

சமையல் குறிப்புகள்(kitchen-tips-and-cooking-tricks):
1. சுவையான கிரேவி: கிரேவி தயாரிக்கும்போது தக்காளியுடன் ஒரு சிறிய பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் கிரேவியில் ஊற்றினால், கிரேவி கூடுதல் சுவையுடனும் நல்ல நிறத்துடனும் இருக்கும்.
2. வெண்பொங்கல்: வெண்பொங்கல் செய்யும்போது மிளகு, சீரகம் அப்படியே போடுவதற்குப் பதிலாக, சீரகம் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றாக அரைத்துப் போட்டுச் செய்தால் வெண்பொங்கல் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
3. பிரமாதமான கீரைப்பச்சடி: முளைக்கீரையை உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து, இரண்டு கரண்டி புளிக்காத தயிர் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டினால் கீரைப்பச்சடி பிரமாதமாக இருக்கும்.
4. சுவையான பொரியல்: எந்தவகை பொரியல் செய்தாலும், இறுதியாக பீட்ரூட் அல்லது கேரட்டைத் துருவி அதனுடன் கலந்து கிளறி இறக்கினால் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.
5. பாயசம் கெட்டியாக: பாயசம் ஒருவேளை நீர்த்துப்போய் விட்டால், பொட்டுக்கடலை மாவைச் சிறிதளவு தூவிக் கிளறிவிட்டால் பாயசம் சரியான பதத்திற்கு வருவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
6. மொறுமொறுப்பான உளுந்துவடை: உளுந்துவடை செய்யும்போது, வடை மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டுப் பிசைந்து வடை செய்தால், வடை மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும்.
7. அலாதி சுவை சாம்பார்: சாம்பார் செய்யும்போது புளியின் அளவைக் குறைத்து, தக்காளியை அதிகமாகச் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சாம்பாரின் சுவையே அலாதியாக இருக்கும்.
8. வெங்காய அடை: அடை மாவில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டுச் சுட்டால், சுவையான வெங்காய அடை தயார்.
9. எண்ணெய் குடிக்காத வடை: எந்த வடை செய்வதானாலும், வடையைப் பொரிப்பதற்கு முன்பு எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பு போட்டால், வடை அதிகமாக எண்ணெய் குடிக்காது.
10. சுவையான சர்க்கரைப் பொங்கல்: சர்க்கரைப் பொங்கல் வெந்து கொண்டிருக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறினால், பொங்கல் நல்ல வாசனையுடனும் சுவை மிகுந்தும் இருக்கும்.
11.சுவையான தயிர்பச்சடி: தயிர்பச்சடி செய்யும்போது தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் பச்சடியின் சுவை பிரமாதமாக இருக்கும்.
12. மொறுமொறுப்பான கத்திரிக்காய் பொரியல்: கத்திரிக்காய் பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலைமாவைத் தூவி, மூன்று நிமிடங்கள் கழித்து இறக்கினால் அதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
13. மீந்த சட்னிக்கு தீர்வு: தேங்காய் சட்னி மீந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம்; அதைத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை சுவையாக இருக்கும்.
14. மணமணக்கும் மோர்க்குழம்பு: மோர்க்குழம்பு கொதித்து இறக்கும் சமயத்தில், சிறிது தேங்காய் எண்ணெயைச் சுற்றி ஊற்றி இறக்கினால் குழம்பு நல்ல வாசனையாக இருக்கும்.
15. வித்தியாசமான மரவள்ளிக்கிழங்கு அடை: பருப்பு அடைக்குத் தேங்காய் சேர்த்து அரைப்பதற்குப் பதிலாக, மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து அரைத்து அடை வார்த்துப் பாருங்கள்; அடை மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
16. மீந்த பிரெட்டில் கட்லெட்: பிரெட் துண்டுகள் மீந்துவிட்டால், அதனை மிக்ஸியில் போட்டுப் பொடியாக்கி உப்பு, காரம், கரம் மசாலா, கொத்தமல்லித்தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து கட்லெட்டாகப் பொரித்தெடுக்கலாம்.
17. சுவையான ஓமப்பொடி: வேகவைத்த உருளைக்கிழங்குடன் அரிசிமாவு, கடலைமாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் ஓமப்பொடி மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
18. வடை மாவு அரைக்க டிப்ஸ்: உளுந்து வடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுப் பின் அரைத்தால், மிக்ஸியிலிருந்து மாவைச் சுலபமாக எடுக்க முடியும்; மிக்ஸியைக் கழுவுவதும் எளிது.
19. வாழைக்காய் பழுக்காமல் இருக்க: வாழைக்காயின் காம்புப் பகுதி தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்தால், மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை பழுக்காமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
20. கடினமான மூடியைத் திறக்க: ஜாம், ஊறுகாய், நெய் போன்ற பாட்டில்களின் மூடி இறுக்கமாக இருந்து திறக்க முடியாவிட்டால், மூடியின் விளிம்பில் ஒரு ரப்பர் பேண்டைச் சுற்றிவிட்டுப் பிறகு திறந்தால், கைகள் வழுக்காமல் சுலபமாகத் திறந்துவிடலாம்.
21. கீரை சுத்தமாக: கீரையைக் கழுவும் நீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து ஊறவைத்துக் கழுவினால், அதிலுள்ள நச்சுகள் மற்றும் கிருமிகள் நீங்கி கீரை சுத்தமாகிவிடும்.
22. பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க: பச்சை மிளகாய் சீக்கிரம் பழுத்து விடுகிறதா? பச்சை மிளகாய் வைக்கும் பாத்திரத்தில் கொஞ்சம் மஞ்சள் தூளைத் தூவி கலந்து வைத்தால் சீக்கிரமாகப் பழுக்காது.