மெனோபாஸ் என்பது நம் பீரியட்ஸுக்குதான் முற்றுப்புள்ளியே தவிர, நம்முடைய மகிழ்ச்சிக்கு அல்ல. 50+ல் மாதவிலக்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமயம் நமக்கு ஏராளமான தொல்லைகளைத் தந்து விட்டுத்தான் செல்லும். பூப்பெய்திய பிறகு மாதந்தோறும் மாதவிலக்கு வரவில்லை என்றால் டென்ஷனாகி மருத்துவரை சென்று பார்ப்பதும், மாதாமாதம் சரியாக வந்தால் வயிற்று வலி, இடுப்பு வலி, அதிக இரத்தப்போக்கு என்று கஷ்டப்படுவதுமாக செல்லும்.
கல்யாணம் ஆனதும் பீரியட்ஸ் தள்ளிப்போனால் சிலருக்கு சந்தோஷம், சிலருக்கு வேதனை, பிரச்னை என்று மாதவிலக்கால் வரும் தொல்லைகளை அனுபவிக்கத்தான் வேண்டியுள்ளது. தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேலாக மாதவிடாய் இல்லாத நிலையே ‘மெனோபாஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படக்கூடிய சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆஸ்டியோபோரோசிஸ்: மாதவிடாய் நின்ற பிறகு குறைந்த எலும்பு அடர்த்தி மற்றும் எலும்புகள் உடையக்கூடிய அபாயம் அதிகரிக்கிறது. எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க ஈஸ்ட்ரோஜன் அவசியம். மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது எலும்பு அடர்த்தியை குறைப்பதுடன் தேயக்கூடிய வாய்ப்பையும் அதிகரிக்கிறது. இதனால் முதுகெலும்பு, இடுப்பு மற்றும் மணி கட்டுகளில் எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
தீர்வு: இதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கீரைகள், முழு தானியங்கள், பால் பொருட்கள் போன்றவை வலுவான எலும்புகளை பராமரிக்க உதவும்.
எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றங்கள்: மாதவிடாய் நின்ற பிறகு அடிவயிற்றை சுற்றி எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஹார்மோன் மாற்றங்கள் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவதற்கு வழிவகுக்கும். நீரிழிவு டைப் 2 அபாயத்தை அதிகரிக்கும் வகையில் இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கலாம்.
தீர்வு: உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு உடற்பயிற்சிகளும், சுறுசுறுப்பாக இயங்குவதும் எடை மற்றும் வளர்சிதை மாற்றங்களை நிர்வகிக்க உதவும்.
இருதய நோய்: மன அழுத்தம், பதற்றம் போன்றவை மாதவிடாய் நின்றவுடன் ஏற்படும் பாதிப்புகளில் பொதுவானவை. ஹார்மோன் ஏற்ற இறக்கங்களும் இருதய நோய் பாதிப்பு பிரச்னைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஈஸ்ட்ரோஜன் இருதய பாதுகாப்புப் பண்புகளை கொண்டுள்ளது. மெனோபாஸ் காரணமாக ஈஸ்ட்ரோஜன் குறைபாடு எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும், எச்டிஎல் குறைவதற்கும் காரணமாக இருக்கலாம்.
தீர்வு: இதற்கு சத்தான உணவை உட்கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும், சிறந்த முறையில் மன அழுத்தத்தை நிர்வகிப்பதும் இருதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
மனநிலை சீர்கேடுகள்: ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களும், சரியான உறக்கம் இல்லாமல் இருப்பது போன்றவற்றை ஏற்படுத்தும். இதற்கு வீட்டில் உள்ளவர்களின் அரவணைப்பும், ஆதரவும், அன்பும் அவசியம். தியானம் மற்றும் யோகா போன்றவையும் கை கொடுக்கும்.
தீர்வு: மெனோபாஸுக்கு பிறகு தகுந்த இடைவெளியில் உடல்நல பரிசோதனை செய்து கொள்வதும், முறையான சுகாதாரத்தை பராமரிப்பதும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைப்பதும், யோகா, தியானம், உடற்பயிற்சிகள் என வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்து கொள்வதும் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.