

ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருடாவருடம் மே முதல் வாரத்தில் நாய் கண்காட்சி நடைபெறும். பலபல விதமான நாய்கள் பங்கு பெறும். புல் டாக், ஜெர்மன் ஷெஃபர்ட், பாமரின் என்று வகை வகையான நாய்களும் பங்கு பெறும்.
இரண்டு நாள் கண்காட்சிதான்...
முதல் நாளில் எல்லா நாய்களும் அறிமுகம் செய்து வைப்பார் அதன் உரிமையாளர். இரண்டாவது நாள் மதியம் 3 மணி வரை போட்டி நடக்கும். 4 மணிக்கு பரிசு வழங்கப்படும்.
எந்த நாய் சிறப்பாக தனது உரிமையாளரின் கட்டளைகளைக் கேட்டு சரியாக செய்கிறதோ அந்த நாய் வெற்றி பெறும். முதல் இடத்திற்குக் கடும்போட்டி இருக்கும்.
முதல் நாள்… நாய்கள் ஷாமியானா பந்தல் போட்ட பகுதியில் ஓடி ஆடி விளையாடும். நாய்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஷாமியானா பந்தல் போட்ட பகுதியில் பார்வையாளர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும். நல்ல கூட்டம் இருக்கும். 2 வது நாள் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும். காலை 9 மணிக்கு போட்டி ஆரம்பித்துவிடும்.
“யேய் மைக்கல்…! ‘ரன்’…!“ என்று சொன்னால் நாய் மைக்கேல் (நாய் பெயர்) புல் வெளியில் சுற்றிச்சுற்றி ஓடிவரும். பார்க்க அழகாக இருக்கும். “ஸ்டாப்… கம் இயர்..!” என்று உரிமையாளர் சொன்னதும் மைக்கேல் உரிமையாளர் பக்கம் போய் நின்று வாலை ஆட்டும்.
இந்தச் சுற்று போட்டி எல்லா நாய்களுக்கும் இருக்கும்.
அடுத்து உரிமையாளர் ஒரு பந்தை புல்வெளியில் வீசுவார்.
“கோ., கெட் தி பால்…!“ என்று சொன்னதும் நாய் ஓடிப்போய் தம் வாயில் கவ்விக்கொண்டு உரிமையாளர் பக்கம் வந்து அவரிடம் பந்தைக் கொடுக்கும். இந்த நாயின் பெயர் எலிசபெத்.
பிறகு இந்தப் போட்டி எல்லா நாய்களுக்கும் நடக்கும்.
3 வது ரவுண்ட்…
ஒரு இரும்பு வளையம் துணியினால் சுற்றப்பட்டு நெருப்பு வைப்பார்கள். இப்போது உரிமையாளர்கள் “ஜம்ப்” என்று சொல்வார்கள். வரிசையாக நாய்கள் நெருப்பு வளையத்தை ஒரே தாவு தாவும். மைதானத்தில் கரவோலி விண்ணைத் தொடும். சுமார் 45 நாய்கள் இறுதி சுற்றுக்கு முன்னேற, மைக்கேல் மற்றும் எலிசபெத்திற்கும்தான் கடும் போட்டி.
கடைசி போட்டி.
உரிமையாளர் தனது கைக்குட்டையைக் கூட்டத்தில் உள்ள யாரிடமாவது நாய்க்கு தெரியாமல் கொடுத்துவிடுவார்கள். நாய்கள் மோப்பம் பிடித்து சரியான நபரிடம் சென்று குரைக்கும். அப்போது அவர் கைக்குட்டையை நாயிடம் கொடுத்துவிட வேண்டும். அதை பெற்றுக்கொண்டு தனது உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும்.
உரிமையாளர் கூட்டத்தில் எங்காவது உட்கார்ந்து இருப்பார். நாய்கள் மோப்பம் பிடித்து உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் கொடுக்க வேண்டும்.
போட்டிகள் முடிந்தன. மைக்கேல் மற்றும் எலிசபெத்தான் முதல் இடத்திற்கு போட்டி போட்டன. கடைசியில் நீதிபதிகள் இரண்டிற்கும் முதல் பரிசு கொடுத்தார்கள். கண்காட்சி முடிந்தது. விழா முடிந்தது.
இப்போது நாய்கள் விற்பனை செய்யப்படும். மைக்கேல் மற்றும் எலிசபெத் இரண்டிற்கும் ₹2 லட்சம் விலை. மேலும், பல்வேறு நாய்கள் புத்திசாலித்தனம் பெற்று இருந்தன. ₹ 25,000 முதல் ₹50,000 வரை அவை விற்பனை ஆகின.
நீங்கள் நாய் கண்காட்சி காண வேண்டும் என்றால் மே மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊட்டிக்குச் சென்று விடுங்கள்.
மலைகளின் இளவரசி உதகை உங்களை வரவேற்கிறது!