா நீ காசிக்கு போய் கங்காஸ்நானம் செஞ்சே?” என்று கிண்டலடித்தான் என் மகன்.
“கங்கா ஸ்நானம் செய்ய காசிக்குத் தான் போகணும். ஆனா, தீபாவளியன்னிக்கு அந்த கங்கையே நம்ம வீடு தேடி வருவா...” என்றேன் நான்.
“எனக்குத் தெரியாம கங்கா எப்போ வந்தா?” என்று மீண்டூம் கேலி செய்தான் மகன்.
“வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.”
“ஓஹோ” என்ற மகள் தம்பியிடம் “ரொம்ப கேலி பண்ணாதே. நம்முடைய நம்பிக்கையை அம்மா சொல்றாங்க” என்று கோபப்பட்டாள்.
“எண்ணெய் வெச்சி சீக்கா தேச்சி குளிக்க ரொம்ப இம்சையா இருக்குன்னு நீ தானே அலுத்துக் கிட்டே” என்று பதிலுக்கு அவனும் அவளிடம் கோபப்பட்டான்.
“எண்ணெய்யில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் யோகினிகளும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி அருள் பாலிப்பர் என்பதும் ஐதிகம்” என்றேன் நான்.
தினம் காலையில் அக்காவும் நானும் அழைக்கும் பழக்கம் இருந்தாலும், தினசரி 'நீ நலமா, நான் நலமா' என்று தான் ஆரம்பிப்போம். ஒரு நாள் இரவில் என்ன ஆகி விடப் போகிறது என்று ஒருநாள் போல இந்த கேள்வியைக் கேட்பீர்கள் என்று என் அக்காவின் மகன் கேலி செய்வான். இன்றைக்கு இருக்கும் சூழலில் இந்த ஒரு கேள்வி மட்டும் தான் முக்கியம் என்போம் நாங்கள் இருவரும். கொஞ்சம் உடம்பு சரியில்லாதவள் அக்கா.
“இவ்வளவு உருகறியே. ஒரு வாரம் உன் அக்கா வீட்ல போய் இருந்துட்டு வரலாமில்ல” என்றனர் பிள்ளைகள் இருவரும் விளையாட்டை கை விட்ட கரிசனத்துடன்.
“எங்கே போறது? அதான் கொரோனா லாக்டவுன்னு மனுஷாள மொடக்கிப் போட்டிருக்கே” என்று அலுத்துக் கொண்டேன் நான்.
எனக்கும் என் அக்காவிற்குமான பேச்சு அப்படியே இந்த வருடம் தீபாவளிக்கு போவதாக திட்டமிட்டிருந்த காசியாத்திரையின் பக்கம் சென்றது. எங்கே போவது?
என் அக்கா சொன்னாள். “ஹிந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் போக வேண்டிய இடம் காசி. பாவம் நீங்க தீர்த்தமாட வேண்டியது கங்கை. மறுபிறப்பை அறுக்க தரிசிக்க வேண்டியது காசி விஸ்வநாதர்.”
நான் சொன்னேன். “ஹிந்துக்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு இந்தியனும், தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பொங்கி பெருகி பிரவாகமா சுழித்துக் கொண்டு ஓடும் கங்கையை பார்க்க வேண்டும்.”
***********************
காசிக்கு இணையான தலமில்லை, கங்கைக்கு இணையான தீர்த்தமில்லை என்பது சொல் வழக்கு. ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் காலத்தில் ஒருமுறையாவது
கங்கையில் நீராடி காசியில் விஸ்வநாதரை தரிசித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். கடந்த பிறவிகளில் என்னால் கங்கையை தரிசிக்க முடியவில்லையே என்று முற்பிறவியில் வருத்தப்பட்ட ஒருவருக்கே இந்த பிறவியில் கங்கையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும் என்கிறது கங்கா மகாத்மியம் என்ற நூல்.
கங்கைக்கரையில் புனித நீரால் பெற்றோருக்கு பாதபூஜை செய்ய வேண்டும். அப்படி செய்தால், வாழ்நாள் முடிந்ததும் இந்திரனே நேரில் வந்து தேவலோகத்திற்கு அழைத்து செல்வதாக ஐதீகம்.
சின்ன வயதில் ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேசிய திரைப்படங்களில் ஒரு தெலுங்கு படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
ஒரு நடுத்தர வயதான தம்பதிகள் காசிக்கு செல்வதற்கு கிராமத்தை விட்டு கிளம்புகிறார்கள். போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடைபயணமாக கிளம்பியவர்கள் நடந்து நடந்து, வழியில் குறுக்கிட்ட ஒரு ஆற்றை கடக்க வழி தெரியாமல் நிற்கையில் ஒரு படகோட்டி அவர்கள் ஆற்றை கடக்க உதவுகிறான். ஆற்றோரத்தில் இரவு தங்குறார்கள். காலையில் பொழுது விடிந்து அவர்கள் கிளம்புகையில் அந்த படகோட்டி நான் இங்கே தானிருப்பேன். நீங்கள் திரும்பி வருகையில் இந்த ஆற்றை கடக்க உதவி செய்வேன் என்று வாக்குக் கொடுக்கிறான்.
இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு கங்கையில் நீராடும் போது அந்த மனைவி கணவனின் கரத்தை நீக்கிக் கொண்டு கங்கையுடன் சென்று விடுகிறாள்.
கணவருக்கு மனதிற்குள் சிந்தனை “என் கரத்தை நீக்கிக் கொண்டு ஏன் கங்கையோடு போனாள்? கங்கை நாம் செய்யும் பாவங்களை எல்லாம் கழுவி நம்மை சுத்தப்படுத்திடும் என்ற நம்பிக்கை உண்டே. அப்படி இருக்கையில் கங்கையுடன் போகும்படியாக அப்படி என்ன பாவம் செய்தாள்? அவள் அப்படிப்பட்ட பாவம் செய்யும் வரை நான் ஏன் அவளை கவனியாமல் விட்டேன்? மனைவியை வறுமை பிணி பாவம் என்று எதுவும் அண்டாமல் பாதுகாப்பது ஒரு கணவனின் கடமை அல்லவா? அதில் நான் ஏன் தவறினேன்? என் பாவமல்லவா?”அவருடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.
ஊருக்கு திரும்பும் அவரை எதிர்கொள்கிறான் படகோட்டி. அம்மா வரவில்லையா என்று கேட்க அவர் நடந்த விஷயத்தை சொல்கிறார். “அவள் அப்படி என்ன பாவம் செய்தாள் என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் கங்கை மன்னித்ததைப் போல நானும் அவளை மன்னித்திருப்பேனே” என்றார்.
படகோட்டி அவர் காலில் விழுந்து கதறி அழுதான். “நான் அந்த அம்மாவை மானபங்கப்படுத்தி விட்டேன். அது உங்களுக்குத் தெரியாது. யாரும் பாராத ஒரு விஷயத்தை யாருக்கும் தெரியாத ஒரு சம்பவத்துக்கு யார் தண்டித்து விடப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு விட்டார்கள்,” என்று கதறி அழுவான்.
கங்கையின் புனிதத்தை அற்புதமாக சொன்ன கதை இது.
அப்படிப்பட்ட கங்கையில் இன்று எத்தனை எத்தனை பிணங்கள்? மரணமடைந்த மனித உயிர்களுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் கங்கையில் இழுத்து விடப்பட்ட பிணங்கள்.
உலகின் எந்த மூலையில் ஹிந்துக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் காசியில் உயிரை விட்டு ஹரிச்சந்திர கட் எனப்படும் ஹரிச்சந்திரன் வெட்டியானாக பணிப் புரிந்த சுடுகாட்டில் எரியூட்டப்படுவதோ புதைக்கப்படுவதோ புண்ணியம் என்ற நம்பிக்கை கொண்ட ஹிந்து மதத்தினர்.
ஆனால் எரியூட்ட விறகு வாங்க காசில்லை என்ற காரணத்தால் இறந்தவர்கள் கொத்து கொத்தாக கங்கையில் இழுத்து விடப்பட்டுள்ளார்கள். புதைக்கலாம் என்றால் புதைக்குழி தோண்ட காசில்லை. வறுமை தாண்டவாமாடிக் கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது அங்கே. பணியின்மையும் அதனால் பிணியும் அதன் விளைவான மரணமும் கொடுமை என்றால் அந்த பிணத்தை குறைந்த பட்ச மரியாதையுடன் அடக்கம் செய்ய இயலாமல் போனால் என்ன செய்வது? மதங்களை விடவும், மனிதங்களை விடவும் மனிதாபிமானத்தை விடவும் காசும் வறுமையும் அங்கே பிரதானமாக இருக்கிறது என்று கொள்வதா? மேற்கொண்டு ஏதேனும் சந்தேகம் கேட்டால் அதை விளக்கிட அரசு ஒன்றும் நம் பள்ளி வாத்தியில்லை. சர்வ பலம் கொண்ட அரசாங்கம். புல்டோசர் வீடு தேடி வரும்.
மரணம் மனித உடலுக்குத் தானே! ஆன்மாவிற்கு இல்லையே! இந்நேரம் அது வேறு எங்கேனும் வேறு எதுவாகவேணும் மறு ஜன்மம் எடுத்திருக்கும் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்.
வேறு நம்மால் என்ன செய்து விட முடியும்?