
ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் நாளன்று, 'மாதவிடாய் சுகாதார நாள்' (Menstrual Hygiene Day) கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலகம் முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாக இருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான வாஷ் யுனைடெட் (WASH United) தொடங்கப்பட்டு, 270 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஒத்த அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது. பெரும்பாலான பெண்களின் மாதவிடாய்க் கால அளவு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5 நாட்கள் என்பதையும், மாதவிடாய் சுழற்சியின் தோராய அளவு 28 நாட்கள் என்பதையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டின் 5 ஆவது மாதமான மே மாதத்தின் 28 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் (Menstruation) அல்லது மாதவிலக்கு என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3 முதல் 7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதைக் குறிக்கிறது.
மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய், பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்துப் பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பை மடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.
கருத்தரித்திருக்கும் காலத்திலும், குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. அதாவது, குருதிப் போக்கு இருப்பதில்லை. இச்சுழற்சி மீண்டும் துவங்கும் வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது.
மாதவிடாய் சுகாதாரம் குறித்த போதுமான அறிதல் இல்லாமையால் வளர்ந்து வரும் நாடுகளில் மகளிர் பலவிதமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. வெளிப்படையாய் மாதவிடாய் குறித்துப் பேசுவது தவிர்க்கப்படுவதால் மாதவிடாய்ப் பருவத்திலுள்ள மகளிருக்கும் பதின்மச் சிறுமையருக்கும் அவர்களது உடலமைப்பு, உடல் நலம், கல்வி, தன் மரியாதை, மனித உரிமை குறித்த விவரங்கள் தெரியவருவதில்லை. மோசமான மாதாவிடாய் சுகதார மேலாண்மையால் பெண்களின் இனப்பெருக்கப் பாதை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான சிறுமியர் இனப்பெருக்கப் பாதையின் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. துவக்கத்திலேயே இந்நிலை சரிவர கவனிக்கப்படவில்லையெனில் பலவிதமான ஊனங்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.
முறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை என்பது;
மாதவிடாய்க் காலத்தின் போது மகளிரும் பதின்மச் சிறுமியரும், மாதவிடாய்க் குருதிச் சேகரிப்பதற்கு அல்லது உறிஞ்சுவதற்குச் சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தல்;
அவர்களுக்குத் தேவையான போது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி;
அந்நாட்களில் உடலைச் சுத்தப்படுத்தத் தேவைப்படும் தண்ணீர் மற்றும் கழுவுபொருள் (சோப்பு);
குருதி சேகரிப்பு அல்லது உறிஞ்சலுக்குப் பயன்படுத்தப்பட்டவற்றை அப்புறப்படுத்தும் வசதி
போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து மக்களிடையே இருக்கும் தவறான எண்ணங்களைத் தவிர்த்து, பெண்களுக்காகவும், சிறுமியருக்குக்காகவும், ஒற்றுமையான வலுவான குரல் எழுப்புவதற்காகத் தனி நபர்கள், அமைப்புகள், சமூக வணிகங்கள் மற்றும் ஊடகங்களை ஒன்றிணைக்கும் மேடையாகச் செயல்படுவதே மாதவிடாய் சுகாதார நாளின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது, மேலும்;
மாதவிடாய் நாட்களில் பெண்களும் சிறுமியரும் சந்திக்கும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்துப் பேசுதல்
இதற்காக மேற்கொள்ளப்படும் வளர்முகமான புத்தாக்கத் தீர்வுகளை முன்னிலைப்படுத்துதல்
பெண்கள் மற்றும் சிறுமியரின் உரிமைகளை அங்கீகரித்து, ஆதரிக்கும் உலகளவிலான இயக்கம் வளர ஊக்குவித்தல்; இதே நோக்கத்தோடுச் செயற்படும் அமைப்புகளுக்கிடையே உள்ளிட அளவிலும், தேசிய அளவிலும் இணைப்பு ஏற்படுத்துதல்
கொள்கை உரையாடல்களில் ஈடுபடுதல்; உலக, தேசிய, உள்ளிட அளவிலான கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களாக மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஒருங்கிணைப்பை எடுத்துச் செல்லுதல்
சமூக ஊடகங்கள் உட்பட்ட பல ஊடகச் செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளைத் தோற்றுவிக்கிறது.
உடற்கூறு பற்றிய அறிதல், தன்னாட்சி மற்றும் பாலினச் சமத்துவத்துவத்தை வளர்த்தெடுக்கும் நாடு கடந்த இயக்கத்தை இந்நாள் உருவாக்குகிறது.
மாதவிடாய் சுகாதார நாளில், மகளிர் நலனில் அக்கறையுடன் செயல்படும் சமூக அமைப்புகள், 10 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு முன் கூட்டியே மாதவிடாய் குறித்தத் தகவல்களைத் தெரிவித்து, அவர்களுக்கு மாதவிடாய் குறித்த அச்சத்தைப் போக்கிட வேண்டும்.
மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு, மாதவிடாய்க் காலத்தை எப்படி சுகாதாரத்துடன் பேணுவது என்பதை முழுமையாக விளக்கிட வேண்டும்.
மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமற்ற நிலையினால் வரும் நோய்கள் வராமல் காத்திட வேண்டிய அவசியத்தையும் உணர்த்திட வேண்டும்.
அப்போதுதான், இந்தியாவிலுள்ள மாதவிடாய் தொடர்புடைய பல்வேறு மூட நம்பிக்கைகளிலிருந்து பெண்கள் விடுபட முடியும்.