குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் தீபாவளி நோன்பு: எப்படி இருக்க வேண்டும்?

கேதார கௌரி விரதம் அல்லது தீபாவளி நோன்பு எப்படி யாரெல்லாம் இருக்க வேண்டும்? 21 முடிச்சு கயிறு மற்றும் பூஜைக் குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
தீபாவளி நோன்பு | Deepavali Nonbu
தீபாவளி நோன்பு | Deepavali NonbuImage credit: Chatgpt
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 
MM strip
MM strip

குடும்பத்தின் வளமும் நீண்ட ஆயுளும் பெருகிடச் செய்யும் தீபாவளி நோன்பு அல்லது கேதார கௌரி விரதம் எதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது தெரியுமா? 21 முடிச்சுகள் கொண்ட புனிதக் காப்புக் கயிற்றின் மகத்துவமும் என்ன? இந்த ஆன்மீக விரத முறைகளையும் அதன் மூலம் கிடைக்கும் அற்புத பலன்களையும் முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி நோன்பு எனப்படும் கேதார கௌரி விரதம் என்பது குடும்பத்தின் வளம், நீண்ட ஆயுள் மற்றும் ஐஸ்வர்யம் வேண்டி அனுசரிக்கப்படும் ஒரு முக்கியமான விரதம் ஆகும். இதில் ஜாதி, மதம், பாலினம், ஏழை, பணக்காரர் என்ற எந்தவித பாகுபாடும் இன்றி குடும்ப நலன் மற்றும் சுபிட்சத்தை விரும்பும் யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.

பொதுவாக இந்த விரதத்தை ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் தங்களின் குடும்ப வழக்கப்படி அல்லது குல மரபுப்படி எடுத்து வழிபடுகின்றனர். தீபாவளி நோன்பு விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை வரை அதாவது சூரிய அஸ்தமனம் ஆகும் வரை எதுவும் சாப்பிடாமல் பகல் முழுவதும் விரதம் இருப்பார்கள்.

இந்த விரதத்தை 21 நாட்கள் கடைபிடிக்க முடியாதவர்கள் தீபாவளி அமாவாசை நாளில் மட்டும் ஒரு நாள் நோன்பாக எடுத்து வழிபடும் வழக்கமும் உள்ளது.

கேதார கௌரி நோன்பு ஏன் அனுஷ்டிக்கப்படுகிறது?

சிவபெருமானின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரராக பார்வதி தேவி ஐக்கியமானதை நினைவு கூறும் வகையில் இந்த நோன்பு அனுஷ்டிக்கப் படுகிறது.

விரதத்தின் பின்னணியில் உள்ள புராணக் கதை:

பிரம்மா, விஷ்ணு மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் ஒன்றாக வலம் வந்து வணங்குவது வழக்கம். ஆனால் தீவிர சிவபக்தரான பிருங்கி முனிவர் மட்டும் பார்வதி தேவியை தவிர்த்து விட்டு சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கிச் சென்றார்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி சமையல் டென்ஷனா? கவலை விடுங்க, இந்த எளிய வழிகள் உங்களுக்காக!
தீபாவளி நோன்பு | Deepavali Nonbu

இதனால் வருத்தமும் கோபமும் அடைந்த அம்பிகை சிவபெருமானோடு பிரிக்க முடியாதபடி ஐக்கியமாகி விடவேண்டும் என்று எண்ணினார்.

கௌதம முனிவரின் அறிவுரைப்படி இமயமலையின் கேதார்நாத் திருத்தலத்தில் அம்பிகை 21 நாட்கள் கடுந்தவம் புரிந்து விரதத்தை மேற்கொண்டார். பார்வதி தேவியின் கடுமையான விரதத்தினால் மகிழ்ந்த ஈசன் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் தேவியை தனது உடலின் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.

விரதத்தை அனுஷ்டிக்கும் முறை:

புரட்டாசி மாத சுக்ல பக்ஷ தசமி நாளில் தொடங்கி ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரை 21 நாட்கள் இந்த நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. 21 இழைகள் கொண்டதும் 21 முடிச்சுகள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட காப்புக் கயிற்றை 21 நாட்களும் பூஜையில் வைத்து 21ஆவது திதியான அமாவாசை திதியில் பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

தீபாவளி நோன்பு | Deepavali Nonbu
தீபாவளி நோன்பு | Deepavali NonbuImage credit: Gemini AI

21 முடிச்சுகள் கொண்ட காப்பு கட்டுவதன் ரகசியம்:

21 முடிச்சுகளும் 21 திதிகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி, சிவபெருமானின் வெவ்வேறு நாமங்களை துதித்து இந்த முடிச்சுகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்தப் புனிதக் கயிறு அசாத்தியமான தெய்வீக ஆற்றலைப் பெறுகிறது. தற்போது ஒரே நாளில் விரதம் இருந்து 21 முடிச்சுகள் கொண்ட கயிற்றை நேரடியாகப் பயன்படுத்துகின்றனர். காப்பில் 21 முடிச்சுகள் இருப்பது போல அம்பிகைக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் மற்றும் பூஜை பொருட்களும் 21 என்ற எண்ணிக்கையிலேயே அமைகின்றன.

21 அதிரசங்கள், 21 வடை, 21 அப்பங்கள், 21 வெற்றிலை பாக்கு, 21 மஞ்சள் கிழங்கு மற்றும் மங்கலப் பொருட்கள் 21 என்ற 21 எண்ணிக்கையில் அமைகின்றன. 21 பலகாரங்கள் செய்ய இயலாதவர்கள் ஒரு சில பலகாரங்களை மட்டும் செய்து, மீதி எண்ணிக்கைக்கு பழங்கள், வெற்றிலை பாக்கு, மற்றும் பொரி உருண்டைகளை வைத்து எண்ணிக்கையை 21 ஆக நிறைவு செய்து வழிபடுவது வழக்கம்.

விரதம் நிறைவடையும் நாளில் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் இந்த நோன்புக் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி: வழிபடும் நேரம், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!
தீபாவளி நோன்பு | Deepavali Nonbu

நோன்பு அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

தீபாவளி நோன்பு பொதுவாக திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தின் நல்வாழ்விற்காகவும், கணவரின் ஆயுள் நீடிக்கவும், செல்வம் மற்றும் வளத்துடன் இருக்கவும் பாரம்பரியமாக கடைபிடிக்கும் விரதம் இது. திருமணமாகிச் சென்றுள்ள பெண்களுக்கு அவர்களின் பிறந்த வீட்டிலிருந்து அதிரசம் மற்றும் நோன்புக் கயிறுகள் அனுப்பி வைக்கப்படும் மரபு இன்றும் உள்ளது.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் தங்களுக்கு நல்ல குணமுள்ள கணவன் அமையவும், சிறப்பான மாங்கல்ய வாழ்வு கிடைக்க வேண்டியும் தீபாவளி நோன்பு மேற்கொள்கின்றனர்.

தொழில் மேன்மை அடையவும், குடும்பத்தில் அமைதியும், சுபிட்சமும் பெருக வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், குடும்பத்தில் ஐஸ்வர்யமும் நீண்ட ஆயுளும் பெருகவும், தம்பதியிடையே ஒற்றுமை ஓங்கவும் தேவையான முழுமையான வழிபாட்டு முறைகளைத் தெரிந்து கொண்டு வாழ்வில் வளம் பெறலாம்.