பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்திற்கு காரணமான மிராபல் சகோதரிகள்... யார் அவர்கள், அவர்களின் பின்னணி என்ன?...
பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா. நவம்பர் 25 ம் தேதியை சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது ஐ.நா.சபை.
1981 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 25 ஆம் தேதியை பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான நாளாக மகளிர் உரிமை ஆர்வலர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். டொமினிகன் குடியரசின் மூன்று அரசியல் ஆர்வலர்களான மிராபல் சகோதரிகளை கௌரவிக்கும் வகையில் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. யார் அந்த மிராபல் சகோதரிகள், பார்ப்போம்...
மிராபலின் குடும்பம் டொமினிகன் நாட்டின் சிபாலோ பகுதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர விவசாயக் குடும்பமாகும். என்ரிக் மிராபல் ஃபெர்னான்டஸ் குடும்பத்தலைவர், மெர்சிடைஸ் ரெய்ஸ் கமிலோ தலைவியாவார். அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள். அவர்கள் தான் மிராபல் சகோதரிகள். அவர்கள் பாட்ரியா, மினெர்வா, மரியா தெரசா மற்றும் டெடே என்று அழைக்கப்பட்டனர், 'டெடே மிராபல் ரேய்ஸ்' மட்டும் மற்ற சகோதரிகளைப் போல கல்வி கற்காமல், வீட்டு வேலைகள் செய்தும், பண்ணை வேலை, விவசாய வேலைகள் செய்தும் தமது குடும்பத்தை நடத்த உதவி வந்தார்.
ரஃபேல் ட்ருஜில்லோ டொமினிகன் குடியரசை 31 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு டொமினிகன் சர்வாதிகாரி ஆவார். அவரது 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காலம் லத்தீன், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு இரத்தக்களரியான சகாப்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ட்ருஜில்லோவும் அவரது ஆட்சியும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தன. இந்த படுகொலையில் 5,000 முதல் 67,000 வரை ஹைட்டியர்கள் இருந்தனர்.
ரஃபேல் ட்ருஜில்லோவின் ஆட்சிக் காலத்தில் நடந்த கொடூரமான மற்றும் திட்டமிட்ட வன்முறையை மூன்று மிராபல் சகோதரிகளும் தீவிரமாக எதிர்த்தனர். ட்ருஜில்லோவின் செயல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில், மிராபல் சகோதரிகள் துண்டுப் பிரசுரங்களை தயாரித்து விநியோகித்தனர். அதில் அவர் கொன்ற நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அவரது ஆட்சியை சவால் செய்ய ஒரு தலைமறைவு இயக்கத்தை நடத்தினர். ட்ருஜிலோ பெரும்பாலும் அவருக்கு எதிரான இளம் பெண்களைக் கண்டுபிடித்து தொல்லை தர ஆட்களை வேலைக்கு அமர்த்துவார். மிராபல் சகோதரிகள் அனைவரும் ரஃபேல் ட்ருஜில்லோவிடமிருந்து அச்சுறுத்தல்களை அனுபவித்தனர்.
அவர் பெரும்பாலும் மக்களைக் கைது செய்து துன்புறுத்தும்படி கட்டளையிடுவார். அவருக்குத் தடையாக நின்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.
1960 நவம்பர் 25 ஆம் தேதி , ரஃபேல் ட்ருஜில்லோ அனுப்பிய நபர்களால் பாட்ரியா, மினெர்வா மற்றும் மரியா தெரசா ஆகியோர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் சகோதரிகளுக்குச் சொந்தமான ஜீப்பில் வைக்கப்பட்டு, அது ஒரு விபத்து போல 'செட்டப்' செய்யப்பட்டது. மூன்று மிராபல் சகோதரிகளின் கொலை பொதுமக்களிடையே சீற்றத்தைத் தூண்டியது. இது 6 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் கூட்டாளிகளால் ரஃபேல் ட்ருஜிலோ படுகொலை செய்யப்படுவதற்கு ஓரளவு வழிவகுத்தது.
அரசியலில் ஈடுபட்டதற்காக மூன்று சகோதரிகள் 1960 ம் ஆண்டு கொல்லப்பட்டதை கண்டித்து அவர்களை நினைவு கூறும் வகையில் 1981 ம் ஆண்டு நவம்பர் 25 ம் தேதியை பெண்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்பு நாளாக, பெண்கள் உரிமைக்காக போராடிய லத்தீன் அமெரிக்க வக்கீல்கள் அறிவித்தனர். அதை ஐ.நாடுகளின் பொது சபை 1999 ம் ஆண்டு அங்கீகரித்தது. அது முதல் இந்நாள் உலகெங்கும் போராளிகள் பொதுக் கூட்டங்கள் நடத்தி பெண் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
டொமினிகன் குடியரசு 2007 ஆம் ஆண்டில் '200 பெசோஸ் ' ரூபாய் நோட்டுகளை வெளியிடப்பட்டது. ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் குடியரசு மத்திய வங்கியின் முத்திரையுடன் மிராபல் சகோதரிகள், மிராபல் சகோதரிகளைக் செல்லமாக குறிக்கும் ஒரு பட்டாம்பூச்சி மற்றும் மஹோகனி மரத்தின் பூக்கள் சித்தரிக்கப்பட்டு மிராபல் சகோதரிகளுக்கு மரியாதை செய்தது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் அவர்கள் இன்றும் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டு தான் உள்ளனர். இன்றைய சூழலில் விபத்து மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் பெண்களை விட, வீட்டு பிரச்சினைகள் மற்றும் பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் பெண்களே அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.