

புத்தகப் பையின் எடையையும் மதிப்பெண் அழுத்தத்தையும் குறைத்து, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வை வழங்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது அதன் கையில் இருப்பது புத்தகப்பை மட்டுமல்ல, பெற்றோரின் எதிர்பார்ப்புகளும், ஆசிரியரின் பணிகளும், மதிப்பெண் குறித்த அச்சமும் சேர்ந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத சுமையும் கூட! கல்வி குழந்தையின் அறிவை வளர்க்க வேண்டுமே தவிர, அதன் மகிழ்ச்சியைப் பறிக்கக் கூடாது. எனவே, “எவ்வளவு படிக்கிறான்?” என்பதைவிட, “எப்படி தெளிவாக புரிந்து உள் வாங்குகிறான்?” என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலம் இது.
1. குழந்தையின் புத்தகப்பை ஏன் இவ்வளவு கனமாக இருக்க வேண்டும்?
ஒரு நாளுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மட்டுமே பையில் இருக்கும்படி திட்டமிடலாம். தேவையற்ற புத்தகங்களின் எடையைக் குறைப்பது குழந்தையின் உடல் சிரமத்தை குறைக்கும். அதே சமயம் பள்ளிக்குச் செல்லும் மகிழ்வைக் கூட்டும்.
2. வீட்டுப்பாடம் அதிகமானால் கற்றல் சிறக்குமா?
வீட்டுப்பாடத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அறிவு அதே அளவில் அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. குறைவான பணியாக இருந்தாலும், அதை குழந்தை புரிந்து சுயமாகச் செய்யவும் செய்த பாடத்தின் சாரத்தை மனதில் நிறுத்திக் கொள்ளவும் வாய்ப்பு கொடுப்பதே சிறந்த பயிற்சி.
3. சில பயிற்சிகளை வகுப்பிலேயே செய்து முடிக்க முடியாதா?
ஆசிரியரின் நேரடி வழிகாட்டுதலுடன் வகுப்பறையிலேயே சில எழுத்துப் பயிற்சிகளையும் பாடப்பயிற்சிகளையும் முடிக்கச் செய்தால், குழந்தையின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீரும். வீட்டில் மீண்டும் அதே பணியைச் செய்வதற்கான சுமையும் குறையும்.
4. எல்லா நாளும் புத்தகங்களுக்கே நேரம் ஒதுக்க வேண்டுமா?
வாசிப்புடன் விளையாட்டு, கலை, இசை, கைவினை, இயற்கை சார்ந்த செயல்பாடுகள் போன்றவற்றுக்கும் நேரம் தேவை. குழந்தையின் திறமை பாடப் புத்தகங்களில் மட்டுமே மறைந்திருப்பதில்லை.
5. வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப்பை இல்லா நாளாக’ இருக்கலாமே?
அந்த நாளை செயல்முறை கற்றலுக்காகப் பயன்படுத்தலாம். சுற்றுப்புறத்தை கவனித்தல், அறிவியல் செய்முறை பயிற்சி, தோட்டப்பணி அல்லது குழு செயல்பாடுகள் போன்றவை குழந்தைக்கு வேறுவிதமான கற்றல் அனுபவத்தைத் தரும்.
6. மதிப்பெண் மட்டுமே குழந்தையின் திறமையை அளக்குமா?
நன்றாக மனப்பாடம் செய்வது மட்டுமே அறிவின் அடையாளமல்ல. கேள்வி கேட்பது, காரணம் கண்டுபிடிப்பது, புதிய யோசனைகள் சொல்வது, பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போன்ற திறன்களையும் பாராட்ட வேண்டும்.
7. படிப்புடன் உடல்நலத்திற்கும் நேரம் கிடைக்கிறதா?
போதுமான ஓய்வு, விளையாட்டு, சத்தான உணவு, தூய்மையான குடிநீர் ஆகியவை குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை. உடலும் மனமும் சோர்வடையும் வரை படிக்கச் சொல்வதைவிட, புத்துணர்ச்சியுடன் தகுந்த இடைவேளைகளுடன் கற்கும் சூழலை உருவாக்குவது அவசியம்.
8. குழந்தை படிப்பை விரும்பச் செய்வது எப்படி?
“எத்தனை மதிப்பெண்?” என்று கேட்பதற்கு முன், “இன்று என்ன புதிதாகக் கற்றாய்?” என்று கேட்போம். பயத்தால் படிக்கும் குழந்தை தேர்வு மதிப்பெண்களுக்காக மட்டும் கற்கும். ஆர்வத்தால் கற்கும் குழந்தை வாழ்க்கைக்காகக் கற்றுக்கொள்ளும்.
குழந்தைகளின் முதுகிலுள்ள புத்தகச் சுமையை மட்டும் குறைப்பது போதாது. அவர்களின் மனதில் இருக்கும் படிப்புச் சுமையையும் குறைக்க வேண்டும். கல்வி என்பது குழந்தையை மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாற்றுவது அல்ல, அறிவும், ஆர்வமும், உடல்நலமும், நல்ல பண்புகளும் கொண்ட சிறந்த மனிதராக வளர்ப்பதே அதன் உண்மையான நோக்கம்!